தொடர்கள்
அரசியல்
லட்டு …கோவிந்தா..??! -தில்லைக்கரசிசம்பத்

2024903200447462.jpg

திருப்பதி லட்டு பிரச்சனையில் செப்டம்பர் 30 அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து இந்த விஷயத்தில் சந்திரபாபுநாயுடுவை கண்டித்தது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பதி லட்டு விவகாரம் சில வாரங்களாக நாடு முழுவதும் அதுவும் ஆந்திராவில் பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட் தண்ணீரைத்தெளித்து சிறிது கட்டுப்படுத்தியிருக்கிறது.

“ஜூலையில் பரிசோதனை முடிவு வந்த உடனே சொல்லாமல் தாமதமாக செப்டம்பர் 18 அன்று வெளியிட்டது ஏன்? லட்டில் கலப்பட நெய் என தெரியவந்தவுடனே விசாரணைக்கு உத்தரவு இட்டதாக கூறுகிறீர்கள். பரிசோதனை அறிக்கையில் சோதனை செய்யப்பட்ட கலப்பட நெய்தான் ஜெகன்மோகன் ஆட்சியில் லட்டு செய்யப் பயன்பட்டது என்று அறிக்கையில் சொல்லப்படவில்லை. சிறப்பு விசாரணை குழு முடிவு வெளியாகும் வரை காத்திருக்காமல் ஏன் உடனே பத்திரிகையாளர்சந்திப்பில் தெரிவிக்க வேண்டும்? அறிக்கையில் முடிவான ஆதாரம் இல்லாத நிலையில் , கலப்படம் உள்ளதா என்று உங்களுக்கே அது உறுதியாக தெரியாத போது, எதற்காக அந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டீர்கள்?” என

நீதிபதி கே.வி.விஸ்வநாதன் சரமாரியாக கேள்விக்கணைகளை சந்திரபாபுநாயுடுவை நோக்கி அடுக்கியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பட்டாபி ராம் “ நாங்கள் சொன்னது சொன்னதுதான். கலப்படநெய்யை லட்டு செய்ய பயன்படுத்தியிருக்கிறார்கள். ரூ319க்கு ஒரு கிலோ நெய் வாங்கியிருக்கிறார்கள் என்றாலே தெரியவில்லையா அது கலப்படநெய் என்று!” என்று அடித்து பேசுகிறார்.

இந்நிலையில் சுப்ரீம்கோர்ட் ஆந்திர அரசின் சிறப்பு விசாரணைக்குழுவின் நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடை போட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அரசுசாரா விசாரணை குழுவை அமைக்கலாமா என சுப்ரீம்கோர்ட் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை வினவியுள்ளதால் இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

இதற்கிடையில் லட்டு விவகாரம் வெளிவந்த நிமிடம் முதலிலிருந்தே நடிகரும், ஆந்திராவின் துணைமுதலமைச்சருமான பவன்கல்யாண் அவரது படங்களில் வரும் ஆக்ரோஷமான இளைஞன் போலவே நியாயத்துக்காக படாதபாடுப் பட்டுக்கொண்டிருக்கிறார். கடுமையான விரதம் 11 நாட்களுக்கு எடுத்தது மட்டுமின்றி, திருப்பதி கோயில் மலையின் படிகட்டுகளில் விளக்கேற்றி, பரிகாரபூஜை செய்து சனாதனத்தின் புனிதத்தை காப்பாற்ற பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இது தெரியாமல், நடிகர் கார்த்தி ஹைதராபாத்தில் “மெய்யழகன்’ பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்துக்கொண்ட போது ஒரு குறும்புக்கார தொகுப்பாளினி கார்த்திக்கை நோக்கி “கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என தெலுங்கில் கேட்டார். சிறுத்தை படத்தில் கார்த்தி பேசும் வசனம்தான் அது.

இருந்தாலும் “லட்டை பற்றி இந்த நேரத்தில் பேசுவது சரியல்ல!” என்று அந்த கேள்வியை விலக்கினார் கார்த்தி. அவ்வளவுதான்..அந்த கேள்வியை கிண்டலுடன் கேட்ட நபரை விட்டுவிட்டு, அந்த விழாவில் அதைக்கேட்டு சிரித்த தெலுங்கு தேசத்தவர்களையும் விட்டுவிட்டு, “அதை பற்றி பேச வேண்டாம்” என்று நேர்மையாக பதில் சொன்ன தமிழர் கார்த்தியை மட்டும் பிடித்துக்கொண்டு பவன்கல்யாண் வறுத்தெடுக்க , உடனே கார்த்தி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிடும் அளவுக்கு விவகாரம் போய் முடிந்தது.

