சதீஷ்... என்ன பழக்கம் இது? நீ சாப்பிட்ட தட்டைக்கூட கழுவி வைக்கறதில்லே, சிங்கிலே தூக்கிப் போட்டுவிட்டு போயிடறே ?என்ற சாருவிடம், மொபைலில் மூழ்கிபடியே, உன் வேலைதானே அது! ஏன் நீ என்ன பண்றே ? செய், என்று எதிர் குரல் வந்தது.
இதுநாள் வரை உன்னைச் சொன்னேனா? கல்யாணமாகி இந்த ஆறுமாசத்திலே,
இல்லை..
அதென்ன என் வேலை, நம்ம வீட்டு வேலைனு, ஈரத்துண்டை கட்டில்லே போடறது,ஆடைகளை அவிழ்த்து அப்படியே துவைக்கப் போடறது நாங்களும் மனுசங்கதானே, கொஞ்சங் கூட பொறுப்பில்லாமல் என்று வாதிட்டாள்.. சாருலதா.
அதான் இப்ப மட்டுமென்னா ? இந்த வீட்டு வேலையெல்லாம்... என் தலையிலே கட்றதை விடு,முடிந்தால் செய், இல்லைனா போ என்ற பதிலுக்கு கத்தினான்.
இப்போ நான் சொன்னதெல்லாம் வீட்டு வேலையா ? இப்படி புரிந்துக்கொள்ளாமல் கடுப்பேத்துகிற மாதிரி பேசினால் நான் அம்மா வீட்டிற்குப் போயிடுவேன் என்றாள் சாரு கோபமாக.
போனால் ? என்ன பயங்காட்றீயா, எனக்கெல்லாம் போக வீடிருக்கு, ஆளுங்க இருக்காங்க போ..போ என அலட்சியமாக பேசவும்,
விருக்கென்று தோள் பையை எடுத்தவள், வெளியேறி தனது ஆக்டிவா வண்டியில் பறந்துவிட்டாள் சாரு.
அருகிலேதான் சதீஷின் அக்கா வீடு, சாரு திரும்ப வீட்டிற்கு வந்தால் வாசலிலே நிற்கட்டும் என்ற நினைப்பில் வீட்டைப் பூட்டிகிட்டு கிளம்பி விட்டான் அக்காவின் வீட்டிற்கு.
சதீஷ்.. வாடா..என்று அன்பாக உள்ளே அழைத்துப் போனாள் அக்கா கையில் குழந்தையோடு.
வா வா , என்னடா மச்சான் பாத்திரம் கழுவறேன்னு பார்க்குறீயா ? நம்ம வீடுதானே, நாம செய்யாமல் ? என கேட்டுவிட்டு டீ போடவா என்று கேட்டார் மாப்பிள்ளை.
வேண்டாம் என்றவனிடம் ஏய் உன் அக்காவை விட நல்லவே போடுவேண்டா என்றார்.
என்னக்கா இது ? அவரு டீம் லீடர் அவரைப்போய் இப்படி வீட்டு வேலையெல்லாம் செய்யச்சொல்றே ? என்ற தம்பியிடம்,
உனக்குதான் டீம் லீடர், எனக்கில்லடா என்றாள் அக்கா.
டேய் மாப்ள, உன் அக்கா சொல்றதினாலே மற்றவங்க மாதிரி நானும் பாத்திரம் தேய்க்கிறேன்னு நினைச்சுடாதே, துணிகளையெல்லாம் துவைத்து முடித்து, சமைத்து வைத்து விட்டுத்தான் இதை செய்வேன்னு சும்மா மிரட்டிவிட்டேன், யாருகிட்ட? என்றபடி கைகளைக் கழுவிக் கொண்டு சிரித்தபடி வந்தமர்ந்தார் சதிஷின் டீம் லீடரும் வீட்டு மாப்பிள்ளையுமானவர்.
"பெண்களைப் புரியாத புதிர்,ஆழ்கடல் மனசு, என்று சொல்லிச்சொல்லி புரிஞ்சுக்காமலே இருந்து விடுகிறோம்,புரிந்துக் கொண்டால் புதையல்டா மாப்ள, என்றவர் நீ எதுவும் சாருவிற்கு உதவி செய்வியா மாட்டியா ? என கேட்டார். மெளனத்தையே பதிலாக தந்து கிளம்பினான் சதிஷ்.
நண்பன் ரகுவைக் காண வந்து வாசலில் பெல் அடித்து காத்தியிருந்தான் சதிஷ்.
