தொடர்கள்
தொடர்கள்
மனசே! டேக் டைவர்ஷன் 4 - மோகன் ஜி, [சித்திரம் : தேவா]

: "நம்பிக்கை… நெஞ்சில் வை!"

முதலாம் உலகப் போர் சமயம்.

ஜிம் என்ற வீரரின் இதயத்தில் திகில் பற்றிக் கொண்டது.

தனக்குமுன் இருந்த உயிர் நண்பன் போரில் குண்டடி பட்டு ஒரு பள்ளத்தில் வீழ்ந்ததை நேரில் கண்டார். ஜிம்மிற்கோ தலைக்குமேல் தொடர்ச்சியாக துப்பாக்கி குண்டுகள் பறந்தபடி இருந்தன. ஒரு பதுங்கு குழியில் சிக்கிக்கொண்ட அந்த சிப்பாய், வீழ்ந்து கிடந்த தனது தோழரை திரும்ப அழைத்து வர, பதுங்கு குழிகளுக்கு இடைப்பட்ட இடத்திற்கு வெளியே செல்லலாமா என்று தனது லெப்டினன்டிடம் கேட்டார்.

‘’நீங்கள் போவதானால் உங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போகவேண்டி இருக்கும். அந்த சிப்பாய் கண்டிப்பாக இறந்து போய் இருக்கலாம். விடுங்கள்” என்றார்.

எனினும் ஜிம் அதை பொருட்படுத்தாது மெல்லத் தவழ்ந்து முன்னேறினார். தன் நண்பனை ஒரு வழியாக சுமந்துகொண்டு தன் பதுங்கு குழிக்கு வரும்போது அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

விழுந்து கிடந்த அந்த சிப்பாயை அந்த லெப்ட்டினெண்ட் பரிசோதித்து ஜிம்மை அநுதாபத்துடன் நோக்கினார்.

“ஜிம்! உங்கள் நண்பர் இறந்து விட்டார். ஆனாலும் அவருக்காக நீங்களும் படுகாயப்பட்டு இருக்கிறார்கள். இது உங்களுக்கு வீண் வேலை. தேவை இல்லாமல் உங்களை காயப்படுத்தி கொண்டு விட்டீர்கள்” என்றார்.

“சார்! நான் சென்று அவனை அழைத்து வந்தது தேவையற்றது அல்ல. அது வீண் வேலையும் இல்லை” என்றார்.

“ஜிம்! இறந்தவனை சுமந்து படுகாயப் பட்டது வெட்டி வேலை இல்லையா?!”

“கண்டிப்பாக அது வீண்வேலை இல்லை சார். ஏனென்றால், நான் என் நண்பனின் அருகே சென்றபோது அவன் உயிருடன்தான் இருந்தான். ‘ஜிம்! நீ எனக்காக வருவாய் என்று எனக்குத் தெரியும்!’என்று புன்னகையுடன் என் கரங்களைப் பற்றிக் கொண்டான். அந்த நம்பிக்கையின் திருப்தி ஒன்றே என் வாழ்நாளுக்கு போதும் சார்!” என்றார் ஜிம்.

பிறர் நம்மேல் கொள்ளும் நம்பிக்கைக்காக என்ன விலையும் கொடுக்கலாம் என்று உணர்த்தும் எங்கோ படித்த மேற்சொன்ன சம்பவம். நம்பிக்கையின் மதிப்பு அவ்வளவு உயர்ந்தது!

நமது வாழ்க்கை துண்டு துண்டுகளாக இன்றி, நெருக்கமாக ஒட்டிச் சேர்க்கும் வஜ்ரப் பசை போன்றது நம்பிக்கை.

20250113233551510.jpg

அதை ஆதாரமாகக் கொண்டே அத்தனை உறவுகளும் நட்புகளும் இயங்குகின்றன.

நம்பினார் கெடுவதில்லை என்பார்கள். நம்பிக் கெட்டவர்களைவிட எதையும் நம்பாமல் கெட்டவர்களே அதிகம்!

