கையிலையே மயிலை. மயிலையே கயிலை.
என்று மயிலையையே மிகவும் பெருமையாகக் கொண்டாடுவார், நாம் வாழும் நாளிலே நம்மிடையே நடமாடிய உறவாடிய வாழ்ந்து வழி காட்டிய தெய்வம் நமது காஞ்சி மஹா பெரியவா. அன்று அவர் செய்த பெடல் தான் நம்மை இன்றும் நன்கு நல்வழியில் வாழ வைக்கின்றது.
அங்கும் இங்கும் எங்கும் வழிபடும் படங்களாக, கேட்கப்படும் நல்லுரைகளாக, அவர் கொண்டாடிய நமது தர்மத்தின் பண்டிகைகள் ஆத்மார்த்தாக கொண்டாப்படும் திருவிழா வைபவங்களாக மஹா பெரியவா நம் எல்லோரின் வாழ்க்கையின் அங்கங்களாகிவிட்டார். அனிச்சசெயலாகிவிட்டது நிஜமே.
மயிலையும் காஞ்சியும் பாரதத்தின் இரண்டு பழமையான புண்ணிய ஸ்தலங்கள்.
இப்போது காஞ்சி மயிலையில் குடி கொண்டது என்பது போல காஞ்சி மாஹாபெரியவாளுக்கு மையிலையிலேயே அதுவும் கபாலீச்சரத்தின் அதி அருகாமையிலேயே வந்துவிட்டால் ஏக சிறப்பு தானே.
ஆம், சென்ற பிப்ரவரி 10 ஆம் தேதி மஹோததி(கடல்) தீரத்தில், கபாலி கோயிலுக்கு பக்கத்திலேயே 4, பிச்சுப்பிள்ளை தெருவிலேயே மகா பெரியவாளுக்கு இல்லம் அமைத்து சந்தோஷித்தனர் அவரது கடலெனத் திரண்ட பக்த கோடிகள்.
ஆம்ம்ம். அன்று அவர் அமைந்த குடிலுக்கு, பக்தர்களாகிய நமக்கு புதிதாய் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்திற்கு, நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது. இதனை பெரியவாளின் பக்த கோடிகளும் மற்றும் மயிலை மஹா பெரியவா அனுஷம் டிரஸ்ட்டும் இணைந்து செய்து கொண்டாடினர்.
அதை நேரில் காணும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.
ஒரு வாரம் முந்தியே 3 ஆம் தேதியன்று, குரு வந்தனம், அனுக்ஞ்யை, விக்னேஸ்வர பூஜை, கும்பாபிஷேக சங்கல்பம், க்ரஹ ப்ரீதி புண்யாஹவாசனம், பூர்வாங்கம், கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் இந்த வைபவம் ஆரம்பித்தது. அன்றிலிருந்தே நித்தமும் வேத பாரயணங்கள் நடைபெற்றன. நவக்ரஹ ஹோமம், ஸ்ரீமஹா சுதர்சன ஹோமம், மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம் என்று தினமும் ஒரு சிறப்பான ஹோமங்கள் நடைபெற்றன.
7ஆம் தேதி கோ பூஜை, அங்குரார்பணம் என யாக சாலையின் பூர்வாங்க காரியங்கள் நடந்தன.
8ஆம் தேதி முதல் கால பூர்ணாஹுதி என ஆரம்பித்த யாக சாலை ஹோமங்கள் 9ஆம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூர்ணாஹுதி முடிந்து கும்பாபிஷேக நாளான 10 ஆம் தேதி காலையில் நான்காம் கால பூர்ணாஹுதி முடிந்து சுப யோக சுப முஹுர்த்தத்தில் (காலை 9.20 முதல் 10 மணிக்குள்) மூலஸ்தான விமான கும்பாபிஷேகமும், பிரதான மூர்த்தி (விக்ரஹ) கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடந்தேறியது. திரண்ட பக்தர்களிடையே மகத்தான வரலாற்று நிகழ்வில் பங்கு கொண்ட பெருமிதம் மிஞ்சியது அங்கு தொற்றாய் பரவியது. அனைவரும் தத்தம் வீட்டு கல்யாணம் பண்ணிப் பார்த்த கர்வத்தில் மிதந்தனர். வேத பாராயணத்தில் திருமுறை, திவ்யப்ரபந்தத்திற்கும் உரிய உயரிய பங்கு அமைத்திருந்தனர்.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மயிலையின் மாட வீதிகளில் மஹாபெரியவர், தம் சீடர்களான ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தற்போதைய 70 ஆம் பீடாதிபதியான சங்கர விஜயேந்திர ஸ்வாமிகளின் வண்ணச் சிலைகளை ஊர்வலமாய் வேத விற்பன்னர்களும் வேத பாடசாலை மாணவர்களும் பாராயணம் செய்தவாறே வீதி வலம் சென்றனர்.
