போன வாரம் நாம் நிறைய பாடல்களை பார்த்தோம். இந்த வாரம் அந்தப் பாடல்களில் மிகுந்து வந்த அணி வகைகளை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.
பொதுவாக அணிகலன்களை பெண்கள் மிகுதியாக அணிவார்கள். அது போல தமிழ் அன்னைக்கு மிகவும் பிடித்தமானது அணியிலக்கணம் ஆகும்.
அணிகளில் பலவகை உண்டு. நமக்கு பொதுவாக தெரிந்த மற்றும் மிகவும் புழக்கத்தில் இருக்கும் ஒரு சில அணிகளை முதலில் பார்ப்போம் என்ற முன்னுரையுடன் தொடங்கினார் பரணிதரன்.
உவமை அணி - இதைப்போல அது என்று விளக்குவதற்கு பயன்படுத்தப்படும் அணி இது.
எடுத்துக்காட்டு உவமையணி - இதைப்போல அது என்பதை மறைமுகமாக விளக்குவதற்கு பயன்படுத்தப்படும் அணி இது.
உருவக அணி - இதுதான் அது என்பதை விளக்குவதற்கு பயன்படுத்தப்படும் அணி இது.
பிறிது மொழிதல் அணி - பொதுவான ஒரு விஷயத்தை சொல்லி, வேறொரு விஷயத்தை நாமாக புரிந்து கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ள அணி இது.
மேலே உள்ள நான்கும் ஒரு குடும்பத்தைப் போல சின்ன மாற்றங்களை வைத்து மாறுபட்டுள்ள அணிகள் ஆகும்.
இதே போல உள்ள அடுத்த குடும்பத்தை பார்ப்போம்.
தற்குறிப்பேற்றல் அணி - பொதுவாக நடக்கும் ஒரு விஷயத்தை, தன்னுடைய கற்பனை வளத்தையும் ஏற்றி அதை வேறு விதமாக கூறுவது இந்த அணியாகும்.
உயர்வு நவிற்சி அணி - இயல்பாக நடக்கக் கூடிய ஒரு விஷயத்தை மிகவும் உயர்த்தி கூறக்கூடியது இந்த அணி.
இயல்பு அல்லது தன்மை நவிற்சி அணி - இயல்பாக இருக்கக்கூடிய விஷயத்தை இயல்பாகவே கூறுவது இந்த அணி.
சொற்பொருட்பின்வருநிலையணி - ஒரு சொல், ஒரு சொற்றொடரில் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளை தந்தால் அது இந்த அணியாகும். எடுத்துக்காட்டு, பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடலில் வருகின்ற ஒற்றை நாணயம் என்ற சொல்.
அடுத்த குடும்பம் கீழே
வஞ்சப்புகழ்ச்சி அணி - புகழ்வது போல பழிப்பதும், பழிப்பதை போல புகழ்வதும் இந்த அணியின் பொதுவான இயல்பு.
இல் பொருள் உவமை அணி - இந்த உலகில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல பாதித்து கூறுவது இந்த அணியாகும். இந்த அணியை பற்றி உங்களுக்கு சந்தேகம் வரலாம். அதனால் ஒரு எடுத்துக்காட்டை இங்கேயே கொடுக்கிறேன். அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் என்ற வரிகளில், அரளி விதையில் அரளிச்செடி மட்டும்தான் வளர முடியும். இங்கு துளசி செடி வளர்ந்தது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் இது இல்பொருள் உவமை அணியாகும்.
அடுத்த குடும்பத்தில் கீழே பார்ப்போம்.
சிலேடை அணி - இரண்டு பொருள்களை பற்றி எடுத்துச் சொல்லி, அந்த இரண்டிற்கும் ஆன ஒற்றுமைகளை கூறுவது இந்த அணியாகும்.
மடக்கு அணி - ஒரே சொல்லையோ அல்லது ஒரு சொற்றொடரையோ, வேறு வேறு விதமாக பிரித்தால் வேறு வேறு விதமான பொருளை தரக்கூடிய அணி இதுவாகும்.
இவைகளில் பொதுவான ஒரு சில அணிகளை மட்டும் தான் இங்கே கொடுத்துள்ளேன். மற்ற அணிகளை நாம் பின்வரும் வாரங்களில் பார்ப்போம். இவையெல்லாம் பார்ப்பதற்கு சற்று கடினமாக இருந்தாலும், இவைகளை நாம் இன்றளவும் பேச்சிலும், பண்பாட்டிலும், செயலிலும், பாடல்களிலும் பயன்படுத்திக் கொண்டு தான் வருகிறோம்.
இதற்கு எடுத்துக்காட்டாக தான் போன வாரம் நாம் பார்த்த பாடல்கள் இருக்கின்றன. உதாரணமாக :
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
என்ற பாடலில் வரும் ‘போல’ என்ற சொல் உவமை அணியை குறிக்கிறது. அதே பாடலில்,
சக்கரம்மா (சக்கரம் போல) எம்மனசு சுத்துதடி என்ற வரியில் சக்கரத்தை போல என் மனசு சுத்துதடி என்று கூற வேண்டிய இடத்தில், சக்கரமா என் மனது சுத்துகிறது என்று கூறி, போல என்ற சொல் வெளியில் வராமல் கவிஞர் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
அந்த பாடலிலேயே அடுத்த அணியும் இருக்கிறது. ஒரு வரியில்,
வண்டியில வண்ண மயில் நீயும் போனா என்று வருகிறதல்லவா, இதில் வண்ண மயில் என்ற சொல், அந்த பெண்ணையே நிறைய வண்ணங்கள் உள்ள மயிலாக நமக்கு காட்சிப்படுத்துகிறது. இதுதான் உருவகம்..
