தொடர்கள்
அரசியல்
தமிழகத்தில் "இந்தி"யா அர்த்தமற்ற சர்ச்சை -விகடகவியார்

20250121180026361.jpeg

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்ன ஒரு விஷயத்தை வைத்து மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் தீவிரத்தில் இறங்கி இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு தமிழகத்துக்கு கல்வி திட்டங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை முறையாக கொடுக்கவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குற்றம் சொல்லிக் கொண்டிருந்தது.

20250121180322939.jpeg

இந்த சர்ச்சைக்கு பதில் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது தான் மேலும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது பற்றிய கேள்விக்கு அவர் நிருபர்களிடம் பேசும் போது நாட்டில் உள்ள மற்ற மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்போது தமிழகம் மட்டும் ஏற்க முடியாது என சொல்வது ஏன்?

முதலில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர்.

இப்போது அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை மும்மொழியை பரிந்துரை செய்கிறது.

தமிழக அரசு அதை ஏற்றுக் கொண்டு தமிழ் ,ஆங்கிலத்துடன் கன்னடம் உள்ளிட்ட ஏதாவது ஒரு மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.

சொல்லப்போனால் தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழியை தான் பிரதானமாக கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தமிழக அரசு தமிழ் மொழிக்கு எதிராக இருப்பது போல் தெரிகிறது என்று சொன்னார் மத்திய அமைச்சர்.

அமைச்சர் சொன்னது தான் உண்மை.

20250121180058628.jpeg

திமுக அப்படியே உல்டாவாக இந்தியை கற்கச் சொல்லி மத்திய அரசு வலியுறுத்துகிறது.

இந்தி படித்தால் தான் நிதி என்று சொல்கிறது என்று அப்படியே திசை திருப்பி விட்டார்கள்.

இதில் வேடிக்கை திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டிருக்கிறது.

பாரதிய ஜனதா தலைவர்கள் இந்த விஷயத்தில் சொல்லும் கருத்து இதுதான்

. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் வசம் தான் உள்ளது.

அங்கு அங்கு இந்தி உள்பட மற்ற மொழி பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல தனியார் பள்ளிகளில் தமிழ் சொல்லித் தரப்படவில்லை என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன் ஒரு பள்ளி நடத்துகிறார் அங்கும் இந்தி சொல்லித் தரப்படுகிறது.

தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் நடத்தும் பள்ளியிலும் இந்தி சொல்லித் தரப்படுகிறது என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

சில கல்வியாளர்கள் சொல்லும் கருத்து ஒருவேளை இதுதான் உண்மையே என்று நம்மையே சந்தேகிக்க வைக்கிறது .

தமிழ்நாட்டில் இந்தி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாய் கொண்டே இருக்கிறது. நீங்கள் தெருவிதியில் நடந்து போனாலே தெரியும்.

பல தெருக்களில் வீட்டு வாசலில் இவ்விடம் இந்தி கற்றுத் தரப்படும் என்ற போர்டு வைத்திருப்பார்கள்.

தனிப்பட்ட முறையில் மாணவர்கள் இந்தி கற்று ஹிந்தி பிரச்சார சபாவில் தேர்வு எழுதி தனியாக சான்றிதழ் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றை விட அரசுப் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்க தொடங்கினால். தனியார் பள்ளியில் யாரும் படிக்க மாட்டார்கள்.

20250121180601462.jpeg

ஏற்கனவே அரசு பள்ளிகளில் எல். கே. ஜி, யு .கே. ஜி போன்ற வகுப்புகள் தொடங்கக்கூடாது என்று தனியார் பள்ளி நடத்தும் அரசியல் தலைவர்கள் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தருகிறார்கள் அப்படி அரசாங்கம் எல். கே. ஜி, யு,கே,ஜி வகுப்புகளைத் தொடங்கினால் தங்கள் வியாபாரம் படுத்து விடும்.

ஹிந்தி கற்றுக் கொடுக்கத் தொடங்கினால் தங்கள் பள்ளிக்கு யாருமே படிக்க வர மாட்டார்கள் என்பதால் இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் தங்கள் வியாபாரத்தை பாதுகாக்கிறார்கள் என்பது தான் அது. இது உண்மைதான் என்று நமக்கே தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் ஹிந்தி நீக்கமற எல்லா இடங்களிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை.

சாதாரண ஹோட்டல்கள் முதல் கட்டிடத் தொழில் பின்னலாடை நிறுவனங்கள் மளிகை கடை ,ஸ்வீட் ஸ்டால் ,பானி பூரி விற்பவர்கள் என்று எல்லா இடங்களிலும் இந்திக்காரர்கள் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்.

