ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கியமாக மாலை வேளையில் நகரங்களில் குடும்பத்துடன் ஹோட்டல் படையெடுப்பு சகஜமாகி விட்டது என்று நமது சித்திரக்காரரின் நையாண்டி இதோ.
அன்று ஞாயிற்றுக்கிழமை .
சகிப்புதாசன், தன் மனைவி இரு குழந்தைகளுடன், பரபரப்பான ஒரு நகரில் வசிப்பவன். அவனும் மனைவியும் வேலைக்கு செல்பவர்கள் ஆதலால் ஞாயிறு தான் ரிலாக்ஸ் டே.
அன்று அவன் மனைவி எல்லோருக்கும் சப்பாத்தி, தால் (dhall = பருப்பு குழம்பு) செய்து வைத்தாள். மத்தியானம், எல்லோரும் சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சகிப்புதாசன் மனைவிக்கு ஒரு ஐடியா உதித்தது. "ஏங்க, இன்று இரவு அவுட்டிங் போய், கடோத்கஜ விலாஸில் சாப்பிடலாமா?" என்றாள்.
அவனும் ஆமோதித்து, 'அப்படீன்னா, நாம் சப்பாத்தி தாலை இப்போ குறைச்சு சாப்பிடுவோம். அப்பத்தான், இரவு ஒரு கட்டு கட்டமுடியும்" என்றான். பத்து சப்பாத்தியுடன் கொஞ்சம் தாலுடன் ரெஃப்ரிஜிரேட்டரில் எடுத்து வைத்தனர். மறுநாள் காலை வேலைக்காரிக்கு உதவுமே.
கடோத்கஜ விலாஸு க்கு போன் பண்ணி நாலு பேருக்கு டேபிள் புக் பண்ண சொன்னான். ஹோட்டலிலிருந்து பதில் ' காலை எட்டு மணிக்குள் புக்கிங் பண்ணனும் சார். இப்போ முடியாது. நேரே வாங்க, வெயிட் பண்ணி சாப்பிடலாம்'.
இரவு எட்டு மணிக்கு காரில் கிளம்பி, ஐந்து கிலோமீட்டர் அருகிலுள்ள கடோத்கஜ விலாஸுக்கு நால்வரும் படை எடுத்தனர்.
ஹோட்டலில், கம்பெனி எம்டி போல் டை கட்டிக்கொண்டிருந்த ஒருவர், டோக்கன் ஒன்றைக் கொடுத்தார்.
நம்பர் 48.
''ஒன்றரை மணி நேரம் ஆகும் சார்.'' இது ஹோட்டல்காரரின் பதில். நகரின் முக்கால் வாசி ஜனத்தொகை லீவுநாளில் இரவு சாப்பாட்டுக்கு கடோத்கஜ விலாஸ் படை எடுக்கும் என்பதால், ரெஸ்டாரண்டை ஒட்டி பெரிய வெயிட்டிங் ஹால் கட்டியுள்ளது அந்த ஹோட்டல்.
அங்கே குழந்தைகளுக்கு பொம்மை, கேம்ஸ் , சிறுவர் சிறுமிகளுக்கு கேரம், மற்றும் செஸ், தாய்மார்களுக்கு, தொடர் அழுமூஞ்சி சீரியல், மிடில் ஏஜ் மக்களுக்கு கிரிக்கெட், வயதானவர்களுக்கு பேப்பர், வீல் சேர், கொஞ்ச நேரம் தூங்க படுக்கை எல்லா வசதிகளும் உண்டு.
ஒரு மணி நேரம் கடந்தது. குழந்தைகள் பசி பசி என்று காத்த ஆரம்பிக்கவே, சகிப்புதாசன் மனைவியிடம், 'இன்னும் அரைமணி நேரம் இருக்கிறதே, வீட்டுக்குப்போய், குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பண்ணிக் கொடுத்துவிடு. உடனே திரும்பிடலாம் ' என்றான்.
நால்வரும் வீட்டுக்கு சென்று, குழந்தைகளுக்கு உணவு தந்துவிட்டு அரைமணியில் கிளம்பினர்.
கடோத்கஜ விலாஸை அடைய சற்று தாமதமாகி விட்டது. டிராஃபிக் ஜாம்.
டை கட்டிய மஹாநுபாவர், ஏற இறங்கப்பார்த்துவிட்டு 48 டோக்கன் நம்பரைக்கூப்பிட்டோமே சார். உங்க நம்பர் தாண்டியாச்சு. இன்னும் அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க. நடுவிலே அனுப்பறேன்' என்றார்.
குழந்தைகளை வெயிட்டிங் ஹாலில் தூங்கப்பண்ணியாச்சு. இவர்களின் முறை வந்தது. நாலு இரண்டாகி விட்டது. சகிப்புதாசனும் மனைவியும் அமர்ந்து மெனு கார்டைக்கேட்டனர். சர்வர், ' அதுக்கு அவசியமே இல்லை சார். இப்போ எல்லா ஐட்டமும் தீர்ந்துபோச்சு. சப்பாத்தி தால் மட்டும் தான் இருக்கு.'என்றார். வீட்டிலேயே அதே ஐட்டம் இருந்தாலும், வந்த பிரஸ்டிஜ் கெட்டுவிடும் என்பதால் , வேறு வழி இன்றி சப்பாத்தி தால் ஆர்டர் பண்ணினர். கூட்டத்தை சமாளிக்க, அவசரம் அவசரமாக செய்த சப்பாத்தி என்று சாப்பிடும்போதே தெரிந்தது. நொந்த மனத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருவரும் குழந்தைகளை எழுப்பி வீடு வந்து சேர்ந்தனர்.
பிரிஜ்ஜை திறந்து ஐஸ் வாட்டர் எடுத்த சகிப்புதாசனை பார்த்து உள்ளிருந்த சப்பாத்தி சிரிப்பது போல் இருந்தது.
இவன் மனத்தில் உதித்த பாடல்' ஏன் சிரித்தாய் என்னைப்பார்த்து".
சப்பாத்தி இவனைப்பார்த்து, 'நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே '' என்று பாடுவதுபோல் இருந்தது இவனுக்கு.
சகிக்க முடியலை.
Leave a comment
Upload