முகத்தில் மாஸ்க்குடனும், கையில் டாய்லெட் பிரசுடன் வந்த விவேக் கதவைத் திறந்தான்.
என்னடா இந்த நேரத்திலே வந்திருக்கே, சாயந்திரமாகத்தானே வரேன்னு சொன்னே என்றபடி உள்ளே அழைத்துப்போனான்.
உட்காரு பேப்பரை படி, இதோ டாய்லெட்டை கழுவிட்டு வந்திடறேன் என்று நகர்ந்தான்.
விவேக்கின் மனைவி கிச்சனிலிருந்தே டீ தரவா சதீஷ் ? என்றவளிடம் வேண்டாம் என்றபடி வீட்டை சுற்றிப்பார்த்தான்,
என்ன பாக்கிறே? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் நேரம் கிடைக்குது அன்னைக்கு மொத்தமா வீட்டைச்சுத்தம் செய்திடுவோம் என்றபடி சன்னல்களை துடைத்தபடி
"விவேக் துணியை எடுத்துப் போய் மாடியிலே காயப்போடு,மறக்காமல் கிளிப்பை போடு" என்றாள். இப்போதைக்கு பேச அவர்களுக்கு நேரமில்லை என்பது போலத் தோன்றியதும் அங்கியிருந்து கிளம்பிய சதீஷ் சாருவிற்கு போன் செய்துப்பார்த்தான்.
ரிங் போனது, அவள் எடுக்கவே இல்லை. மாமியாருக்குப் போன் செய்தபோது,எப்படி இருக்கீங்க, சாரு எப்படியிருக்கா ? என்கிற கேள்வியில் அவள் அங்கும் போகவில்லை எனப் புரிந்ததும் சதீஷை கவலைத் தொற்றிக்கொண்டது. அந்த பயமே அவள் கேட்டது நியாயமான கேள்விதான் எனவும்,குடும்பம் என்பதே கூடி வாழ்வதுதானே.
அதில் என்ன பாகுபாடு, நம் வீட்டைத்தான் எப்போதும் சுத்தமாகவே வைத்திருக்கிறாளே, எந்த வேலையும் நம்மிடம் சொல்வதில்லை.
புரிந்துக் கொண்டால் புதிரல்ல பெண், புதையல் என்றார்களே, நாம்தான் அவளைப்பற்றி புரிந்துக்கொள்ள முயலாமல் இருந்திருக்கின்றோம் என்றெல்லாம் யோசித்தது மனசு.
"என்ன புள்ள வளர்த்திருக்கீங்க நீங்க ? சோம்பேறியாக,
தனியாக ஒரு டிஷ் சமைக்கத் தெரியலை, எப்படி பேசனும்ணுத் தெரியலை,சம்பாதித்தால் போதுமா ? குடும்பப் பொறுப்பில்லாம மொபைலே கதினு கிடந்தால், பொறுப்பு வேண்டாமா என பொறிந்துத்தள்ளியக் குரல் அம்மாவின் குரல் போல இருக்கவே, அம்மாதான் போனில். சாருவின் அம்மாவிடம் பேசுகிறாள் என நினைத்தபடி தனது அப்பா அம்மா வசிக்கும் சொந்த வீட்டிற்குள் வந்தான் சதீஷ். ஆனால் அங்கே சாருதான் தனது அப்பா,அம்மாவிடம் இப்படி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த சதீஷ்,
என்ன அம்மா வீட்டிற்குப் போகிறன்னு சொல்லிட்டு இங்க வந்திருக்கே ? என கேட்டான் சதீஷ்.
கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்குப் போவதெல்லாம் முடிந்து விட்டது என்றவள்,
பொருள் வாங்கிய இடத்திற்குத்தானே வரணும் பிராடக்ட் கம்ப்ளையண்ட் மற்றும் சர்வீஸ் செய்ய என்றவள்,
அத்தை! வீட்டு வேலை எல்லாவற்றையும் செய்யச் சொல்வதில்லை, ஏதோ கூடமாட வேலையில் எங்கள் கூட உதவியாக இருந்தாலே போதும் என்றவள் இதனைச் சரி செய்து இரண்டு நாட்களில் அனுப்பிவிடுங்கள் என்றவளிடம்,
" புராடாக்டெல்லாம் நல்ல புராடாக்ட்தான்.. கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபிள்தான் " வா சாரு போகலாம் என அழைத்துப்போனான் சதீஷ்.
Leave a comment
Upload