இவர்களை வேலை வாங்குவதற்காக இந்த நிறுவனங்களை நடத்தும் முதலாளிகள் தற்சமயம் இந்தி கற்றுக்கொள்ள தொடங்கி விட்டார்கள்.

திருப்பூரில் முழுக்க முழுக்க இந்தி பேசுபவர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது தமிழ் பேசுபவர்கள் அரிதாகி விட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் திருப்பூர் ஒரு பேசும் பொருளாகவே ஆகிவிட்டது.

சென்னையில் உள்ள பள்ளிகளில் தெலுங்கு முக்கிய மொழியாக கற்று தரும் பள்ளிகள் 49 உருது மொழிகள் 24 இந்தி கற்றுத்தரும் பள்ளிகள் 12 மலையாளம் மற்றும் குஜராத்தி கற்றுத்தரும் பள்ளிகள் நான்கு இது தவிர அகோபிலமடம் நடத்தும் பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் தான் அங்கு கூடுதலாக சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது.

எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தமிழ், உருது ,ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் தான் நீண்ட ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது. திருவல்லிக்கேணி அரசு பள்ளியில் உருது மட்டுமே கற்றுத் தரப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் வடுகன்பாளையத்தில் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் உருது மட்டுமே கற்றுத் தரப்படுகிறது தமிழ் கிடையாது. ஈரோடு பொறுத்தவரை 40 அரசு பள்ளிகளில் கன்னடம் சொல்லித் தரப்படுகிறது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 415 பள்ளிகளில் தெலுங்கு தான் சொல்லித் தரப்படுகிறது 22 பள்ளிகளில் கன்னடம்.

இவற்றில் பெரும்பாலானவை அரசு பள்ளிகள் தான் சில அரசுப் பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்று கன்னடம், தெலுங்கு ,ஆங்கிலம் சொல்லித் தரப்படுகிறது தமிழ் கிடையாது.

விழுப்புரம் மாவட்டத்தில் 29 உருது பள்ளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளியில் தமிழ் கிடையாது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் தமிழ் தெலுங்கு ஆங்கிலம் என்று மும்மொழி பாடத்திட்டம் தான்.

வேலூரில் 124 உருது பள்ளிகள் உள்ளன. இது தவிர 11 தெலுங்கு சொல்லித் தரும் பள்ளிகள் இங்க எல்லாமே மும்மொழி திட்டம்தான். இந்தப் பள்ளிகளில் தமிழ் கிடையாது.

கடலூரில் இரண்டு உருது பள்ளியில் தமிழ் சொல்லித் தருவது கிடையாது.

ஹிந்தி என்பது ஒரு மொழி அது சாராயமோ, கஞ்சாபோன்ற போதைப் பொருள் கிடையாது. அதைப் படிப்பதால் எந்த தமிழனும் கெட்டுப்போகப்போவதும் இல்லை தமிழன் இந்தி படிக்கட்டும்.

வட இந்தியாவில் மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் சொல்கிறார் , அதுவும் நம்பும் படி இல்லை.

அங்கு பெரும்பாலான பள்ளிகளில் எல்லா பாடங்களும் இந்தியில் மட்டும் தான். மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் இந்தியில் பாடத்திட்டங்கள் கொண்டுவர தேர்வும் இந்தி மொழியில் நடத்த அங்குள்ள மாநிலங்கள் மத்திய அரசும் ஏற்பாடு செய்யத் தொடங்கி இருக்கின்றது இதுவும் உண்மைதான்.

வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம் தான் பிரதான மொழி அங்கு இந்திக்கு இடமில்லை.

மொழிக் கொள்கை என்பது கட்சி அரசியல் சார்ந்து இருக்கிறது. அதில் பெற்றோர்கள் விருப்பம் மாணவர்கள் விருப்பம் இது பற்றிய சிந்தனை அதில் இருப்பதாக தெரியவில்லை. மொழி அரசியல் நமக்கு தேவையில்லை. மொழி என்பது நம்மை மேம்படுத்தும் என்ற நோக்கில் தான் நாம் சிந்திக்க வேண்டும். எனவே அரசியல்வாதிகள் மொழி அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் ஒரு விசை தயவு செய்து புதிய கல்வித் திட்டத்தை முழுவதுமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையேல் ஆ.ராசா ஒரு மாணவியிடம் நல்ல கேள்விம்மா, நல்ல கேள்வி, உக்காரும்மா, நல்ல கேள்விம்மா என்று கதறியது போலத்தான் இருக்கும்.