இதே பாடலில் உள்ள மற்றொரு அணி கீழே உள்ளது. அதாவது,
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம் என்ற வரியில், தினமும் வருகிற சூரியனை, இவளை பார்ப்பதற்காக தான் வருவது போல கவிஞர் தன் குறிப்பு ஏற்றி, தற்குறிப்பேற்றல் அணியாக நமக்கு காட்டுகிறார்.
இப்படி இந்த ஒரு பாடலிலேயே நான்கு விதமான அணிகளை பார்த்துள்ளோம். இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும், வரிக்கும் அணி உள்ளது. முடிந்தால் அதை கண்டுபிடித்து கமெண்டில் நீங்களே போடுங்கள்.
அடுத்ததாக நாம் இரண்டாவது பாடலைப் பார்ப்போம். தமிழகத்தின் உருவகமாக கவிஞர் ஒவ்வொரு மாவட்டத்தின் அல்லது நகரத்தின் சிறப்பு விஷயங்களை எடுத்து, ஒரு பெண்ணை புகழ்வது போலவும் நமக்கு காட்சிப்படுத்துகிறார். இதில் உருவகமே மிகுந்து வந்துள்ளது. அதாவது மீன் போன்ற கண்கள் என்று கூறாமல், மீன்களே கண்களாக உள்ளது என்று பாடியுள்ளார். இதுதான் உவமைக்கும் உருவத்திற்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு. இந்தப் பாடலில் உள்ள 90 சதவீத வரிகளில் உருவகம் மிகுந்து வந்துள்ளது.
அடுத்த இரண்டு பாடல்களிலும், உயர்வு நிகழ்ச்சி அணி தான் மிகுந்து வந்துள்ளது. அதாவது பொதுவான ஒரு விஷயத்தை மிகவும் உயர்த்தி கூறுவதில் இந்த இரண்டு பாடல்களும் சிறப்புற்று இருக்கிறது.
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
ஆகிய மூன்று வரிகளிலும், சாதாரண விஷயத்தை மிகவும் உயர்த்தி கவிஞர்கள் கூறியுள்ளனர். இதுதான் உயர்வு நிகழ்ச்சி அணி.
அடுத்த பாடலிலும் இரண்டு அணிகள் மிகுந்து வந்துள்ளன.
அலைகளை அலைகளை பிடித்து கொண்டு…
கரைகளை அடைந்தவர் யாருமில்லை…
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு…
சௌக்கியம் அடைவது நியாயமில்லை…
மேலே உள்ள வரிகளில், அலைகளைப் பிடித்துக் கொண்டு கரைக்கு வர முடியாது. தனிமையில் இருந்து கொண்டு சௌக்கியம் அடைய முடியாது என்று இரண்டு செய்திகளை கவிஞர் நமக்கு கூறுகிறார். அதைப்போல இது என்ற உவமையை நமக்கு வெளிப்படையாக கூறவில்லை. அதனால் இது எடுத்துக்காட்டு உவமை அணியாகும்.
அதேபோல,
ஜனனம் என்பது ஒரு கரைதான்…
மரணம் என்பது மறு கரைதான்…
இரண்டுக்கும் நடுவே ஓடுவது…
தலைவிதி என்னும் ஒரு நதிதான்…
என்ற வரிகளில், ஒரு பொதுவான தத்துவத்தை, இயல்பாகவே கவிஞர் இங்கு கூறுகிறார். இதை நாம் தன்மை நவிற்சி அணி அல்லது இயல்பு நவிற்சி அணி என்று பொதுவாக கூறுவோம். ஆனால் இந்த வரிகளில் எடுத்துக்காட்டு உவமை அணியும் மறைந்து வந்துள்ளது. அதனால் இதை பொதுவாக எடுத்துக்காட்டு உவமை அணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்மை நவிற்சி அணிக்கு எடுத்துக்காட்டாக இந்த பாடலிலேயே உள்ள கடைசி பத்தி உள்ளது.
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது…
மண்ணுக்குள் முடிகிறதே…
விஷயம் தெரிந்தும் மனித இனம்…
வி(பெ)ண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே…
என்ற வரிகளில் உலக நடப்பில் இயல்பாக உள்ளதை இயல்பாகவே கூறியுள்ளார். அதனால் இந்த வரிகள் தன்மை நவிற்சி அணியை சாரும்.
இதே போல சினிமா பாடல்களிலும், கதைகளிலும், கவிதைகளிலும், கட்டுரைகளிலும், பழமொழிகளிலும், விடுகதைகளிலும் உள்ள அணிகளை முடிந்தால் கண்டுபிடித்து கமெண்டில் போடுங்கள். வரும் வாரம் சங்க இலக்கியங்களிலும், பழங்கால நூல்களிலும், பழந்தமிழரின் வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய அணிகளை எடுத்து ஒவ்வொன்றாக பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் பரணிதரன்.
Leave a comment
Upload