சென்னையில் நிருபராக இருப்பதற்கும், மாவட்டத்தில் நிருபராக இருப்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. சென்னையில் தலைமை நிருபர் எங்கு செல்ல வேண்டும் என்பதை அன்றாடம் சொல்வார். சம்பவ இடத்திற்கு சென்று வந்து செய்தியைக் கொடுத்துவிட்டால் போதும். மறுநாள் மதியம் அலுவலகம் வரும்வரை வேலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
மாவட்ட நிருபர் பொறுப்பு அப்படியல்ல. அவன் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சுதந்திரம் உண்டு. ஆனால் அவன் செல்ல வேண்டிய இடங்களை நிர்ணயிப்பது அவனல்ல, சுற்றி நிகழும் சம்பவங்கள். அதற்கு கடிகார அட்டவணை எதுவும் கிடையாது. அதனால் மாவட்ட நிருபர் 24 மணிநேர ஊழியர். ஆனாலும் கிடைக்கும் சுதந்திரம் சிரமத்தைப் பொருட்படுத்துவதில்லை.
வசிப்பிடம் வேலை வகையையும் வேலை முறையையும் மாற்றக்கூடியது. வீடு நெய்வேலியில் இருந்ததால் என்.எல்சி. நிர்வாகம் பற்றியும், தொழிற்கூடங்கள் பற்றியும் அவ்வப்போது எழுத வேண்டியிருந்தது. நெய்வேலி நிறுவன சேர்மனை சில சமயங்களில் சந்தித்து, தகவல் பெற வேண்டியிருந்தது. அப்போதைய சேர்மன் எஸ்.யக்ஞேஸ்வரன். பனாரஸ் இந்து பல்கலைக்கழத்தில் சுரங்கத்துறை பற்றி படித்த இன்ஜினியர். கெட்டிக்காரர், சிறந்த நிர்வாகி, கடுமையான உழைப்பாளி.
அவன் நெய்வேலியில் பணியில் சேர்ந்த ஓரிரு வருடங்களில் யக்ஞேஸ்வரன் ஓய்வு பெற இருந்தார். அவரைப் பேட்டி கண்ட சந்தர்ப்பங்களில் தனக்கு சுருக்கெழுத்து தெரியாதது ஒரு சிரமம்தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். காரணம் அவர் வேகமாகப் பேசுவார், சொன்னதை திரும்ப சொல்லமாட்டார், வளவளவென்று பேசமாட்டார், ‘to the point’ என்பார்களே அப்படித்தான் அமைந்தது அவரது பேச்சு. புள்ளி விபரங்கள் விரல் நுனியில் இருக்கும். அவனுக்கு எதையும் உடனுக்குடன் கிரகித்துக் கொள்ளும் மனப்பயிற்சி இருந்ததனால், அவர் சொன்னதையெல்லாம் கேட்டு அப்படியே ரிப்போர்ட் செய்ய முடிந்தது.
ஒருநாள் சென்னை அலுவலகத்தில் இருந்து பொருளாதார புள்ளி விபரங்களை எழுதி வந்த சேஷன் என்ற மூத்த நிருபர் அவனுக்கு போன் செய்து, ‘அடுத்த குவார்ட்டருக்கு என்ன மின்சார உற்பத்தி இலக்கு?’ என்பதை உடனே சேர்மனிடம் கேட்கச் சொன்னார்.
சேர்மனை தொலைபேசியில் அழைக்கவே எல்லோரும் தயங்குவார்கள். தொழிற்கூடத்திலும் கூட இன்ஜியர்களிடம் அவர் அளவோடுதான் பேசுவார். இது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அலுவலக விஷயம் தானே என்று சேஷனுக்கு தேவைப்படும் புள்ளிவிபரங்களைக் கேட்டான்.
வேறு யாராக இருந்தாலும் ‘சற்று நேரம் கழித்து பேசு’, ‘கோப்புகளை பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’ என்பார்கள். யக்ஞேஸ்வரன் அப்படிப்பட்ட மனிதர் அல்ல. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் அலுவலக விபரங்களை துல்லியமாகச் சொல்வார். தாமதமில்லாமல் அவன் தகவல்களைப் பெற்றான். அவர் நெய்வேலி இயந்திரங்களுடன் ஒன்றாக, ஒரு பெரிய இயந்திரமாகவே இயங்கி வந்தார்.
நெய்வேலியில் அவன் வசிக்கத் தொடங்கிய பிறகு அவனுக்கு தெரிய வந்த விஷயம் யக்ஞேஸ்வரன் தூரத்து சொந்தம், தந்தைக்கு தம்பி முறை என்பது. அவரது தந்தை லால்குடி அருகே தொட்டியம் என்ற கிராமத்தில் கணக்குப்பிள்யையாக இருந்தவர்.
அவன் தந்தை நெய்வேலிக்கு வந்தபோது யக்ஞேஸ்வரனை வீட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். சுற்றி வளைத்துப் பார்த்தால், அவர் அவனது சித்தப்பா. ஆனாலும், அந்த உறவை அவர் பெரிதுபடுத்தியது இல்லை. அவனும் உறவைப் பயன்படுத்திக் கொண்டதில்லை. அவர் கம்பெனி சேர்மன், அவன் நிருபர் என்ற அளவில் தான் பழக்க வழக்கம் இருந்து வந்தது. அதுதான் இருதரப்பின் தொழில்முறை நாகரிகம்.
