தொடர்கள்
தொடர்கள்
மனசே! டேக் டைவர்ஷன் 1. - "கவலைப்படாதீங்க ப்ரோ!" - மோகன் ஜி

20250023211651369.jpg

“அவளுக்குத் துளியாவது கவலை இருக்கிறதா பாரேன்!” என்று ஒரு சிறுமியைப் பார்த்து அவளின் தாய் அங்கலாய்ப்பதை பார்த்தேன்.

எதற்கும் கவலைப்படுதல் என்பது ஒரு வாழ்க்கை நியதியாகவே நாம் மாற்றிக் கொண்டு விட்டோம்.

உண்மையில், நம் இயல்பாக சந்தோஷம் ஒன்றே இருந்திருக்க முடியும். ஆனால் கவலைகள், மன உளைச்சல், பதட்டம் ஆகியவையே நமது இயல்பு என்று ஆனதால்தான் நம் வாழ்க்கையும் சிக்கலாகிப் போனது. நம் வாழ்வில் கவலையில் ஆழ்ந்திருக்கும் பொழுதுகள் யாவுமே நம் வாழ்நாளில் பயனற்றதாக கழிந்து போகிறது.

நாம் பெரும்பகுதி நேரம் கவலையிலோ மன உளைச்சலிலோ ஆழ்ந்திருக்க காரணங்கள் எவை என்று பார்க்கலாம். அவை பெரும்பாலும் நமது தொழில், குடும்ப சூழல், பிறருடனான ஒப்பீடு, தன் சக்திக்கு மீறிய செயல்களை மேற்கொள்ளுதல், மூப்பு, வருமானம், மாற்றத்திற்கேற்ப நம்மை தகவமைத்துக் கொள்ளாமை, உறவு சிக்கல்கள், உடல்நிலை, திருமணம், மண முறிவு போன்றவையாக இருக்கும்.

தெரிந்தோ தெரியாமலோ ‘கவலை நம் மனதை அரிக்கிறது’ என்கிறோம். நிஜம்தான். கவலை என்பது, கரையான் புற்று படர்ந்தாற்போல நம் மகிழ்ச்சியை ஆரோக்கியத்தை, நாம் பிறருடன் பழகும் விதத்தை எல்லாம் அரித்துத் தள்ளிவிடும். கவலை ஏற்படுத்திவிடும் பின்விளைவுகளை நாம் உணரும் முன்னர் காலமும் கடந்திருக்கும்.

நாம் கவலைப்பட்ட பல விஷயங்களை சில காலம் கழிந்து யோசித்துப் பார்த்தோமேயானால் நாமே நம்மை பார்த்து,’அட அசடே! இதற்கு போயா கவலைப்பட்டாய்?‘ என்று சொல்ல வைக்கும். பெரும்பாலான கவலைகளும் பொருளற்றுப் போயிருக்கும்; சில தன்னால் சரியாகி இருக்கும்; சிலவற்றை நாமே திறம்பட தீர்த்திருப்போம்.

சிந்திப்பதால் தானே கவலை வருகிறது அல்லவா? அதனால் சிந்திக்காமல் இருந்து விட்டால் கவலை இருக்காது என்பது பொருள் அல்ல. நமது சிந்தனை நாம் செய்ய வேண்டியவற்றை வகுத்துக் கொள்வதற்கும் திட்டமிடுவதற்கும் அவசியமான தேவைதான். அதை முறையாக செய்துமுடிக்கும் வகையில் சிந்திக்க வேண்டுமே அல்லாது கவலைப்படுவது சரியல்ல.

கவலைப்படுவதால் பிரச்சனைகள் தீரும் என்றால் முப்பொழுதும் அட்டவணை போட்டுக் கொண்டும் சங்கல்பம் பண்ணிக்கொண்டும் நாம் கவலைப்படலாம் தான்.

கவலைப்படுவதால் யாதொரு பயனும் இல்லை. மாறாக, அது ஏற்படுத்தும் சிக்கல்களும் நேர விரயமும் மட்டுமே மிஞ்சும்.

