தொடர்கள்
சினிமா
பிளாக் (ஓடிடி) விமர்சனம்...- கி ரமணி

20241029190328934.jpg

காலப்பயணம்( time travel )என்ற தத்துவத்தை உபயோகிப்பது என்பது அறிவியல் புனை கதை எழுத்தாளர்களுக்கு பாதாம் அல்வா சாப்பிடுவது போல்.

ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்,என்று நிறைய விஞ்ஞான மேதைகள், "காலப்பயணம் என்பது விஞ்ஞானபூர்வமாக சாத்தியமாகலாம்.
ஆனால் அதற்கான நடைமுறை சாத்தியக் கூறுகள் இன்று மிக மிக கம்மி.
பிற்காலத்தில் ஒருவேளை இது
முடியலாம். " என்றதும் எழுத்தாளர்கள், காலப் பயணத்தில் முன்னும் பின்னும் மனிதர்கள் ஜாலியாகப் போய் வரும்படியாக கதை கட்ட ஆரம்பித்து விட்டார்கள். சில விஞ்ஞானத்துக்கு கட்டுப்பட்ட விதிகளை தங்களுக்குள் ஒற்றுமையாகக் கையாண்டார்கள்.
சில அடிப்படை சினிமா கதை விதிகள்:

1) காலத்தில் முன்னோக்கி மட்டும் செல்வதற்கு, ஒளியின் வேகத்துக்கு அருகாமை வேகத்தில் விண்கலத்தில் பிரயாணம் செய்து திரும்பலாம்.
2) காலத்தில் பின்னோக்கி/ முன்னோக்கிச் செல்ல புழுத் துளையில் ( worm hole)செல்லலாம்.
3) கொஞ்ச காலமே பின்னோக்கி செல்கிற போது, கடந்த கால 'நம்'மையே தற்கால 'நாம்'சந்திக்க வாய்ப்பு உண்டு.
அப்ப (தற்கால) நாம் ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும். எதிர்காலம் மாறும்படி ஏதாவது செய்து தொலைத்தால் அதனால் சரித்திரம் மாறி, நமக்கும் கஷ்டம் உண்டாக, நாமே இல்லாமல் போக,வாய்ப்பு உண்டு.
4) நமக்கு நம்முடைய பழைய காலத்து "நான்" யார் என்று அறிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.ஆனால் நம்முடய ரெட்டையர் போன்ற,பழைய காலத்து 'நான்' க்கு அது தெரியாது. நம்மை ஃபிராடு என்று கூட அவர் நினைக்கலாம்.
5) பழைய காலத்துக்கு சென்று அங்கேயே நாம் ஈஸியா செட்டில் ஆகிவிட முடியாது. ஒன்று ஒரிஜினல் நான்...,இல்லாட்டி பழைய காலத்து நான்,.. இந்த இருவரில் ஒருவர் தான் அங்கு நிரந்தரமாக இருக்க முடியும்.

இப்படியே சில கட்டுப்பாடுகளுக்குள் கதை கட்டி, கற்பனைக் குதிரையை காலப் பயணம் மேற்கொள்ள வைத்துவிட்டு, மேலே சொன்ன எல்லைகளைத் தாண்டி குதிரை தடுக்கி விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது "பிளாக் " படக் கதைக்குள் வருவோம்.

ஜீவா, பிரியா பவானி சங்கர், இருவரும் தம்பதிகள்.வழக்கம்போல சின்ன சச்சரவுகள்.அதற்கு நிவாரணமாக தங்கள் புத்தம் புது வீட்டுக்கு சென்று சில நாள் தங்கத் தீர்மானிக்கிறார்கள்.

நிறைய ஒரே மாதிரி வீடுகள் உள்ள கடற்கரைப் பக்கக் குடியிருப்பு. இவர்கள் தான் அங்கு முதல் குடியேறிகள்.

புது வீட்டில் கரண்ட் போக ஜெனரேட்டர் ஆன் செய்வதற்காக இவர்கள் வெளியில் சென்று திரும்பும் போது இவர்கள் வீட்டில்,சில மாறுதல்கள் தென்படுகின்றன. மேலும் வெளியே சென்று வரும்போது புது மாற்றங்கள் தொடர்கின்றன.