அவர் பணி ஓய்வுபெற்று சென்னை திரும்ப வேண்டிய தினத்தில் அவருக்கு ஒரு பிரிவு உபசார விழா நடந்தது. மக்கள் தொடர்புதுறை அவருக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியாமல், அவரது புகைப்படத்தை பெரிய மாதக் காலண்டர் அளவுக்கு என்லார்ஜ் செய்து, அழகாக பிரேம் செய்து, அவருக்கு கொடுப்பதற்கு வைத்திருந்தது. அந்த விழாவில் என்.எல்.சி. இயக்குநர்கள் அவனையும் பேசச் சொன்னார்கள். அவர்களில் ஓரிருவருக்கு மட்டும் தான் சேர்மன் அவனுக்கு சொந்தக்காரர் என்பது தெரியும். தன் பேச்சில் அவன் பரிசாகக் கொடுக்கப்பட்ட புகைப்படம் பற்றி இப்படிப் பேசினான், ‘இந்தப் புகைப்படத்தை பி.ஆர்.ஓ. என்னிடம் முன்பே காட்டினார். சேர்மனின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார். ‘அவர் தன் வாழ்க்கையில் இரண்டாம் முறையாக சிரிப்பார்’ என்றான், ‘அப்போது முதல்முறை எப்போது சிரித்திருப்பார்’ என்று கேட்டார்கள்.
அவன் சொன்னான், ‘இந்தப் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபோது’ என்று பி-ஆர்ஓவிடம் சொன்னதைக் குறிப்பிட்டான். கை தட்டினால் கூட அது சேர்மனை அவமதிப்பதாக இருக்குமோ என்று யாரும் கை தட்டவில்லை.
அத்துடன் ‘நெய்வேலியில் 24 மணி நேரமும் உழைத்த போதும் நிற்காத இயந்திரம் யக்ஞேஸ்வரன்’ என்றான். ஆங்கில மொழிக்கு ஒரு வசதி உண்டு. மறைபொருளாக நிறைய பேசலாம். கேட்பவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடாது. அப்படிப் பேசுபவன் அவன்.
அவனை அடுத்து பேசிய யக்ஞேஸ்வரனின் மனைவி மீனாட்சி யக்ஞேஸ்வரன் பேசினார். ‘இந்த நிருபர் நன்றாக எழுதுவார் என்று தெரியும், நன்றாக பேசுவார் என்பது இப்போது தான் தெரிகிறது’ என்றார்.
விழா முடிந்து அந்த தம்பதி விடைபெற்றபோது, யக்ஞேஸ்வரன் அவனைப் பார்த்து, ஒரு தனிப்பெரும் கருணையாக புன்சிரிப்பை உதிர்த்தார். மீனாட்சி யக்ஞேஸ்வரன் அவனது தோளைத் தட்டி, ‘இந்த சித்தியை மறந்துடாதே, சென்னைக்கு வந்தால் வீட்டிற்கு வா’ என்றார். நெய்வேலியில் வசித்தபோது, ஒருநாளும் அவன் சேர்மன் வீட்டிற்குச் சென்றதில்லை. சித்தி சித்தப்பா உறவு நெய்வேலியில் இருந்ததில்லை.
அவன் சில வருடங்கள் கழித்து அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகராக இருந்த போது தன் விசா விஷயமாக யக்ஞேஸ்வரன் அவனைக் காண வந்தார். அப்போது தான் அவன் பாசத்துடன் அவரை ‘சித்தப்பா’ என்று அழைத்தான். அவருக்குக் காபி கொடுத்து உபசரித்தான். அந்த அளவுக்கு அவன் பத்திரிகையாளனாக இருந்த காலத்தில், உறவை தொலைவில் வைத்திருந்தான். தொழில் மட்டுமே முன்னிலை பெற்றது.
தென்னாற்காடு மாவட்டத்தில் கலெக்டராக இருந்த என்.ராஜகோபாலன் குடும்ப நண்பர். அவனை 16 வயதிலிருந்தே அறிவார். இருந்தபோதிலும் அவனுக்கு அரசாங்க சார்பாக சலுகை ஏதும் கொடுத்ததில்லை, அவனும் கேட்டதில்லை. ஆனாலும் நெய்வேலிக்கு வந்தபோதெல்லாம் அவன் வீட்டிற்கு வந்து காபி சாப்பிட்டுப் போவார். நட்பு இருந்தது. ஆனால் நட்பு வேறு, தொழில் வேறு என்றே இருவரும் பழகி வந்தார்கள். நிருபர் பதவியிலிருந்து விலகிய பிறகு அவர் காலம் ஆகும் வரை நட்பைத் தொடர்ந்தான். அவர் எழுதிய சங்கீத சம்பந்தமான புத்தகங்களில் அவனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பதவிக்காலம் உதவிக்காலமாக இருந்ததில்லை.
உறவும், நட்பும், தொழில் கடமைகளில் குறிக்கும்போது, தொழில் பாழ்படலாம் என்பது இருவரின் பண்பாக இருந்தது. இதை உணர்ந்து நடுநிலை காத்து பந்தங்களை விலக்கி, நிருபர் செயல்பட வேண்டியது பத்திரிகை தர்மம்.
Leave a comment
Upload