தெரு திருவிழாக்கோலம் கண்டது.
முஹூர்த்த வேளையும் நெருங்க, குறுகலான பிச்சு பிள்ளை வீதியில் இடமும் இல்லை, விமானமும் தெரியவில்லை என்பதால், விமானத்திற்கான அபிஷேகம் காண பக்தர்கள் அருகில் உள்ள பாரதீய வித்யா பவனின் மொட்டை மாடியிலும், சிவசாமி பள்ளியின் மொட்டை மாடியிலும் சரண் புகுந்தனர்.
ட்ரோன் பக்தர்களை கூடியிருந்த இடத்திற்கே வட்டமடித்தவாறே வந்து படம் பிடித்துக் கொண்டது.
ஆதவன் பளிச்சென உக்கிரமாய் கிழக்கில் எழ கபாலியின் கோபுரம் அண்ணாந்து நின்ற நிலையிலிருந்தே சாட்சியாகிட பக்தர்களின் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர கோஷங்கள் விண்ணைப் பிளக்க நாதஸ்வர இசையுடன் கெட்டி மேளம் கொட்ட, ஆலயத்தின் விமானத்திற்கு யாக சாலை கும்பத்தில் மந்திர உருவேற்றப்பட்ட கலசக் குட நீர் அபிஷேகிக்கப்பட்டு, மாலையணிவிக்கப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட கும்பாபிஷேகம் இனிதே முடிந்தது. அதே சமயம் சன்னிதியின் மூல விக்கிரகத்திற்கும் கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
பின்னர், நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரிசையாக பெரியவாளின் சன்னிதி நோக்கி நகர்ந்தனர்.
ஆஹா, வலது கரம் அபய ஹஸ்தமாய் விளங்கிட, இடது கரம் தண்டத்தைத் தாங்கிய மஹா பெரியவா சம்மணமிட்டு அமர்ந்த கோலத்தில் கருங்கற் சிலையாய் நிலைத்திட, அவரின் முன்னே நின்ற கோலத்தில் வலது கரம் அபய ஹஸ்தமாய் விளங்கிட இடது கரம் தண்டத்தைத் தாங்கிய பஞ்ச லோக விக்கிரமாய் உர்ச்சவ மூர்த்தியாய், பார்க்க பார்க்க உற்சாக மூட்டும் மூர்த்தியாய், அதாவது, உற்சாக மூர்த்தியாய் சன்னிதி பிரகாசித்தது. இனியும் அதன் மெருகு ஏறுமே தவிர வேறேது.
தரிசனம் செய்து விட்டு வெளியேறும் பக்தர்கள் மேல் கலச நீர் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பக்தர்களில் பலரும் தத்தம்மில்லத்தில் இருப்பவர்க்கு வழங்கிட அந்த தீர்த்தத்தை சிறு பாட்டிலில் நிரப்பிக்கொண்டு சென்றனர். விபூதியும் குங்குமமும் பிரசாதமாக வழங்கப்பட்டன.
அடுத்து ஒரு 48 நாட்களிலும் இவ்வாலயத்திற்கு வந்தாலும் இந்த கும்பாபிஷேகத்தை கண்ட பாக்கியம் உண்டே.
மயிலை வருபவர்க்கு தரிசனம் செய்திட மற்றுமொரு விசேஷ ஆலயமும் இதோ உண்டு.
மஹா பெரியவா போற்றி. தென்னாடுடைய பெரியவா போற்றி.
Leave a comment
Upload