தொடர்கள்
ஆன்மீகம்
நற்பலன்களை அள்ளி தரும் நவராத்திரி வழிபாடு...!! - ஆரூர் சுந்தரசேகர்.

Navratri worship which gives good results...!!

உலகம் முழுவதும் 'சக்தி மயம்' என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்’ தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் குறைபாடு ஏற்படுகிறதோ அப்பொழுதே பராசக்தி பல தோற்றங்களை எடுத்து அதர்மங்களை வீழ்த்தி தர்மத்தை நிலைபெறச் செய்திருக்கிறார். மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த அவதாரம் தான் ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
அரக்கன் மகிஷாசுரனின் அட்டூழியங்களில் இருந்து இவ்வுலகைக் காப்பாற்றிய ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜை செய்து வழிபடுவதே நவராத்திரி.
நவராத்திரி என்பது துர்கா தேவி போர் புரிந்த ஒன்பது நாள் இரவுகளையும், பத்தாம் நாள் அவர்கள் பெற்ற வெற்றியையும் குறிக்கிறது. ஆகவே ஒன்பது நாட்களை நவராத்திரி தினமாகக் கொண்டாடி பத்தாம் நாள் விஜய தசமியாகக் கொண்டாடப்படுகிறது.

Navratri worship which gives good results...!!

நவராத்திரி கொண்டாட்டம்:
நவராத்திரியின் சிறப்பம்சம் கொலு. கொலு என்றால் அழகு என்று பொருள். மேலும் கொலு வைத்துக் கொண்டாடும் வீடுகள், கோயில் சந்நிதிக்கு நிகரானது என்கின்றன ஆன்மீக நூல்கள். நவராத்திரியில் மண் பொம்மைகளை வைத்து வழிபடும் முறை தொன்றுதொட்டு நடந்து வருகின்றது. பெரும்பான்மையாகத் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவில் சிறப்பான முறையில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது.
வட இந்தியாவிலும் நவராத்திரி பெரும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, பீகார், மத்தியப்பிரதேசம், பஞ்சாபின் வடபகுதி, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் இதனைக் கொண்டாடுகின்றனர். வட மாநிலங்களில் நவராத்திரி ஒன்பது நாள்கள் இரவும் சிறப்பு வழிபாடுகள், தண்டியா மற்றும் கர்பா வழிபாடுகள் நடைபெறும். இந்தியா மட்டுமின்றி இலங்கை மற்றும் உலகில் உள்ள அனைத்து இந்து மக்களால் நவராத்திரி இன்றும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

Navratri worship which gives good results...!!

நவராத்திரி வழிபாடு:
நவராத்திரியில் துர்க்கையின் வழிபாடு மிகவும் முக்கியமானது.
துர்க்கை என்றால் வடமொழியில் “வெல்லமுடியாதவள்” என்றும், தமிழில் வெற்றிக்கு உரியவர் என்றும் பொருள். வராஹ புராணத்தில் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் நவதுர்க்கைகளின் பெயர்களும், அவரது அம்சங்களும் ஸ்லோகங்களாகக் கூறப்பட்டுள்ளது.
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.
இந்த நவராத்திரி பண்டிகை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

Navratri worship which gives good results...!!

அம்பாளைச் சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம். வாழ்க்கைக்கு முக்கியமான கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் முறையே மும்மூன்று நாட்களாகக் கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று சக்திகளாக ஒன்பது நாட்கள் வழிபடுகின்றோம்.
புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல், நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி. அடுத்த நாளான தசமியில் விஜயதசமி கொண்டாடுகிறோம்.
விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தினாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரியத் தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

Navratri worship which gives good results...!!

இராமர் கொண்டாடிய நவராத்திரி பூஜை:
நவராத்திரி பூஜையைத் தெய்வங்களும், தேவர்களும் செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி இராமர் முதன் முதலில் நவராத்திரியில் பூஜை செய்து, இராவணனை அழித்து சீதையை மீட்டு வந்ததாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட இந்தியாவில் நவராத்திரியில் ராமாயணக்கதை 'ராம்லீலா' என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். இராவணனின் உருவ பொம்மைகளை, விஜயதசமி தினத்தன்று சொக்கப்பனை கொளுத்தி மகிழ்வர்.

Navratri worship which gives good results...!!


மஹா லெக்ஷ்மி, அலர்மேல் மங்கை என்ற பெயருடன் பிறந்து, திருப்பதி வேங்கடேச பெருமானைத் திருக்கல்யாணம் செய்யும் பொருட்டு, நவராத்திரி ஒன்பது நாள்கள் விரதமிருந்ததாக ஒரு புராணக்கதை உண்டு. அதனால் திருமலை திருப்பதியில், நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது.
பிரம்மா, விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர்,, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

Navratri worship which gives good results...!!

ஒரு நவராத்திரி சமயத்தில் காஞ்சி மஹா பெரியவா ஆற்றிய அருளுரை :
உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்குச் சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையைப் பூஜிக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபடச் செல்வச் செழிப்பு உண்டாகும். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியைப் பூஜிக்க கல்வி வளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.
தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்துவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்ய வேண்டும். பத்தாவது நாள் விஜயதசமியாகக் கொண்டாடவேண்டும். இந்நாட்களில் சௌந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றைப் பாடலாம். நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவது சிறப்பு.
கன்னி பூஜை: முதல்நாள், ஒரு கன்னிக்கும் (பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும் பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்குப் பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும். இதே போல், இரண்டாம் நாள் இரு கன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் என ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை அதிகப்படுத்தி, ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்குப் பூஜை செய்ய வேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.

Navratri worship which gives good results...!!


கொலு விதிமுறை: நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையைத் தினமும் அலங்காரம் செய்ய வேண்டும். கொலு வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடாது. தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது.

​​​​Navratri worship which gives good results…!!

காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நற்பலன்களை அள்ளி தரும் நவராத்திரி வழிபாடு செய்து
முப்பெரும் தேவியர்களின் பரிபூரண அருளை அனைவரும் பெறுவோம்!!

ஓம் சக்தி..!! பராசக்தி…!!!