தொடர்கள்
கவர் ஸ்டோரி
ரஜினி - என்ன நடக்கிறது- லைட் பாய்

2024904085000948.jpeg

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அவர் வழக்கம் போல் நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் திடீரென அடி வயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக செப்டம்பர் 30-ஆம் தேதி மதியம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது கிட்னி பகுதியில் சதை வளர்ந்திருப்பதாகவும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் மனைவி லதா செய்தியாளர்களிடம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனை முதல் தளத்தில் ஐ சி யு படுக்கை 61-இல் ரஜினி சிகிச்சை பெறுகிறார். மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். ரஜினிக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினைக்கு மருத்துவ ரீதியான பெயர் Aortic Aneurysm. அதாவது இதயத்தில் இருந்து வரும் முக்கிய தமனியான ஒரு நாடியின் சுவரில் ஏற்படும் வீக்கம் தான் இது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது இதயத்தில் இருந்து பல்வேறு உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்கலாம் என்று டாக்டர்கள் அஞ்சுகிறார்கள். எனவேதான் அவருக்கு ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஐ சி யு வில் இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.

அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் "ரஜினிக்கு இதயத்தில் இருந்து பிரியும் முக்கிய தமனியான பெரு நாடியின் சுவரில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை அல்லாத முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது ரஜினி தற்போது நலமுடன் உள்ளார் என்பதை அவரது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி. பலரும் அவர் பூரண குணத்துடன் வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கு நெருங்கிய நண்பரும் இதய நோய் மருத்துவருமான டாக்டர் சொக்கலிங்கம் அக்டோபர் மூன்றாம் தேதி ரஜினியை பரிசோதித்தார். அதன் பிறகு நிருபர்களிடம் அவர் பேசும்போது "ரஜினி எனக்கு 50 வருட நண்பர் அவரிடம் எல்லோரும் உங்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொன்ன போது அவர் என் கையைப் பிடித்து நீங்கள் தான் பார்க்கிறீர்களே மக்களிடம் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிவிடுங்கள் என்றார். அவருக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். தன் மூலம் ரசிகர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக தனக்கு நேர்ந்ததை அவர் வெளிப்படையாக பேசுவார்.

அவரை விட்டால் நாளைக்கு ஷூட்டிங் போகலாமா என்று எங்களிடம் கேட்பார். ஆனால் மூன்று வாரம் அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம். 73 வயதான ரஜினி முப்பது வயது இளைஞர் போல் இப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார் "என்றார் டாக்டர் சொக்கலிங்கம்.

வியாழன் இரவு 11 மணிக்கு ரஜினி டிஜ்சார்ஜ் ஆகி அவரது போயஸ்கார்டன் வீட்டிற்கு சென்றார்.

ரஜினி படம் ரிலீஸ் போது ஏதாவது ஒரு சர்ச்சை வருவது வழக்கம்தான் இந்த முறை அவர் உடல்நிலை பேசும் பொருளானது.