ஒரு பத்திரிகை நிருபருக்கு கிடைக்கும் வாய்ப்பு நல்ல தொடர்புகள். சென்னையில் நிருபராக இருந்த காலத்தில் அவனுக்கு சில புதிய தொடர்புகளும் வாய்த்தன. ஒன்று அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பிரபுதாஸ்பட்வாரி என்கிற காந்தியவாதி. முதல் சந்திப்பிலேயே அவனை அவருக்குப் பிடித்துவிட்டது. அவனும் அவரை நெருக்கமானவராக அறிந்தான். அவருடைய அன்பினாலும், பழகும் விதத்தினாலும் மட்டுமல்ல, அவரது தோற்றத்தினாலும். அவர் அச்சு அசல் அவனது மாமா தாத்தா (தந்தையின் மாமா) போலவே இருந்தார். இருவரது புகைப்படங்களையும் அருகருகே வைத்தால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதே முகம், அதே கதர் குல்லாய், மாமா தாத்தாவும் சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் ‘பட்டு அய்யர்’ என்று அழைக்கப்பட்ட வி.எஸ்.வெங்கட்ராமன், சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறை சென்றவர். அவரது தந்தை இறந்தபோது, அவரை சிறை, சிறையாகச் சென்று தேடிப்பிடித்து, பரோலில் அழைத்து வந்தார்கள். நாடு சுதந்திரம் பெற்றதும், ஊட்டியில் முதல் முதலாக மூவர்ணக் கொடியை ஏற்றும் கௌரவம் “பட்டு அய்யருக்கு” கிடைத்தது.
ஒருமுறை இதுபற்றியும் அவன் கவர்னரிடம் சொன்னபோது, அவர் அவனுடன் மேலும் நெருக்கமானார். ‘‘இனி நான் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு நீ நிருபராக வருவதாய் இருந்தால், முன்னதாகவே ராஜ்பவனுக்கு வந்துவிடு. நாம் சேர்ந்து போகலாம்’’ என்று சொன்னார், விழாக்களுக்கு சென்றபோதெல்லாம் அவனை தன் காரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றார்.
பயணங்களின் போது அவர் தன் இளமைப் பருவம் பற்றியும், அரசியல் வாழ்க்கையைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வருவார். தலைமை நிருபரிடம் இதைச் சொன்னதும், அவர், கவர்னரின் எல்லா விழாக்களுக்கும் அவனையே அனுப்பி வைத்தார்.
காரில் சென்றபோதும், விழாக்களில் பேசியபோதும், ஆங்கிலத்தில் பேச்சைத் தொடங்கி, ஹிந்தியில் தொடர்ந்தாலும், அவர் இன்னது தான் பேசுகிறார் என்பதை அவன் எளிதில் ஊகித்துக்கொள்ள முடிந்தது.
சில சமயம் அவன் தன் ரிப்போர்ட்டை என்ன சொல்லியிருப்பார் என்ற ஊகத்தின் அடிப்படையில் தான் எழுத வேண்டியிருந்தது. எல்லாமே சமூக விழாக்கள் தான். சமூகம் பற்றிய பட்வாரியின் கருத்து என்ன என்று அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. ஒருமுறை அவர் கலந்து கொண்ட விழாவில் அவர் பேசியதை, சற்றே நீளமாக ரிப்போர்ட் செய்திருந்தான் அவன். அப்போது ஒரு மூத்த நிருபர் சொன்னார், ‘‘பட்வாரி பேசியதை நீ எழுதவில்லை, பேசியிருக்க வேண்டியதை எழுதியிருக்கிறாய்.’’ எது எப்படியோ ஒருமுறைகூட பட்வாரி தான் சொன்னது தவறாக எழுதப்பட்டது என்று பத்திரிகைக்கு மறுப்பு தெரிவித்ததில்லை. மொழி புரியாவிட்டாலும், ஒருவர் மனதைப் புரிந்து கொள்ள முடியும். அவர் நன்றாக பழகுபவராக இருந்தால்.
பட்வாரியின் விழாக்களில் மட்டுமே அவன் கலந்து கொண்டு வந்ததால், அலுவலகத்தில் அவனுக்கு ‘பட்வாரி’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. பட்வாரி குஜராத்காரர், கவர்னராக நியமிக்கப்படுவதற்கு முன்பு மது விலக்குப் போராட்டத்தில் மும்முரமாக இருந்தவர். நெருக்கடி காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.
தமிழ்நாட்டில் கவர்னராக இருந்தபோது, ஜனாதிபதி நீலம் சஞ்ஜீவரெட்டி சென்னைக்கு வந்திருந்தார். ஜனாதிபதிகள் எப்போதும் கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் தான் தங்குவது வழக்கம். ஒரே ஜனதாகட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தன்னை நியமித்தவர் என்றாலும், பட்வாரி நீலம்சஞ்ஜீவ ரெட்டியை கவர்னர் மாளிகையில் தங்க அனுமதிக்கவில்லை. ‘‘இங்கே மதுவிற்கும், மாமிசத்திற்கும் இடமில்லை & உங்கள் குழுவினருடன் நீங்கள் வேறு எங்காவது தங்கிக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு கறார் பேர்வழி.