கார்த்தியின் நல்ல நேரம் லட்டு வசனம் (!) பேசப்பட்ட சிறுத்தை படம் பல வருடங்களுக்கு முன்னமே வெளியாகி விட்டது. இப்போது வெளியாகி இருந்தால் கார்த்தியை ஆந்திர கோர்ட்டுக்கு அலைய விட்டிருப்பார்கள். நாட்டில் “லட்டு” என்கிற பெயரையே உச்சரிக்க பயந்த சூழ்நிலை உருவான நிலையில் திடீரென சுப்ரீம் கோர்ட் நாயுடுவை குட்டியதால், லேசாக சடன் ப்ரேக் போட்ட துணை முதல்வர் பவன்கல்யாண் “ என்ன இருந்தாலும் சுப்ரீம் கோர்ட் லட்டில் கலப்பட நெய் இல்லவே இல்லை என்று சொல்லவில்லையே.!

அது போதாதா?! ” என்று தனக்குதானே ஆறுதலாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தம் வாழ்நாளில் இதுவரை சைவ உணவையே உண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், லட்டை உண்டு விட்டோமே என்று “லட்டில் விலங்கு கொழுப்பு எதுவும் இருந்திருக்கக்கூடாது ஆண்டவா. அது வெறும் வதந்தியாக இருக்க வேண்டும்”என்று வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையான பக்தர்கள் அப்படி தான் இருப்பார்கள்.

2024903201139372.jpeg

ஆனால் அரசியல்வாதிகளோ வதந்தி உண்மையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் இடதுசாரி வசனங்களை பேசிக்கொண்டு தனது வாகனங்களில் க்யூபாவின் புரட்சியாளர் சேகுவாரா படத்தை ஒட்டிக்கொண்டு வலம் வந்தவர் தான் பவன்கல்யாண். பின்னர் தெலுங்கு தேசம், பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பிறகு 2018 ல் தெலுங்குதேசம் பாஜகவை எதிர்த்த போது , பவன்கல்யாணும் நகர்ந்து சிபிஐ,சிபிஐ(எம்), பகுஜன்சமாஜ் உடன் கூட்டணி வைத்தார்.

தற்போது 3 வருடங்களாக திரும்பவும் தெலுங்குதேசம், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் ஆந்திரா என்றாலே “ எரிமலை எப்படி பொறுக்கும்” என புரட்சி பேசும் நக்சலைட்கள் தான் ஞாபகம் வருவார்கள். அந்த அளவுக்கு ஆந்திரா என்றாலே அரசுக்கு எதிரான நிழல் இயக்கங்களும், மாவோயிஸ்ட்களும், அவர்களை ஆதரிக்கும் மெத்த படித்த அறிவுஜீவிகள், செல்வந்தர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் செல்வாக்கோடு கோலோச்சிய இடம் அது. தற்போது அதையெல்லாம் கடந்து முன்னேறிய மாநிலமாக ஆந்திர தேசம் உள்ளது.

2024903201447970.jpeg

இந்நேரத்தில் வடஇந்தியா முழுவதும் வியாபித்திருக்கிற வலதுசாரி சித்தாந்தங்கள் ஆந்திராவிலும் வலுவாக கால் பதிக்க ஆரம்பித்திருக்கிறது. இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் மாறுவதும் அரசியல்வாதிகளுக்கு சகஜமான ஒன்றுதான். அதில் பிரச்சனையில்லை. இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கென்று ஒரு மாண்பு/ அடிப்படை பொறுப்பு உள்ளது.

இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்டம் நினைவில் இருக்கிறதா? பசுமாட்டின் கொழுப்பு தடவி இருக்கிறார்கள் என்று இந்துக்களும்,பன்றி கொழுப்பு தடவி இருக்கிறார்கள் என்று முஸ்லீம்களும் கேட்ரிட்ஜை வாயால் கடித்து திறக்கும் துப்பாக்கி குண்டுகளை உபயோகிக்க மாட்டோம் என்று இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சி செய்தார்களே “சிப்பாய் கலகம்” என்று..! வெள்ளைக்காரர்களின் உத்தரவின் கீழ், சகஇந்தியர்களை அடிமைப்படுத்தி, அவர்களை கொடுமைப்படுத்தி, தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவி இந்தியர்களை கொல்லும் போது வராத கோபம், மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு, சாதிமத நம்பிக்கைக்கு எதிரான நிலை என்றதும் வெகுண்டு எழுந்து சிப்பாய் கலகமாக வெடித்தார்கள் பாருங்கள் அங்கே நிற்கிறார்கள் நம்மாட்கள்.!

மத நம்பிக்கைகளும், வைதீகமுறைகளும், சாதி அடுக்குமுறைகளும், ஹராம்களும்,ஹலால்களும் வேரோடி கிடக்கும் இந்திய சமூகத்தில், அதில் கைவைத்தால் என்னவாகும் என்று தெரிந்தே அதில் புகுந்து நெருப்போடு விளையாடி குளிர்காய நினைக்கும் அரசியல்வாதிகளை என்ன தான் செய்வது.? இப்பொது கண்ணியமிக்க நீதிமான்கள் “ உங்கள் அரசியலில் இருந்து கடவுளை விட்டு விடுங்கள்“ என கேட்டிருக்கிறார்கள்.

202490320093297.jpg

ஏழுமலையானே இறங்கி வந்து சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்?!

லட்டு …கோவிந்தா..??!