இந்தியாவில் மட்டும் அதிகளவில் பால் உற்பத்திக்காக, நாம் வெளிநாட்டு ரக மாடுகளை நாடிச் செல்கிறோம். எனினும், பிரேசில் உள்பட பல்வேறு வெளிநாட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் நாட்டு இன பசுமாடுகளை வாங்குவதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக, பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராஸ் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஏலத்தில், ‘Viatina-19’ என்று பெயரிடப்பட்ட ஆந்திராவின் ஒரு நாட்டுப் பசுமாடு 4.9 மில்லியன் டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ₹40 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டு, ‘உலகிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட கால்நடை’ என்ற கின்னஸ் சாதனை படைத்து, நம் அனைவரின் கண்களையும் ஆச்சரியத்தில் புருவத்தை உயரவைக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், சித்தூர் நாட்டு இன பசுக்கள் வழக்கமாக சுமார் 400 முதல் 500 கிலோ எடை கொண்டிருக்கும். எனினும், இந்த Viatina-19 பசுமாடு சுமார் 1,101 கிலோ எடையுடன் உள்ளது. அதாவது, நெல்லூர் இன நாட்டு பசுமாடுகளைவிட இது சராசரியாக 2 மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கிறது. அழகிய வெள்ளை ரோமங்களுடன், பளபளக்கும் தோல் கொண்ட இந்த நெல்லூர் நாட்டு இன பசுமாட்டுக்கு 4.5 வயசுதான்!
கோடிகளில் விலைபோன நாட்டு இன பசுமாடு என்ற சாதனை மட்டுமின்றி, பசுக்களுக்கான ‘மிஸ் சௌத் அமெரிக்கா’ அழகி போட்டியிலும் பட்டம் வென்றுள்ளது எனக் குறிப்பிடத்தக்கது. இதற்கு, இந்த நாட்டு இன் பசுமாட்டின் அட்டகாசமான தசை அமைப்பும் அரிய மரபணு வரிசையும் அதன் வெற்றிக்குப் பிரதான காரணமாக உள்ளது.
“பொதுவாக, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் இன நாட்டு பசுமாடுகள் அதிக வெப்ப நிலையிலும் எளிதாக வளரும். மேலும், நெல்லூர் இன பசுமாடுகளுக்கு அதிகளவில் நோய் எதிர்ப்பு திறன் உள்ளது. இதன் காரணமாக, ஆந்திர நாட்டு இன பசுமாடுகளை அனைத்து வெளிநாட்டினரும் கோடிகளில் விலை கொடுத்து வாங்கி வளர்க்க விரும்புகின்றனர். இதனால் பிரேசில் உள்பட பல்வேறு வெளிநாடுகளில், ஆந்திராவின் நாட்டு இன பசுமாட்டுக்கு எப்போதுமே மவுசுதான்!” என்று ஓக்லஹோமா ஸ்டேட் பல்கலைக்கழகம் ஆய்வு தகவலில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அர்ஜென்டினா, பராகுவே, வெனிசுலா, மத்திய அமெரிக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஆந்திராவின் நாட்டு இன பசுமாடுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரேசில் நாட்டில் வளர்க்கப்படும் பசுக்களில் குறைந்தது 80 சதவிகிதம், இந்தியாவின் ‘ஜெபு’ எனும் ஆந்திராவின் நெல்லூர் சித்தூர் ஓங்கோல் பகுதி நாட்டு இன Viatina-19 பசுமாடுகளின் மூதாதையர்,
கடந்த 18-ம் நூற்றாண்டில் பிரேசில் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து பிரேசில் நாட்டு பிரபல கால்நடை மருத்துவர் லாரனி மார்டின்ஸ் கூறுகையில், "வயட்டினா -19 போல் இன்னொரு பசுவைப் பார்ப்பது அரிது. அனைத்து குணாதிசயங்களையும் ஒருங்கே அமையப் பெற்ற ஆந்திராவின் நாட்டு இன பசுமாடுகளுக்கு கிராக்கி அதிகம்!” என்கிறார் கூலாக.
Leave a comment
Upload