தொடர்கள்
ஆன்மீகம்
மஹா சிவராத்திரி மஹாத்மியம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Maha Shivratri Mahatmiyam..!!


சிவ பெருமானை வழிபடுவதற்கு மிக உன்னதமான நாளாகப் போற்றப்படுவது மஹா சிவராத்திரி. இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி இரவில் கொண்டாடப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மஹா சிவராத்திரி தினத்தன்று சிவ பக்தர்கள் கோயில்களுக்குச் சென்றோ அல்லது வீட்டில் உள்ள சிவபெருமானுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.
மஹா சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்வது வழக்கம். மற்றும், மஹா சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, வில்வ இலை கொண்டு சிவ பெருமானைப் பூஜித்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து, மோட்சம் கிடைக்கும்.
“'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நீங்கி,'உபாயம்' ஏற்படும் நமக்கு”என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். மேலும் “ஓம் நமசிவாய” மந்திரம் ஜெபித்து முக்கண் முதல்வனை வணங்கினால் நம் வாழ்வில் மகிழ்ச்சியும், காரிய வெற்றியும் ஏற்படும்.
மஹா சிவராத்திரி அன்று கோளறு பதிகம், லிங்காஷ்டகம், நடராஜர் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களைத் தரும். மேலும் அன்றைய தினத்தில் பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தால் மற்ற நாட்களில் ஜெபிப்பதை விட 100 கோடி முறை ஜெபித்த பலன் கிட்டும்.

Maha Shivratri Mahatmiyam..!!

புராணங்களில் மஹா சிவராத்திரி :
மஹா சிவராத்திரி நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹா சிவராத்திரியின் மேன்மை, ஆகமவிதிகளை சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம், உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.
கந்த புராணத்தில் மஹா சிவராத்திரி அன்று அடி, முடி காண முடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாகச் சிவன் காட்சி தந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மார்க்கண்டேயன் உயிரைக் காக்கச் சிவன் எமனைக் காலால் உதைத்து, சம்ஹாரம் செய்தார். அதன்பின் அவரை உயிர்ப்பிக்கத் தேவர்கள் சிவனை வேண்டினர். அந்த நாளே மஹா சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.
சிவராத்திரி விரதம் இருந்துதான் பிரம்மா, சரஸ்வதி தேவியை மனைவியாகப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார்.
சிவனை நோக்கி மஹா சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாகச் சக்தி வாய்ந்த சக்ராயுதத்தை பெற்றார் என்றும் ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும் இந்த மஹா சிவராத்திரியில் தான்.
மற்றுமொரு புராணத்தில், தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் ‘திருநீலகண்டர்’ ஆக அருள் புரிந்தார். அவ்வாறு அருள் புரிந்த அந்நாளே மஹா சிவராத்திரி எனக் கூறுவர்.
மஹா சிவராத்திரியை பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஊழிக்காலத்தில் உலகப் பிரளயத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், பார்வதி பரமேஸ்வரனை நினைத்து மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் சிவபெருமானை இரவுப் பொழுதில் நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்தார். பூஜையின் முடிவில் ஈசன் அழிந்து போன உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டினாள். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அதன்படியே மஹா சிவராத்திரி சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது.
மஹா சிவராத்திரி தின பூஜையைக் கண்ட அசுரக் கூட்டம் தங்களையும் அறியாமல், ‘சிவ சிவ’ என்று கூறினார்களாம். இதனால் அவர்கள் பாவங்கள் நீங்கி அவர்களுக்குச் சாப விமோசனம் கிடைத்தது.

Maha Shivratri Mahatmiyam..!!

வேடனுக்குக் கிடைத்த மோட்சம்:
மஹா சிவராத்திரி அன்று கண் விழித்து, யார் ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சிவனை வழிபட அவர்களுக்கு மோட்சம் நிச்சயமாகக் கிடைக்கும். இதற்கு உதாரணமாக வேடன் ஒருவனின் கதை சொல்லப்படும்.
காட்டில் ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வர அதனிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவன், உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். மதியம் வந்தது, மாலையும் வந்தது. இருள் சூழ, இரவும் வந்தது. புலியோ மரத்தடியில் படுத்துக் கொண்டு நகர்வதாயில்லை. வேடனுக்கோ பசி, தாகம், உறக்கம். தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. நெடுநேரமாகியது. கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சரியம். அங்குப் புலிக்குப் பதிலாகச் சிவலிங்கம்.
பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது. மஹா சிவராத்திரி அன்று இரவு கண் விழித்து, சிவ பூஜை செய்வதால் கிடைக்கும் மகிமையை உணர்த்த இந்த கதையைச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது வெறும் கதை அல்ல. நிஜத்தில் நடந்த சம்பவம்.
இந்த சம்பவம் நடந்த ஊர், சுவாமிமலைக்கு அருகே திருவைகாவூர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி விழாவின் போது வேடனுக்கு மோட்சம் அளித்த வைபவம் நடத்தப்படுகிறது. திருவைகாவூரில் வேடனுக்குச் சிவ பெருமான் காட்சி அளித்த இடத்தில் சிவனுக்குக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தல இறைவனுக்கு வில்வவனேஸ்வரர் என்று பெயர். இக்கோயிலில் வேடன் மரத்தின் மீது அமர்ந்து, சிவனை வில்வத்தால் அர்ச்சித்த காட்சி சுதைச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Maha Shivratri Mahatmiyam..!!


