தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
சபரிமலையில் தரிசன வரிசை மாற்றம் !! விகடகவி கட்டுரையின் தாக்கம் - பால்கி

20250221224139857.jpg

[மார்ச் 14 ஆம் தேதி செய்தி]

மார்ச் 14, 2025 அன்று முதல் சபரிமலை சந்நிதானத்தில்புதிய தரிசன ஏற்பாடு பற்றிய வீடியோ இதோ கீழே

ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடி தாங்கி 18 படியேறி வரும் ஐயப்ப பக்தர்கள் கொடிமரம் கடந்து திருமுற்றம் வழியாக இரு அணிகளில் செல்ல விடும் ஏற்பாடு இந்த வீடியோவில் காணலாம்.

இந்த ஏற்பாடு இந்த மீனம்/பங்குனி மாசம் பூஜையின் போது உபயோகத்திற்கு வந்தது. மாதாமாதம் தவறாது சபரிமலை சென்று வரும் எனது எண்பது வயது கோபாலகிருஷ்ணன் குருஸ்வாமி தரிசனம் நன்றாக இருந்தது என்று உறுதிப்படுத்தினார்.

இந்த புதிய யுக்தியின் மூலம் பாலத்தில் தேக்கமடையும் பக்தர்களின் கூட்டம், முதியோர், பெண்கள், குழந்தைகள் படும் அவதி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி.

வரிசை செல்லச்செல்ல, நகர நகர, கருவறையில் வீற்றிருக்கும் சாஸ்தாவை, லைனில் நிற்க ஆரம்பித்தவுடனே கண்டிப்பாக ஒரு அரை நிமிட நேரமாவது ஐய்யனைக் காணும் பாக்கியம் கிடைக்கும் என்பது.

விகடகவியின் தாக்கம் என்ன ??

சென்ற வருடம் 2024 ஜனவரியில் எனது மகரஜோதி புண்ய யாத்திரையின் போது கண்டு வெதும்பிய அவலநிலைகளை சக ஐயப்ப பக்தர்களிடமிருந்து கேட்டறிந்த அவல நிலைகளையும், எனது கட்டுரையாக, தொடரும் அவல நிலை ! சொல்ல முடியாத சிரமங்கள் !! -சபரி மலையிலிருந்து நேரடி ரிப்போர்ட் பால்கி என்று 27/1/2024 அன்றைய இதழில் வெளிவந்தது.

https://www.vikatakavi.in/magazines/354/12441/Continuing-difficulties-in-sabarimalai-a-on-the-spot-report.php

அதில் சுமார் 24 முறையீடு பாயிண்டுகளும் அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்ற பரிந்துரைகளையும் கொடுத்திருந்தேன். அதில் இந்த புதிய வரிசை முறை பற்றி பரிந்துரை செய்திருந்தேன்.

அதில் மிக முக்கியமானது இவ்வனைத்தையும், District Legal services Authority, Pathanamthitta என்ற அமைப்பின் கீழ் Para Legal Volunteerஆக அப்போது பணிபுரிந்து வந்த C K Sudharmmanஇடம் சென்று சேர்த்தது தான்.

அவர் அப்போது தான் தனது அந்த மாதத்திற்கான பணிக்காலம் முடிந்து தனது இருப்பிடம், மும்பைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அதே ட்ரெயினில்தான் நாங்களும் மும்பய்க்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். சபரிமலை யாத்திரை பற்றியும் கஷ்டங்களையும் எங்கள் குழுவினருக்குள் காரசாரமாக அலசிக்கொண்டிருக்கையில் எதிரில் அமர்ந்து கொண்டிருந்த சுதர்ம்மன் மிகவும் உன்னிப்பாகவும், குறுக்கு விசாரிப்புகளையும் செய்தவாறு இருந்தார். கிட்டத்தட்ட ஆறேழு மணிநேரம் விவாதித்திருப்போம். ஒவ்வொரு பாயிண்டையும் அவருடன் நான் சொல்லிக்கொண்டிருந்தேன்.

மறு நாள் தான் சபரிமலையில் ஐயப்பமார்களிடையே கலந்து அவர்களது முறையீடுகள் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்ட், கோயில் நிர்வாகம் மற்றும் போலீஸிடம் பகிர்ந்து அதற்கான தீர்வுகளை பெற்றுத்தரும் கண்காணிப்பு படையின் உறுப்பினர் என்ற தனது அடையாளத்தை (identity card) பகிர்ந்து கொண்டார்.

நான் குறித்து வைத்திருந்த பாயிண்டுகளையும் அவரது வாட்ஸப்பில் அனுப்பவும் சொன்னார். அதன்படி அனுப்பியிருந்தேன்.

அடுத்த மாத (பிப்ரவரி 2024) பூஜை சமயத்தில் தான் இந்த கண்காணிப்பு பணிக்காக செல்கையில் நிச்சயம் தகுந்த அதிகாரிகளிடம் இந்த முறையீடுகள்+பரிந்துரைகளை சேர்ப்பித்து ஆவன செய்ய முயல்வதாகவும் வாக்களித்தார்.

சுதர்ம்மனிடம் இந்த புதிய தரிசன முறை அமலுக்கு வந்தது பற்றியும் அவரிடம் சென்ற 2024 ஜனவரியில் இது பற்றி அளித்திருந்த முறையீடுகள்-பரிந்துரைகள் பற்றியும் குறிப்பிட அதை ஆமோதித்தவாறே, சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மற்ற ஏற்பாடுகளுக்கும் ஆவன செய்ய முயலுகிறார்கள்.
அடுத்த மண்டல காலத்தில் அது பற்றி தெரிய வரும் என்று எனக்கு செய்தி அனுப்பியிருந்தார்.

ஆக விகடகவியை தேடிப் படித்து இந்த மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்றாலும், விகடகவியே நேரடியாக செய்த பரிந்துரைகளை ஏற்று இப்படி ஒரு குழுவில் கலந்தாலோசித்து பக்தர்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்பட்டது எனில், ஐயன் ஏற்பாடு செய்த இரயில் பயணம் அது.

விகடகவியும் ஒரு கருவியாக, இருந்திருக்கக் கூடும் என்ற வகையில்........

சுவாமியே சரணம் அய்யப்பா.