தொடர்கள்
அரசியல்
பாரத் டெக்ஸ் - வியாபாரிகளை கடுப்படித்த பிரதமர் - சிவராம்

20250121233603415.jpeg

உலக நாடுகளில் வர்த்தகத்திற்கு பெரிதும் உதவுவது தொழில் கண்காட்சிகள். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் வியாபாரிகள் ஒரே இடத்தில் அந்த நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் அனைவரையும் சந்திக்க வைக்கும் ஒரு இடம் தான் இந்த எக்ஸ்போ. டெல்லி அப்பளம், கொடைராட்டிணம் நடக்கும் இடமல்ல. அத்தனையும் டாலர் டாலர் டாலர் சமாச்சாரம்.

கடந்த வாரம் டில்லியில் நான்கு நாட்கள் நடைபெற்றது இந்த எக்ஸ்போ. அதில் ஐயாயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகள் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தனர்.

இது இரண்டாவது வருடம். முதல் வருடம் முதல் நாள் துவக்கி வைத்து பிரதமர் பேசினார். இந்த முறை அமெரிக்கா சென்று விட்டதால் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் திடீரென ஞாயிற்றுக் கிழமை மதியம் 1 மணிக்கு வந்து எக்ஸ்போவை பார்ப்பதாகவும், அப்படியே வெளிநாட்டு வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் இந்த தொழில் கண்காட்சியைப் பற்றி உரை நிகழ்த்த போவதாகவும் முடிவு செய்திருப்பார் போலும். அங்கே தான் ஏழரை நாட்டு சனி பிடித்தது வியாபாரிகளுக்கு.

செக்யூரிட்டி தருகிறோம் பேர்வழிகள் என்று அனைத்து வியாபாரிகளையும் 1 மணி முதல் 5.30 மணி வரை வெளியேற்றினார்கள் செக்யூரிட்டி அதிகாரிகள். இதனால் அன்று செய்ய இருந்த அத்தனை வியாபார பரிவர்த்தனைகளும் பாழ்.

எல்லோரையும் வெளியே விரட்டி விட்டு வெறும் ஹாலை நாலைந்து பேரோடு சுற்றிப் பார்த்தார் மோடி. தேவையற்ற செயல்.

20250121234334811.jpeg

அங்கிருக்கும் பலருக்கும் மோடியை மிகவும் பிடிக்கும் தான். ஆனால் ஒரு பக்குவமே இல்லாமல் இப்படி ஒரு வியாபார நாளில் விசிட் செய்து அத்தனை பேர் நேரத்தையும், வியாபாரத்தையும் வீணடித்ததில் பிரதமர் மீது ஏக கடுப்பு எல்லோருக்கும். மொத்த கண்காட்சியும் முணுமுணுத்தது. இது போதாதென்று அவரது உரை கேட்க 3.30 மணி என்று சொல்லி 5 மணிக்கு வந்தார் மோடி. இது அவராக செய்த சம்பவமா அல்லது அதிகாரிகளின் மெத்தனமா தெரியவில்லை

அடுத்த வருடமாவது விழா துவக்கத்திலோ அல்லது ஆறு மணிக்கு பின்பாகவோ பிரதமர் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால் தாராளமாக செய்யலாம், வேலை நேரத்தை கெடுக்க வேண்டாம் என்று ஏதேனும் ஒரு அல்லக்கை அவருக்கு எடுத்துச் சொன்னால் நல்லது.