கவலையினால் கவனச் சிதறல், முடிவெடுக்க இயலாத குழப்பம், தனக்குத்தானே அறாது பேசிக்கொள்ளுதல், கோபம், எரிச்சல், குற்றவுணர்வு, சிடுசிடுப்பு, தனிமையில் நாட்டம் ஆகியவை உண்டாகும்.

நம் மனம் நேற்றைய நடப்புகள், அவமானங்கள், இழப்புகள், முடிவுறாத சிக்கல்கள், குற்ற உணர்வுகள் என்று கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்கும், அல்லது, வருங்காலம் என்னாகுமோ என்ற பதட்டத்திலும், அதீத எதிர்பார்ப்புகளிலும் கவலை கொண்டிருக்கும்.

இந்த விதம் நேற்றும் நாளையும் பற்றிய கவலைகளால், நம் கையில் இருக்கும் இன்றைய பொழுது வீணே கழிவது அவலமானது அல்லவா?

இன்றைய நாளை நன்கு திட்டமிட்டு, மகிழ்வுடன் கழித்தால் நாளை பற்றிய கவலைக்கு இடமே இல்லை.

கடந்தகால கவலைகளைக் கடந்து வாருங்கள். அவை மனித உறவுகளினால் ஏற்படும் சிக்கலாக இருந்தால் நமக்கு துரோகம் இழைத்தவர்கள், அவமதித்தவர்கள், நன்றி மறந்தவர்கள், குற்றம் சாட்டியவர்கள் ஆகியோரை மனதார மன்னித்து உங்கள் வாழ்வை மேலே தொடருங்கள்.

மிஞ்சி நிற்கும் பிற கவலைகளை முறியடிக்கவும் ஒரு தீர்வு உண்டு. கவலைக்கான நிகழ்வினை ஆர அமர அலசி ஆராயுங்கள். அவற்றை குறிப்புகளாக எழுதிக் கொள்ளுங்கள். அவற்றில் தவிர்க்க முடியாத நட்டங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை துப்புரவாகத் திட்டமிடுங்கள். திட்டமிட்டதை செயல்படுத்துங்கள்.

பிரச்சனைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதும், தவிர்ப்பதும் அவற்றை மேலும் பூதாகாரமாக வளர்க்கும். அதனால் கவலைகளும் பெருகும்.

பழைய தவறுகள் கற்பித்த படிப்பினைகளை வரவில் வைத்துக் கொள்ளுங்கள். அவை புத்திக் கொள்முதல் ஆகும்.

எதற்கெடுத்தாலும் கவலைப்படுவதே உங்கள் இயல்பாகி விட்டிருந்தால், உங்களின் அன்றாட நேரத்தைக் காலியாக விடாமல் மேலும் புதிய செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கவலைப்படுவதற்கு நேரமின்றி உங்களை செயலூக்கத்தில் ஆழ்த்திக் கொள்ளுங்கள்.

சோம்பலும் பகற்கனவுகளும் நம்மை எங்கும் இட்டுச் செல்லாது. அவை கவலையை வளர்க்கும் நாற்றங்கால்கள் ஆகும்.

தேவைப்பட்டால் மனோவியல் மருத்துவர்களிடம் கவுன்சிலிங் போன்ற வழிமுறைகளை மேற்கொள்ளலாம். எதற்கெடுத்தாலும் பதட்டமும் கவலையும் வரும் மனப்பங்கை மாற்றிக் கொள்ளலாம். நமது உற்ற நண்பர்களுடன் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளலாம். நம்மிலிருந்து நாமே தள்ளி நின்று பிரச்சினையை ஆராய்கையில் எளிதான தீர்வுகள் கிடைக்கலாம்.

