தொடர்கள்
அனுபவம்
கோல்டன் கைலாஷ் ! மீண்டும் கைலாயம் - ராம்

2024904230524403.jpeg

சென்ற முறை ஏழு பேராக கைலாயம் செல்ல சிவனின் அருள் கிடைத்தது. இந்த முறை மூன்றே பேர்தான்.

பேராசிரியர் ராஜன், அவர் மனைவியார் சங்கீதா அடியேன்.

இந்த முறை கோல்டன் கைலாஷ் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை.

சென்ற வருடம் ஜூலை மாதத்தில் சென்றதால் கைலாய மலை தரிசனம் பாதிக்கு மேல் கிடைக்கவில்லை. எப்போதும் மேகம் மூடியே இருந்தது. ஆனால் செப்டம்பர் மாதம் சென்றால் நன்றாக தரிசனம் செய்யலாம் என்று நமது திபத்திய ஏஜண்ட் பசாங் மற்றும் டூர் கைடு தாஷி சொன்னதால் ஏற்பாடு செப்டம்பரில்.

பரிக்கிரமா துவங்கும் இடத்திலிருந்து 15 கி.மீ தூரம் தான் கைலாய மலை. சென்ற முறை கொஞ்சம் சுலபமாகவே நடந்து விட்டோம் என்று கொஞ்சம் அதிக நம்பிக்கையுடனே இருந்து விட்டது தவறுதான் என்று புரிந்தது.

கைலாயம் செல்லும் வழி இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வேறுபடும்.

கைலாய மலை செல்ல நேபாளம் வழியாக ஒரு பாதை இருக்கிறது. அது போலவே திபத்தின் தலைநக்ரான லாசா வந்து விட்டு இங்கிருந்து ஷிகாட்சே, சாகா, வழியாக 1300 கி.மீ கடந்து தார்ச்சன் சென்றடையலாம்.

தார்ச்சன் என்ற இடத்தில் தான் நேபாளமாகட்டும், திபத்தாகட்டும் வந்து சேர்ந்து பரிக்கிரமா துவங்க வேண்டிய ஊர்.

லாசா நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4600 மீட்டர்கள் உயரத்தில் இருக்கிறது. இந்த உயரம் நமக்கெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். யாராக இருந்தாலும் அக்கிளிமிடேஷன் என்று சொல்லப்படும் உயரத்திற்கு பழக வேண்டும். இல்லையெனில் மூச்சு வாங்கும். அல்லது மயக்கம் வரும். ஒரு ஒப்பீடுக்காக கூகுளில் தேடிப் பார்த்தால் சென்னை 7 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

நானும் பேராசிரியரும் பேசிக் கொண்டோம். லாசா போய் இறங்கிய உடன் நேரம் தாழ்த்தாமல் அடுத்த நாளே கைலாயம் நோக்கி செல்ல வேண்டும். உயரத்திற்கு பழகுவதெல்லாம் நமக்கு தேவையில்லாதது.

அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதை எத்தனை முறை சொன்னாலும், சென்றாலும் விளங்குவதேயில்லை.

லாசா சென்று இறங்கிய இரவு கொஞ்சம் தூரம் நடந்து விட்டு வர்லாம் என்று முடிவு செய்து நடந்து விட்டு வந்தோம். அப்போதே பேராசிரியர் முகம் சரியாக இல்லை.

விமானத்தை விட்டு வெளியே வரும் போதே அன்ன நடை நடந்து தான் வந்தார்.

இருந்தாலும் இரண்டாவது முறைதானே என்ற சின்ன இறுமாப்பு.

லாசாவில் இறங்கிய அன்று நல்ல உறக்கம். நடு நிசி.

திடீரென தொலைபேசி விடாமல் அடித்தது. எடுத்தால் மறுமுனையில் பெருங்கூச்சல். சங்கீதா தொலைபேசியில் ஏக பதட்டத்தில் அழைத்தார். சீக்கிரம் வாங்க சீக்கிரம் வாங்க அவர் விழுந்துட்டார்.

கையும் காலும் ஓடவில்லை.

நள்ளிரவு ஓடிச் சென்று பார்த்தால் பேராசிரி மலங்க மலங்க முழித்த படி தரையில் விழுந்து கிடக்கிறார்.

உயரத்திற்கு பழகவில்லை. 4600 மீட்டரில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும்.இதெல்லாம் யூகம் தான். என்ன நடந்தது புரியாமல் மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும்.

நடு நிசியில் ஆளரவில்லாத சாலையில் சக்கர நாற்காலியில் பசாங் மற்றும் தாஷி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தள்ளிக் கொண்டு போனார்கள்.

202490423141508.jpeg

கைலாயம் இந்த முறை போக வேண்டாம். ஹாங்காங்கிற்கே திரும்ப போய் விடலாம் என்று அழாத குறையாக கெஞ்சினார் சங்கீதா. நீங்க வேணா போயிட்டு வாங்க நாங்க திரும்ப போறோம் என்று தவிப்போ தவிப்பு. நான் மட்டும் தனியாகவா

அதெல்லாம் முடியாது.

அந்த குளிரில் இருளில் வந்த பதட்டமான வார்த்தைகளுக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு தவிப்பு. பேராசிரி போலவே அந்த மருதுவமனையில் ஆக்சிஜன் குறைபாடுடன் ஒரு கர்ப்பிணி உட்பட ஏராளமானோர் இருந்தனர்.

எந்த முடிவும் நம் கையிலேயா இருக்கிறது ??

அடுத்த நாள் பேராசிரி கொஞ்சம் தேறி விட்டார்.

திரெக் யார்பா என்ற இடத்திற்கு சென்றதும், அங்கு போலீஸ் வண்டியிலேயே லிஃப்ட் கேட்டதும் நடந்தது......

2024904231124422.jpeg

கோல்டன் கைலாஷை நோக்கி அடுத்த வாரம்.... தொடர்வோம்.