இப்பாடலின் நாயகி ஓர் அற்புதமான பெண்ணரசி.
குழந்தையின் வெள்ளந்தி மனமும் , குமரியின் காதல் மனமும் ஒன்று சேர்ந்த புதிர் அவள்.
தலைவன் அவளைக் காண வரும் போது, "ஒரு புன்னை மரத்தடியில் சந்தித்து பேசலாமா?" என்ற போது, "அம்மரம் 'என் தங்கை போன்றவள்' அவள் நிழலில் நின்று நாம் எப்படி காதல் கதைகள் பேச முடியும். நீ நிழல் தரும் வேறு மரம் எதாவது சொல் " என்கிறாள்
வியப்பாக இருக்கிறதல்லவா ? தலைவி கூறுவதை மேலே படியுங்கள்.
" பாணர்கள் பாடும் மெல்லிசைப் பாடலை ஒத்த வெண்ணிற வலம்புரி சங்குகள் ஒலிக்கும் கடற்கரை நாட்டின் தலைவனே !
எங்கள் சிறுவயதில் தோழியருடன் நாங்கள் மணலில் புன்னை விதையை புதைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். பின்பு அதை மறந்துப் போனோம்.
அவ்விதை சில நாட்களில் வேரூன்றி முளைத்து, முளை விட்டு நின்றது
அந்தச் சிறு செடியைப் பார்த்த என் அன்னை, " நீங்கள் வளர்க்கும் இந்த மரம் உங்களை விட சிறந்தது.இது உன்னுடன் பிறந்த தங்கை போன்றவள் " என்றார்.
நாங்கள் மிகவும் மகிழ்ந்து அச்செடிக்கு பாலும் , தேனும் ஊற்றி வளர்த்தோம். இப்போது நிழல் தரும் மரமாகி விட்டது இப்புன்னை மரம்.. இதை எங்கள் தங்கை என்றே கருதி வளர்த்து வந்தோம்.
எனவேதான் என் தங்கை போன்ற இந்த புன்னை மரத்தின் நிழலில் நின்று, உங்களுடன் சிரித்துப் பேச நாணமாக இருக்கிறது. அதன் அடியில் நின்று நீ அணைத்துக் கொள்வாய் என்றால் அது எனக்கு மிகுந்த கூச்சத்தைத் தரும்,
நீ ஏன் வேறு நிழல் தரும் மரத்தைத் தேர்ந்தெடுக்க கூடாது ? நாம் உரையாட தகுந்த பலவித மரங்கள் இங்கு உள்ளனவே" என்றாள்
இதுதான் அந்தப்பாடல் .
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
நற்றிணை 172
சொற்சுவையும் , பொருட்சுவையும் மிக்க அழகான பாடல் இது.
ஒரு மரத்தினை உறவென்று நினைத்து வாழும் உன்னதத்தன்மையை கூறும் பாடல் இப்பாடல்
"நின் தங்கை ' என்று குறிக்கும் 'நுவ்வை' என்ற சொல் இந்தப்பாடலின் அழகுக்கு அழகு சேர்க்கிறது
நெய்தல் நிலத்துக்குரிய இப்பாடலை எழுதிய புலவர் பெருந்தகை யார் என்று தெரியவில்லை.
இயற்கையை மிகவும் நேசிக்கும் , இளகிய, அழகிய மனம் படைத்த பெண் புலவராக அவர் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்
மேலும் ஒரு நல்ல பாடலுடன் சந்திப்போம்
தொடரும்
Leave a comment
Upload