கவலைகள் அழுத்தும் போது, அவற்றை கொஞ்சம் ஆறப்போடுங்கள். உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள். நன்கு தூங்க முயலுங்கள். ஓரிரு நாட்கள் தூக்க மாத்திரைகள் தேவைப்பட்டாலும் சரிதான். வாக்கிங், உடற்பயிற்சி யோகா தியானம் நகைச்சுவை உணர்வு போன்றவை உடலையும் உள்ளத்தையும் இலகுவாக்கும். தனிமையைத் தவிருங்கள். போதை வஸ்துகளை உபயோகிப்பது சிந்திக்கும் திறனை குறைத்து நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.

நம்பிக்கையூட்டும் நேர்மறை சிந்தனைகளை தமக்குத் தாமே சொல்லிக் கொள்ளுங்கள். கவலையின் தொடர் நினைவுகளை முறியடித்தல் அவசியம்.

கவலைகள் நம் தலைக்குமேல் வானில் வட்டமிடும் பறவைகள் போன்றவை. அவை அங்கே பறப்பது தவிர்க்க இயலாதது தான். ஆனால், அந்த கவலைப் பறவைகள் நம் தலைமீதே கூடு கட்டி குஞ்சு பொரிக்க விடுவதென்பது நமது தவறின்றி வேறு ஏது?

கவலைகளின் தாக்கத்தில் அரிதான இந்த வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். உங்கள் கவலைகளும், அதனால் உங்கள் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களும் உங்களுடைய குடும்பத்தை பாதிக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

நேர்மறை சிந்தனைகள், நம் நேரத்தை விரயம் செய்யாமல் செயலாற்றுதல், நம் வழிமுறையாகட்டும்.

‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!’ என்ற மனப்பான்மை திடம் தரும்.

கவலை ஏற்படுத்தும் பிரச்சனையால் ‘மிஞ்சிப் போனால் என்னதான் ஆகிவிடும்?’ என்று கணக்குப் போட்டு முடிவெடுங்கள். மாற்ற முடிந்தவைகளை மாற்றி கொள்ளுதலும், மாற்ற இயலாதவற்றை ஏற்றுக்கொள்வதும் கவலையை கட்டுக்குள் வைக்கும்.

இறுதியாக ஒன்று, உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தால், ‘நடப்பவை யாவும் உன் செயல்!’ என்று பாரத்தை இறைவன்பால் போட்டுவிட்டு உங்களால் இயன்றதை மேற்கொண்டு கவலையினின்று மீட்டுக் கொள்ளுங்கள்.

வள்ளுவரும் கூட,

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தவர்க்கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

என்று சும்மா ஒன்றும் சொல்லவில்லை.

‘கவலைப்படாதீங்க கவலைப்படாதீங்க!’ என்று சொல்லி உங்களுக்கு நான் கவலை கொடுத்து விட்டேனோ?!

ஒருமுறை கவலை தோய்ந்த முகத்தோடு இருந்த நண்பரிடம் கேட்டேன், ‘’என்ன பாஸ்? டல்லா இருக்கீங்களே... ஏதும் பிரச்சனையா?’’

அவரோ, “எல்லாமே பிரச்சினை தான் ஜி. யாரிடம் போய் முட்டிக்கொள்வது?’’ என்றார்.

நான் உங்களுக்கு மேலே கொடுத்த யோசனை போல நண்பருக்கும் ஒரு யோசனை சொன்னேன்…

“உங்க மனைவி கிட்ட பிரச்சனையை விவாதித்துப் பாருங்களேன். பெண்கள் சட்டெனத் தீர்வு சொல்வார்களே?’’

நண்பர் பெருமூச்செறிந்தார். ‘’சாமி! என் பிரச்சனையே அவள் தானே?’’

ஆகவே சொந்தங்களே! கவலைக்கு மாற்று அவரவர் கையில் இருப்பது தான். ஒருவருக்கான தீர்வு ஏனையவர்க்கு உதவாமல் போகலாம். எனவே ஆராய்ந்து தீர்வை நோக்கிச் செல்லுங்கள்.

கவலை இல்லாத மனிதராக வாழ வாழ்த்துகள்!