இந்த வாழ்வினை எதிர்கொள்ள நமக்குமுன் இருப்பது இரண்டே வழிகள் தான்.

வாழ்க்கை நம் மீது வீசும் பிரச்னை குண்டுகளினின்று தப்பிக்க ஒன்று… நாம் அங்குமிங்குமாக தாவிக் குதித்து தப்பிக்க முயலலாம். ஆனால் இது மிகுந்த அயற்சியும் ஆபத்தும் நிறைந்த வழிமுறை.

இன்னொரு வழிமுறை, நாம் நம்பிக்கை எனும் கவசம் அணிந்து களம் இறங்குவது. இந்த நம்பிக்கைக் கவசம் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பேருதவி புரிகிறது.

வாழ்க்கையெனும் வழுக்கு நிலத்தில் நாம் கைக்கொள்ள வேண்டிய பற்றுக் கோல் நம்பிக்கை.

தன்மீதோ, தன்னைச் சார்ந்தவர்கள் மீதோ, தான் கொண்ட கொள்கையின் மீதோ, அல்லது இறைவன் மீதோ வைக்கப்படும் நம்பிக்கை கிரியா ஊக்கியாக செயல்படும்.

நாம் பிறர்மேல் நம்பிக்கை கொள்வது மட்டுமின்றி, ஏனையோரும் நம்மீது அசையா நம்பிக்கை கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொள்ளுதலும் முக்கியம்.

எதன் மீதும் நம்பிக்கையின்மை நம்மை பலவீனர்களாக மாற்றிவிடும். அதனால் எந்த செயலையும் மேற்கொள்ள தயக்கமும் அச்சமும் உண்டாகும்.

நம்பிக்கையற்றவர்களிடம் எவரும் கூட நம்பிக்கை வைப்பதில்லை.

  • நம் தவறுகளைத் தயங்காமல் சுட்டிக் காட்டுபவர்கள்;
  • தேவையின்றி நம்மைப் புகழாமல் நட்பு பாராட்டுபவர்கள்;
  • எந்த உள்நோக்கமும் இன்றிப் பழகுபவர்கள்… ஆகியோர்களே

நாம் தயக்கமின்றி நம்பிவிட ஏற்றவர்கள்.

  • நம் புன்னகையின் ஆழத்தில் புதைந்திருக்கும் கவலைகள்;
  • நம் மௌனத்தின் பின்னே உள்ள காரணங்கள்;
  • நம் கோபத்தில் மறைந்திருக்கும் நம் நேசம்

ஆகியவற்றை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

நாம் நம்பிக்கை வைக்கவும் பிறர் நம்பிக்கையைப் பெறவும் ஒளிவு மறைவின்றி திறந்த மனத்துடன் பழகும் தன்மை அவசியம். நம் வெளிப்படையான அணுகுமுறையின் தாக்கத்தால் பிறரும் அவ்வாறே நடந்து கொள்ளும் மாற்றமும் ஏற்படும்.

பிறர் நம்மீது கொள்ளும் நம்பிக்கை, நம்மை உன்னதமானவர்களாக நமக்கே அடையாளம் காட்டும். மன நிறைவை அளிக்கும்.

பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாதல் என்பது நமக்கு முன் காட்டப்படும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஒப்பானது.

நாம் இதற்குமுன் பார்த்தேயிராத நமது மன வசீகரத்தை நமக்கே உணர்த்தும் அந்த ஆடி.

20250113233715963.jpg

[சித்திரம் - தேவா]

குழந்தைகள் எதையும் கேள்விகள் என்று நம்பிக்கை கொள்ளுதலைக் காணலாம். எந்தச் சூழலிலும் நமது பெற்றோர் நம்மை கைவிட மாட்டார்கள் என்ற தளராத அந்த நம்பிக்கை தான் எத்தனை அழகு?!