மஹா சிவராத்திரி விரத வழிபாடு:
மஹா சிவராத்திரியன்று இரவுப்பொழுதில் நான்கு ஜாம காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சனை, ஆராதனைகள் என ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள்.
முதல் ஜாமத்தில் (இரவு 7.30 முதல் 9.30 மணி வரை) முருகப்பெருமானை நடுவில் அமர்த்தி உமாதேவியும், சிவபெருமானும் காட்சிதரும் சோமாஸ்கந்தரைப் பின்வருமாறு பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்யவேண்டும்.
அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம்- பால் அன்னம், சக்கரைப்பொங்கல்
பழம் - வில்வம்
வஸ்திரம் – செம்பட்டு
வாசனைத் திரவியம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம்
தூபம் - சாம்பிராணி, சந்தனக்கட்டை
தீபம் - புஷ்ப தீபம்
ரிக் வேதம், சிவபுராணம் ஓத வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 11.00 முதல் 12.30 மணி வரை)
தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியைப் பின்வருமாறு .பொருட்களைக் கொண்டு வணங்கவேண்டும்.
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
வஸ்திரம் - மஞ்சள் பட்டு
வாசனைத் திரவியம் - அகில், சந்தனம்
தூபம் - சாம்பிராணி, குங்குமம்
தீபம் - நட்சத்திர தீபம்
யஜூர் வேதம், கீர்த்தித் திருவகவல் ஓத வேண்டும்.

மூன்றாவது ஜாமத்தில் (அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை)
கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவரை பின்வருமாறு பொருட்களைக் கொண்டு தரிசிக்கவேண்டும்.
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், முல்லை மலர்
நிவேதனம் - எள் அன்னம்
பழம் - மாதுளம்
வஸ்திரம் - வெண் பட்டு
வாசனைத் திரவியம் - கஸ்தூரி சேர்ந்த சந்தனம்
தூபம் - மேகம், கருங் குங்கிலியம்
தீபம் - ஐந்துமுக தீபம்
சாம வேதம், திருவண்டப்பகுதி ஓத வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை)
ரிஷப வாகன சிவனான சந்திரசேகரரைப் பின்வருமாறு பொருட்களைக் கொண்டு வழிபடவேண்டும்.
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனைத் திரவியம் கலந்த நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண் சாதம்
பழம் - நான்கு வித பழங்கள்
வஸ்திரம் - நீலப் பட்டு
வாசனைத் திரவியம் - புனுகு சேர்ந்த சந்தனம்
தூபம் - கர்ப்பூரம், இலவங்கம்
தீபம் - மூன்று முக தீபம்
அதர்வண வேதம் , போற்றித்திருவகவல் ஓத வேண்டும்.
ஒரு சில கோயில்களில் அன்று இரவு முழுவதும் ருத்ர ஜப பாராயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவை பாடப்படும். ‘சிவபுராண’ உபன்யாசமும் நடைபெறும், அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லியும் கேட்கலாம்.

Maha Shivratri Mahatmiyam..!!

வழிபாட்டுப்பலன்:
மஹா சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து, இரவு கண் விழித்து நான்கு ஜாம பூஜைகளில் சிவபெருமானை வழிபடுவதால் சகல வளங்களையும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ முடியும். சிவராத்திரியன்று தம்பதிகளாக இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமுமாகத் திகழும். இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள்.
இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று சிவனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் முதலியவை உண்டாகும். மற்றும் ஓராண்டு சிவ பூஜை செய்த பலனும் கிடைக்கும். முறைப்படி இருபத்து நான்கு வருடங்கள் மஹா சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் மோட்சத்தை அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள். மஹா சிவராத்திரி அன்று நியம முறைப்படி விரதம் அனுஷ்டித்தால் வாக்கு பலிதமும் மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு. சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவையும் நம்மை விட்டு நீங்கிப் போகும்.
விஸ்வாமித்திரர், வசிட்டர், அகஸ்தியர் போன்ற சப்த ரிஷிகளும் சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், மன்மதன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரும் மஹா சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

Maha Shivratri Mahatmiyam..!!


இந்த வருடம் (2025) மஹா சிவராத்திரி பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது..

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!