தொடர்கள்
நவராத்திரி
தாம்பூலம் எடுத்துக்கங்க ...  - மரியா சிவானந்தம் 

2024904155010476.jpg

பொங்கி பிரவாகிக்கும் நதியின் அழகோடு வந்து விட்டது நவராத்திரி ..

பண்டிகைகளில் வண்ண மயமானது ,பெண்களின் மனதுக்கு உகந்தது நவராத்திரி .

இந்த கொண்டாட்ட காலங்கள் நம் உள்ளத்துக்கு புத்துணர்ச்சியை ,புதிய எழுச்சியைத் தருகிறது.

காலங்களாய் கடை பிடிக்கும் வழக்கங்களை இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற விதத்தில் , நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு இந்த நாட்களை இனிமையாக கழிக்கிறோம் .

நவராத்திரி என்றாலே அம்பாளுக்கு தினம் ஒரு நிவேத்தியம ,தினம் ஒரு சுண்டல் , தினம் ஒரு நிறத்தில் உடை ,அலங்காரம் . குறிப்பாக கொலு பார்க்க வரும் பெண்களுக்கு தரப்படும் தாம்பூலம் , இவை பிரதானம்.

வழக்கமாக இந்த தாம்பூலத்தில் ,மங்கல பொருட்கள் வைத்து தருவது உண்டு .மஞ்சள்,குங்குமம் , வளையல் ,சீப்பு ,மஞ்சள் கயிறு, ஜாக்கெட் பிட்அல்லது சேலை இவற்றுடன் சுண்டல் அல்லது புட்டு ,தேங்காய் ,பழம்,பூ என்று மனதுக்கு பிடித்த வகையில் வைத்துத் தருவது உண்டு. மக்களின் பொருளாதார வசதி , வாங்கும் திறன் இவை பொறுத்து இந்த தாம்பூலம் வீட்டுக்கு வீடு மாறுபடும்.

நம் பெண்களின் கற்பனைத் திறன், ரசனை ,அழகுணர்ச்சியை இந்த தாம்பூலத்தில் நாம் காண்கிறோம்

நமது வாசகி கீதா கண்ணன் அவர்கள் ,'இந்த தாம்பூலம் வழங்கும் வழக்கத்தில் புதிதாக ஏற்பட்டு வரும் மாறுதல்களை பற்றி நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார் .

2024904155318632.jpg

' வழக்கமாக மஞ்சள் குங்குமம் போன்ற மங்கலப்பொருட்கள் உடன் வழங்கப்படும் ஜாக்கெட் பிட் அல்லது சேலை வைத்துத் தருவது உண்டு. இந்த ஜாக்கெட் பிட்களை அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை என்பதால் வேறு சில பொருட்களைச் சேர்த்துத் தரும் வழக்கம் வந்துள்ளது .

2024904160337412.jpg

பெண்கள் உபயோகிக்க கூடிய சின்ன கைப்பைகள் , பர்ஸ்கள் , ஸ்டிக்கர் கோலம், சின்ன பொம்மைகள் , எவர்சில்வர் சம்படம் , தலை அலங்கார பூக்கள் காஜல் , சின்ன சின்ன பொம்மைகள் ,வெள்ளி போலவே தோன்றும் கலைப்பொருட்கள் ,அம்பாளுக்கு சாற்றக்கூடிய வளையல் மாலை ,கொலு பொம்மைகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகள் என்று வித விதமாக தாம்பூலப் பையில் வைத்து தருவது இப்போது வழக்கமாகி வருகிறது " என்றார் .

2024904160442339.jpg

சென்னையைச் சேர்ந்த Pots &Petals நிறுவனத்தை நடத்தி வரும் சுதா ரமேஷ் , நவராத்திரிக்கான பிரத்தியேக தாம்பூல பைகளைத் தயாரித்து தருகிறார் .

2024904155407555.jpg

அவரிடம் பேசிய போது

"தாம்பூலப் பைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் வந்து உள்ளது . மஞ்சள் ,குங்குமம் அடங்கிய பிளாஸ்டிக் பட்டைகளை எல்லோரும் தருகிறார்கள் . அதன் தரமும் குறைவு .எனவே பயன்படுத்தாமல் சேர்த்து வைக்கிறோம். எனவே நான் மிகவும் சிந்தித்து ,இயற்கை பொருட்களைக் கொண்டு தாம்பூலப் பையைத் தயாரித்துள்ளேன் .

2024904160923708.jpg

ஒரு பாக்குமட்டை தட்டில், எவர் சில்வர் டப்பாக்களில் கோபுரம் பூசு மஞ்சள் , குங்குமம் ,மஞ்சள் கயிறு , குந்தன் ஹேர் க்ளிப்ஸ், மெஹந்தி கோன்,சாந்து பொட்டு இவற்றை வைத்து நெட் துணியால் பேக் செய்து அழகான தாம்பூலமாக தருகிறேன்.

2024904161017938.jpg

அத்துடன் பிரிட்ஜில் ஒட்டக்கூடிய பிரிட்ஜ் மேக்னெட்ஸ் (Fridge Magnets ) குழந்தை கடவுள் உருவங்களைத் தாங்கி வருகிறது .இயற்கை மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நலங்கு மாவு, குப்பை மேனி சோப்பு, வாசனை மெழுகு வர்த்திகள் போன்றவற்றையும் தாம்பூலத்துடன் சேர்த்து ரிட்டர்ன் கிப்ட் (return gift ) தரலாம்" என்றார் .

2024904160232742.jpg

சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் கொண்டாடும் நவராத்திரி உன்னதமானது. தாம்பூலம் தருகிறேன் என்று மேலும் பிளாஸ்டிக் சேர்க்காமல் இவ்வாறு தருவது வாங்குபவருக்கும் ,கொடுப்பவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது .

பண்டிகைகள் பகிர்ந்து வாழ்தலை சாத்தியமாக்குகின்றன .அயல்நாடுகளில் ,இந்த தினங்களுக்காக காத்திருந்து நண்பர்களுடன் உணவையும் ,உணர்வையும் பகிர்ந்து ஒரு கொண்டாட்டமாக செய்வதை பார்க்கிறோம் .

ஒரு கொலுவின் போது , எங்கள் அடுக்கத்தில் ஒரு பெண்மணி கொலு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது . அங்கு வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களின் குழந்தைகளை எல்லோரையும் ஒரே நாளில் வரவழைத்து அவர்களுக்கு சுண்டல் ,பாயசம் ,சர்க்கரைப் பொங்கல் என்று சாப்பிட வைத்தார் . பின் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நோட்டு புத்தகம் , பேனா , பென்சில் பெயின்டிங் பொருட்கள் என்று அளித்தார் .எல்லா குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர் . கலைமகளை இதை விட அழகாக வணங்க முடியாது .

அதைப் பார்க்கவே நெகிழ்ச்சியாக இருந்தது . சிறிய பொருட்கள் தரும் பெரிய ஆனந்தத்தை உணர முடிந்தது . நாம் மனமுவந்து அளிக்கும் தாம்பூலத்தில் அன்பையும் ,மகிழ்ச்சியையும் கலந்தே அளிப்போம்

நவராத்திரி வாழ்த்துக்கள்