20250113233751105.jpg

ஆனால் நாம் வளர வளர நம்பிக்கை வைத்தல் என்பது குறைந்து கொண்டே வருவதே யதார்த்தம். நம் மேல் பிறர் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், அதே நம்பிக்கையை பிறர்பால் கொள்ளத் தயங்குகிறோம்.

நமக்கோ அல்லது பிறருக்கோ நம்பிக்கை துரோகத்தால் ஏற்பட்ட இடர்பாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஏமாற்று என்பதை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் மலிந்து விட்டார்கள்தான். அதற்காக நம்பிக்கை வைக்காமல் இருக்கலாகாது.

எனவே தான், பிறரை நன்கு ஆராய்ந்தபின் நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்விதம் நம்பி அவர்களுடன் சேர்ந்தபின் சந்தேகம் கொள்ளக்கூடாது.

நல்ல முறையில் குடும்பமோ வியாபாரமோ அலுவலகமோ இயங்க, ஒருவர் பால் ஒருவர் வைக்கும் நம்பிக்கை மிக அவசியம்.

இதற்குத் தலையாய தேவை வெளிப்படையான பேச்சும் செயலும் தான்.

  • மற்றவரின் நோக்கங்களை நேர்மறையாகப் புரிந்து கொள்ளுதல்;
  • வதந்திகளையும் வம்புகளையும் புறமொதுக்குதல்;
  • நேர்மை, நாணயம், பொறுப்பான தன்மை

ஆகியவையே நம்பிக்கையைத் தூண்டும் காரணிகள்.

நம்பிக்கை அறவே இல்லாமல் செயல்படும் குடும்பமோ அலுவலகமோ பாதிப்புக்குள்ளாதல் தவிர்க்க இயலாதது.

பரஸ்பர நம்பிக்கைகள் நீடிக்க தேவைகள் எவை தெரியுமா?

- விவாதிக்கப்படும் விஷயம் பற்றிய தரவுகளை முதலில் சேகரித்துப் புரிந்து கொள்ளுதல்;

- பிறர் தேவைகளை புரிந்து கொள்ளுதல்;

- நேயத்துடன் உரையாடி, பிறரை இயல்பாக இருக்க விடல்;

- பிறர் கூறும் கருத்துக்களில் உண்மையான அக்கறை கொள்ளல்;

- பிறர் தரப்பைச் சொல்லும்போது ஊன்றிக் கவனித்தல்;

- அவர்களின் நிலைமையை உள்ளபடி ஏற்றுக் கொள்ளுதல்;

- ஒளிவு மறைவின்றி கருத்துகளை பரிமாறிக் கொள்ளல்;

- பிறரின் உணர்வுகளை மதித்தல்;

- அவர்களின் மனநிலையை பரிவோடு புரிந்து கொள்ளுதல்;

- பிறர் கூற்றை ஆராய்தல். அவை ஏற்க இயலாதெனில், எதனால் ஏற்கப்படவில்லை என்பதைப் புரியும்படி விளக்குதல்

அனைத்துக்கும் மேலாக, தம்மில் தான் வைக்கும் தன்னம்பிக்கை தலையாயது.

நம் மகிழ்ச்சிக்கும் வாழ்க்கையை அணுகுவதற்கும் தன்னம்பிக்கை ஒரு மாபெரும் சாதனம்.

தன்னம்பிக்கை

  • நமது முயற்சிகளில் நம்மைத் துவள விடாது.
  • நம் இலக்கை நாம் அடைகின்ற வரையில் மென்மேலும் முயல்கின்ற மனோதிடத்தை தரும்.
  • தன்னம்பிக்கை பிறருடன் நம்மை ஒப்பீடு செய்து சுயஇரக்கம் கொள்ள விடாது.
  • நம் மேல் நாமே நேசம் பாராட்ட வைக்கும் மாமருந்து தன்னம்பிக்கை.

நம்பிக்கை தானே வாழ்க்கை?!