தொடர்கள்
Other
லைசென்ஸ் வாங்க மட்டும் தாங்க அந்த நம்பர்...ஒப்பிலி பத்மநாபன் 

20241029184113528.jpeg
லைசென்ஸ் வாங்க மட்டும் தாங்க அந்த நம்பர்...

தலைவர் ரஜினிகாந்த் வாழ்க்கைய எட்டு எட்டா பிரிச்சி, அதுல நம்ம எந்த எட்டுல இருக்கோம்னு புரிஞ்சுக்கணும்னு சொன்னாரு. அப்படி ஒரு நம்பர் அந்த எட்டு. ஆனா, அதே எட்டாம் நம்பர் மோட்டார் வாகன துறைக்கு பிடிக்காது ஒரு எண் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஆமாங்க தமிழ் நாட்டின் மோட்டார் வாகனத்துறை எட்டாம் எண் மற்றும் அதன் கூட்டுத்தொகையா வர எண்கள் உதாரணமா எட்டு, பதினேழு, இருவத்தியாறு, முப்பத்தைந்து, இப்படி நூறு வரை உள்ள (கூட்டினால் எட்டு வரக்கூடிய) எண்களை பயன்படுத்துவதில்லை.

இந்த வழக்கம் எப்போ, எப்படி ஆரம்பித்ததுனு தெளிவா துறை அதிகாரிகளுக்கு சொல்ல தெரியல. மோட்டார் வாகன ஆய்வாளர் ஏழுமலைகிட்ட கேட்டதற்கு 1993ல தான் இந்த TN என்ற புது மோட்டார் வாகன ரெஜிஸ்டரேஷன் முறை அமலுக்கு வந்தது. அப்போவே 8 மற்றும் அதன் கூட்டுத்தொகை எண்களை பயன்படுத்த வேண்டாம்னு அரசாங்கம் முடிவு செஞ்சுட்டாங்க அப்ப்டின்னாரு அவர்.

இன்னொரு அதிகாரிகிட்ட கேட்டதுக்கு பொதுவாவே தமிழ்நாட்ல எட்டாம் நம்பர் அப்படினாலே ஒரு சிறிய தயக்கம். இது ஒரு ராசியில்லாத நம்பர் அப்படினு நம்மில் பலருக்கு ஒரு பயம் கலந்த நம்பிக்கை. அதனாலேயே பலரும் இந்த எட்டாம் நம்பரை வாங்க யோசிப்பாங்க. இன்னும் சிலபேர் கூட்டினா மொத்த தொகை எட்டு வரக்கூடாதுன்னு துறை அதிகாரிகளிடம் கேட்டது எனக்கு தெரியும், என்கிறார் அவர்.

எப்பவுமே தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கு எண் வாங்கும்போது எட்டு மற்றும் அதன் கூட்டுத்தொகை எண்களாக வர எட்டும், வேண்டாத எண்கள்தான். இது பல வருடங்களாகவே நடைமுறையில் இருக்கு. TN முறை அமலுக்கு வர்றதுக்கு முன்பாகவே இந்த 8 ராசியில்லாத எண்ணாகவே கருதப்பட்டிருக்கிறது என்று ஏழுமலை கூறினார்.

இந்த எண் உள்ள வண்டிகள் அடிக்கடி விபத்துல சிக்கும். அதனாலே அந்த எண் வாங்க ஆளே இல்லாம போச்சு. அதே TN ரெஜிஸ்டரேஷன் வந்ததுக்கு அப்பறமும் தொடர்ந்து எட்டாம் எண் வேண்டாம்னு முடிவே பண்ணிட்டாங்க, என்கிறார் முன்னாள் அதிகாரி மோகன் ராம்.

ராசி பலன் சொல்றவங்க கூட சனி பகவான் 8ஆம் எண் வீட்டில் வந்தார்னா நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரும்னு சொல்றத நாம கேட்டிருப்போம். அதனாலே எட்டாம் நம்பர் என்றாலே ஒரு பயம்தான். ஆனா பாருங்க நமது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ், மற்றும் தெலுங்கானாவில் இந்த எண் கொண்ட வாகன ரெஜிஸ்டரேஷன் நடை முறையில் இருக்கு.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்ல வெள்ளிக்கிழமைகள்ல வர 13ஆம் தேதி மிகவும் அபசகுனமாக கருதராங்க. எல்லா ஊருலயும் இந்த மாதிரி ஒரு (மூட?) நம்பிக்கை இருக்கத்தான் செய்யுது.

மத்தவங்களுக்கு எப்படியோ, எனக்கு எப்பவுமே எட்டு ஓகே நம்பர்தாங்க. பத்தாவது படிக்கறச்சே என்னோட எக்ஸாம் ரெஜிஸ்டரேஷன் எண்ண கூட்டினா டோடல் எட்டுதான். பன்னிரண்டாம் வகுப்புலயும் அதே கதை தொடர்ந்தது. இப்ப சென்னைல நான் இருக்குற வீட்டின் எண்ண பாருங்களேன்-112/4 - எட்டுதான்! எனக்கு இது தாங்க ராசியான நம்பர்.