அந்த இல்லத்தின் வாசலில் அமர்ந்திருக்கிறாள் ஒரு தாய்..
தெருவில் அயல் வீட்டுச் சிறுமிகள் ஒன்று கூடி விளையாடி சிரித்து மகிழும் ஆரவாரம் கேட்கிறது.
பாட்டும், நடனமும் , கூத்தும் கும்மாளமுமாக இளம் பெண்கள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதைப் பார்க்க பார்க்க அவள் நெஞ்சு விம்மி தணிகிறது. கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, அந்த தாயின் முகம் கலங்கி சிவக்கிறது
அங்கிருக்கும் திண்ணையும் , அருகில் படர்ந்திருக்கும் நொச்சி மரமும் அவளை மேலும் துன்பத்துக்குள்ளாகிறது.
அவளது முகக்குறிப்பைக் கண்ட அண்டை வீட்டுப் பெண்கள் அருகில் வந்து 'என் இத்தனை கலக்கம், உன் துன்பத்தைத் தாங்கிக் கொள் என்று தேற்றுகிறார்கள்.
அதற்கு அவள் " எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவள் கணவனுடன் சென்று விட்டாள். இந்தப் பெண்களின் விளையாட்டும் சிரிப்புச் சத்தமும் எனக்கு அவளை நினைவுபடுத்தி விட்டன " என்றாள்.
அந்த சங்கத் தாய் கூறுகிறாள்
"அறிவில் சிறந்த என் அண்டை வீட்டோரே !
நான் உங்களைப் போல பல புதல்வியரைப் பெற்றவள் அல்லள்.
ஒரே ஒரு மகளைப் பெற்றவள்..
வில்லேந்தி போரிடும் ஒரு கட்டான காளையுடன் மணம் முடித்து அவள் சென்று விட்டாள்.அகன்ற பெருமலை உடைய காட்டு வழியே அவள் ,அவனுடன் சென்று விட்டாள்.
அவளுடன் நான் மகிழ்ந்திருந்த காலம் இனி வரப்போவதில்லை.
'இந்த துன்பத்தைத் தாங்கிக் கொள்; என்று நீங்கள் ஆறுதல் சொல்கிறீர்கள்.
என்னால் அது எப்படி முடியும்? எனக்கு அப்பிரிவுத் துயரை அடக்கிக் கொள்ளும் சக்தி இல்லை.
என் கண்ணின் பாவை பெண்ணுரு எடுத்து வந்து நடமாடியது போன்று அழகிய சாயல் கொண்டவள் என் மகள்.
நீலமணியை ஒத்த பூக்களைப் பூக்கும் இந்த நொச்சி மரத்தடியில் தான் அவள் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இதோ ,இந்த நீண்ட திண்ணையில்தான் அவள் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இவற்றைப் பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு என்னை வாட்டி எடுக்கிறது. நான் என்ன செய்வேன் சொல்லுங்கள் " என்று தன் இயலாமையைக் கூறுகிறாள் .
பிரிவின் அவலம் கூறும் பாலைத் திணைக்குரிய பாடல் இது.
ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே
(நற்றிணை 184)
ஒரு அன்புத்தாயின் அழுகையைப் பதிவு செய்த அந்நாள் புலவர் யார் என்று தெரியவில்லை.
"என் கண்ணின் பாவையன்றோ/' என்ற பாரதிக்கு முன்னமே , மகளை கண்ணின் மணியாக்கி உருவகிக்கும் கவிதை இது .
மேலும் ஒரு நல்ல பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம் .
தொடரும்
Leave a comment
Upload