தொடர்கள்
பொது
வாட்ஸப்போ வாட்ஸப்பு! - மோகன் ஜி

20250121213820148.jpg

ரேவதி சங்கரன் மேடம் பாடுற ‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டாரு’ வீடியோ ஆயிரத்து நாலாம் முறையாக எனக்கு இப்போது வாட்ஸப்பில் வந்தது.

வாட்ஸப்பில் பலரும் பழையனவற்றை அன்றாடம் புதிதாகக் கற்றபடி இருக்கிறார்கள். தான் பெற்ற இன்பத்தை பிறருக்கும் அளிக்க உத்வேகத்துடன் மடைமாற்றி விடுகிறார்கள்.

‘குட் மார்னிங்’ செய்திகள் பலவாறாகமாலைவரை பகிரப்படுகின்றன. பூவோடும் கனியோடும் கன்னியோடும் மேகத்தோடும் மேற்கோள்களுடனும் அவை வந்தவண்ணம் இருக்கின்றன.

நாள்தோறும் நூற்றுக்கணக்காய் ஷீரடி பாபா ‘பதினோரு பேரோடு பகிர்ந்தால் நல்ல சேதி வரும்’ (இல்லைன்னா ரத்தம் கக்கிச் செத்துறுவடா!) என்கின்றன.

சன்னிதானத்திற்குள் சுவாமியை ரகசியமாய்ப் படம் எடுத்த பதிவுகள்.

உடனடி மருத்துவ நிவாரணம், மோடி, குறள், சங்கீதம், திரையிசை,

தான் எழுதிய கவிதைகள், தீவிர அரசியல் நிலைப்பாடுகள், நகைச்சுவைச் சரடுகள் என ஓயாத அலைகள் நேரத்தை மோதி நிர்மூலமாக்குகின்றன.

வாட்சப் திடீர் டாக்டர்களின் அலப்பறை இருக்கிறதே…. ‘உமிக்கரியை எடுத்து எருமை நெய்யில் பச்சைக் கல்பூரம், பிரண்டை சேர்த்தரைத்து உள்நாக்கில் தடவ…’ அட ஈஸ்வரா!

பலவிதக் குழுக்களாக இயங்கும் வசதி சிலநேரம் சௌகரியம்; பலநேரம் தொல்லை.

குடும்பக் குழுக்கள் தனிவகை.

புருஷன் ஃபேமிலி;

பொண்டாட்டி ஃபேமிலி;

மாப்பிள்ளைகள் ஆஃப் இண்டியா;

ஒன்லி ஓரகத்தீஸ்;

சம்பந்திகள் சம்மேளனம்….

இவற்றில் பகிரப்படும் செய்திகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும்.. மிஷின் கன் சுடுவதுபோல சடசடவென ஃபார்வார்ட் பகிர்தல் நடக்கும்.

அந்நாளைய பள்ளி, கல்லூரி நட்புக் குழுக்களும் வேறு தாளகதியில் இயங்குபவை.

இவற்றில் பழைய நினைவுகள், புதுப்பிக்கப்பட்ட நட்புகள் என்று எமோஷனலான சமாச்சாரங்கள் உண்டு. இவைகளில் பலவற்றில் ஆரம்ப சூரத்தனம் தாண்டி, நாலைந்து நபர்களே மாங்குமாங்கென்று இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆன்மீக குரூப்புகளும் சக்கைபோடு போடுகின்றன. அதிலேயே அந்தந்த உம்மாச்சிகளுக்கு தனித்தனி குரூப். அகஸ்தியரே அட்மினாக இருக்கிற குழுவொன்றில் அடியேன் மெம்பராக்கும்!

இலக்கிய குழுக்கள் தனிரகம். படைப்பாளிகளும் வாசகர்களும் ஒன்றுகூடி இலக்கியம் வளர்க்க முயல்பவை.

நாளாவட்டத்தில் வாசகர்கள் விலகி படைப்பாளிகள் தத்தம் படைப்புகளைத் தான்மட்டுமே படிக்கும் களன்களாய் மாறிப் போகின்றன. அவ்வப்போது கோபதாபங்கள் வேறு!

எல்லோருக்கும் நேரவிரயம் எனத் தெரிகிறது. ஆனால் ஏன் இதிலிருந்து வெளிவரக்கூட யோசிக்க மாட்டேனென்கிறோம்?

இன்று அலுவலக பரிமாற்றத் தொடர்புகளும், வியாபார செயல்பாடுகளும் வாட்சப்பிலே தான் நிகழ்கின்றன.

தொடர்பு கொள்ளவும் தகவல் பரிமாற்றத்துக்கும் ஒரு நல்ல சாதனம் வாட்ஸப் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதிலேயே பெரும்பாலானவர்கள் குடியிருக்கிறார்கள்.

ஒருவேளைக்கேனும் வாட்ஸப் பார்க்கமுடியாது போய்விட்டால், தாய்ப்பால் குடியை மறக்கமுடியாத பிள்ளைகள்போல ஆகிவிடுவோம் என்பதே நிதர்சனம்.

இது மனோவியாதிக்கான அடர்த்தி உள்ள மாயை.

நல்ல தகவல்களும் வரத்தான் செய்கின்றன. ஆனால் அந்தத் தகவல் ஊசியைத் தேட, ஒரு வைக்கோல் போரையே சலிக்க வேண்டும்!

அவசியமற்ற குழுக்களிலிருந்து வெளியேறுவதும், ஃபார்வர்ட் செய்யும் இச்சையைத் தவிர்ப்பதும் முதல்படி.

இதில் சேமிக்கும் நேரத்தில் குழந்தைகளோடு விளையாடலாம்; புத்தகம் படிக்கலாம்;

தியானம் பண்ணலாம்; கணவனோடு செல்லமாக சண்டைப்போடலாம்; மனைவியோடு செல்லுபடியாகாத விவாதம் பண்ணலாம்.

மெஸேஜுக்கு எட்டணா;

படத்துக்கு ஒரு ரூபா;

வாய்ஸ் மெசேஜுக்கு இரண்டு ரூபா;

விடியோ கிளிப்பிங்குக்கு ஞ்சு ரூபா;

குட் மார்னிங்குக்கு பத்து ரூபான்னு

வாட்ஸப்காரன் சார்ஜ் போட்டா போதும்.

பொழுது தன்னால விடியும்னு தோணுது!

இருங்க! இன்னைய கிளாசுக்கு நான் வரல்லேன்னு ஜிம் ட்ரெய்னர் மகேஷுக்கு வாட்ஸப் மெஸேஜ் அனுப்பிவிட்டு மீதியை வந்து பேசுகிறேன்

என்ன நீங்களுமா? அட அத ஏன் கேக்குறீங்க?