கவர்னர் பட்வாரியுடன் ஒருமுறை பூந்தமல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கூட விழாவிற்குச் சென்றிருந்தான் அவன். அது முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் புதல்வி சரோஜினி வரதப்பன் நடத்தி வந்த பள்ளிக்கூடம். விழா முடிந்து கவர்னர் காரில் ஏறப்போகும் சமயம், அவனையும் அழைத்தார். அவன் இந்தப்பள்ளிக்கூடத்தில் சிலருடன் பேசிவிட்டு வருகிறேன் என்றான். சரியென்று சொல்லி கவர்னர் புறப்பட்டுவிட்டார். அவன் கவர்னருடன் வந்து இறங்கியபோது ஒரு போலீஸ் அதிகாரி, வணக்கம் தெரிவித்தார். அது கவர்னருடன் அவன் வந்ததினால் கிடைத்த மரியாதை என்று நினைத்தான். கவர்னரை வழியனுப்பிவிட்டு அந்த அதிகாரி பள்ளிக்கூட வாசலில் தன் ஜீப்பில் அவன் வரும்வரை காத்திருந்தார். அவன் சரோஜினி வரதப்பனைப் பார்த்துவிட்டு பள்ளிக்கூடம் பற்றிய சில தகவல்களை சேகரித்துக் கொண்டு திரும்பிய போது ஜீப்பில் இருந்து இறங்கிய அந்த அதிகாரி, தொப்பியை கழட்டிவிட்டு, திரும்பவும் வணக்கம் தெரிவித்து, ‘‘சார் என்னை தெரிகிறதா?’’ என்று கேட்டார்.
அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அப்போது அந்த போலீஸ் அதிகாரி, ‘‘சார் நான் மதுரை தியாகராஜர் கல்லூரியில் உங்களது மாணவன், இரண்டு வருடங்கள் எங்களுக்கு ஆங்கில வகுப்புகள் நடத்தினீர்கள். என் பெயர் துக்கையாண்டி, நான் மதுரவாயலில் டி.எஸ்பி ஆக இருக்கிறேன்’’ என்றார். கை குலுக்கி “மிக்க மகிழ்ச்சி” என்று அவன் சொன்னபோது போலீஸ் அதிகாரி கேட்டார், ‘‘ஐயா என்னுடன் எங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரமுடியுமா? காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’’ என்றார். அவனால் மறுக்க முடியவில்லை. அதே ஜீப்பில் ஏறிக்கொண்டு மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான். அங்கே அவனுக்கு காபி பிஸ்கெட் கொடுத்து உபசரித்தார். அதே ஜீப்பில் அவனை ஹிண்டு அலுவலகத்திற்கு கொண்டுவிட்டார். அப்போது செல்போன் இல்லை, ஆனால் தொடர்புக்கு வீட்டு எண்ணைக் கொடுத்தார்.
பின்னர் அதே துக்கையாண்டி டி.ஐ.ஜி, ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி, என்ற பதவி உயர்வு பெற்றார். எல்லா கால கட்டங்களிலும், அவர் தன் முன்னாள் ஆசிரியருடன் தொடர்பில் இருந்தார். பின்னர் அமெரிக்க தூதரகப் பணியில் இருந்த போது, போலி சாமியார் பிரேமானந்தா கைது செய்யப்பட்டபோது இரண்டு அமெரிக்கர்கள் அங்கு இருந்ததால் அவர்கள் என்ன ஆனார்கள் என்று துக்கையாண்டியிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. தகவலைச் சொன்ன துக்கையாண்டி அவர்களை விசாரணை செய்த பிறகு அனுப்பிவிட்டதாகச் சொன்னார். அதையடுத்து அவனுக்கு பின்னர் ஒரு முக்கியமான கட்டத்தில் உதவி தேவைப்பட்டது.
அவன் அப்போது அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகர். துணைத்தூதர் எர்னஸ்டயின் ஹெக் என்ற பெண்மணியின் கணவர் சென்னையில் காலமானார். துணைத் தூதரோ தூதரக அலுவலகப் பணி நிமித்தமாக ஊட்டியில் இருந்தார். அங்கிருந்து அவர் தூதருடன் மைசூர் செல்ல வேண்டும். பயணத்திட்டத்தின் பிரதி அவன் கையில் இருந்தது. உடனடியாக துணைத் தூதரை தொடர்பு கொள்ள வேண்டும். செல்போன் இல்லாத காலம். அப்போது நீலகிரியில் பணியில் இருந்தார் துக்கையாண்டி. அவரைத் தொடர்பு கொண்டு, எப்படியாவது துணை தூதருக்கு தகவல் சொல்லி சென்னைக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். பொதுவாக தூதர்கள், துணை தூதர்கள் பயணம் மாநில அரசுக்குத் தெரிவிக்கப்படும். துக்கையாண்டி தூதரும், துணைத்தூதரும் மைசூருக்கு சென்று கொண்டிருந்த காரை, வழியில் நிறுத்தி, துணைத்தூதருக்கு தகவல் சொல்லி, அங்கிருந்து சென்னை விமானத்தை பிடிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
தன் ஆசிரியர் மீது மதிப்பு வைத்திருந்த அந்த போலீஸ் அதிகாரி, இப்போது ஓய்வு பெற்றுவிட்டார், ஒரே காலகட்டத்தில் அவனது ஆசிரியரும், அவனது சக மாணவனும், அவனது மாணவனும் காவல்துறையில் வெவ்வேறு பதவிகளில் இருந்தார்கள், நட்புணர்வுடன்
Leave a comment
Upload