முக்கியமாக,இவர்கள் வீட்டுக்குள்ளே இவர்களே எட்டிப் பார்க்கும்போது, இவர்களைப் போலவே ரத்தமும் சதையுமாக இன்னொரு ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் இயல்பாக உள்ளே இருக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியமாகும்?

இதனால் ஒரே களேபரம். தேஜாவு போன்ற நினைவுகள்.எது எப்போ நடந்தது என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொள்ளும் குழப்பம்.

அப்புறம்தான் விஷயம் புரிகிறது ஜீவாவுக்கு.
அங்கு சூப்பர் மூன் முழு நிலவில் தெருவில் இருக்கும் காரிருள் பகுதியை இவர்கள் கடக்கும் போது
வேறு காலத்துக்கு( time line )இவர்கள் கடத்தப்படுகிறார்கள். இதனால் சில சமயம்,நடந்த விஷயங்கள் நடக்காதது போலும் நடக்காத விஷயங்கள் நடந்தது போலும் இவர்களுக்கு தோன்றுகிறது.

அப்புறம் 1964 இல் நடந்த ஒரு நிகழ்ச்சியையும்,இன்றைய நிகழ்ச்சியையும் சேர்த்து, அந்த தினங்களில் நிலவு பூமிக்கு மிக அருகே வருவதால்( சூப்பர் மூன்) கரும்பிரதேசம் ஒன்று உண்டாகி,வேர்ம் ஹோல் ( worm hole )ஆகி,அதன் குறுக்கில் வந்தவரை குடைராட்டிணம் போல சுழற்றி
வேறு நேரம்,காலத்துக்கு கொண்டு செல்கிறது என்று நம் காதுகளில் அறிவியல் பூர்வமாக பூச்சூட்டுகிறார்கள். நாமும் அதை ரசித்துக் கொண்டே படத்தில் ஒன்றுகிறோம்.
கடைசி காட்சியில் படம் புது திருப்பத்துடன் முடிகிறது.
பிளாக் 2 க்காகவா?

ஜீவாவுக்கு இது ஒரு சிறந்த படம்.
பிரியா பவானி சங்கர் ரொம்பவும் இயற்கையாக படத்துடன் ஒன்றுகிறார்.

முக்கால் வாசி படத்தை இதே இரண்டு பேரை வைத்து படு சிக்கனமா ஆனால் பார்வையாளர் ஈடுபாடு குறையாமல் எடுத்த படக்குழுவுக்குபாராட்டுகள்.
இன்று நேற்று நாளை, மாநாடு போன்ற காலப்பயணம் சம்பந்தமாக ஏற்கனவே வெளிவந்த படங்களில் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருந்ததால் ரசிகர்கள் அதில் மயங்கி ரொம்பவும் தூண்டித் துருவி லாஜிக் சம்பந்தமான சந்தேகங்கள் கேட்காமல் இருந்தது போல தோன்றியது.

இந்தப் படம் ரொம்ப சீரியஸான விஞ்ஞான சம்பந்தமான படமாக இருப்பதால் நிறைய டெக்னிக்கல் சந்தேகங்கள் கேட்பதற்கு வாய்ப்பு உண்டு.ஆனால் படத்தை விறுவிறுப்பு குறையாமல் புத்திசாலித்தனத்துடன் கடைசி வரை,கொண்டு போனதால், இந்தக் கேள்விகள் கேட்பதற்கு நேரமோ முக்கியத்துவமோ இல்லாமல் போகிறது.

இந்தப் படம் கோஹிரன்ஸ் (Coherence)என்கிற ஆங்கிலப் படத்தின் ரீ மேக் என்கிறார்கள்.

இருப்பினும் ஹாலிவுட் காரர்கள் மட்டுமே இப்படிப்பட்ட குழப்பம் நிறைந்த அறிவுபூர்வமான அறிவியல் கதைகள் எடுக்க முடியும் என்ற நம் கருத்தை மாற்ற வைத்த, கதாசிரியர்/ இயக்குனர் பாலசுப்ரமணியையும் அவரது ,படக்குழுவையும் நாம் பாராட்டலாம்,அவர்களுடைய புத்திசாலித்தனம் கலந்த இந்த முயற்சிக்காகவே .