தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 89 - பரணீதரன்

போன வாரம் ஆறாரைச் சக்கர பந்தம் முடித்த நமது பரணீதரன் எட்டாரை சக்கர பந்தம் பற்றிக் கூற ஆரம்பிக்கின்றார்.

2024904151908559.jpg

தண்மதிநிகர்வதயங்கியவதனம்

பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்

மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா

மாறன்றுடரிமலைதன்மின்போன்றோளிர்

தண்ணென்பொற்சுனைமன்னியமாமல

ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே

இந்தப் பாடல் திருமாலின் பெருமையை குறித்து பாடப்பட்டுள்ள பாடலாகும். இந்த சக்கரத்தின் நடுச் சொல்லாக வடமலையப்பன் என்ற சொல் வருகிறது. மற்ற சில எட்டாரை சக்கரங்களை கீழே கொடுத்துள்ளேன். அவற்றில் ஒரு சில சக்கரங்கள் நடு சொல்லும், ஆரையின் நடுவில் உள்ள சில எழுத்துக்களை சேர்த்தால் வேறொரு சொல்லும் கிடைக்கும்படி உருவாக்கியுள்ளார்கள். இதுபோல வடமொழியிலும் சக்கர பந்தங்கள் உள்ளன.

2024904152021958.jpg

இத்தோடு பந்தங்கள் முடித்துக்கொண்டார்.

அடுத்ததாக பா வகைகளைப் பற்றி ஆரம்பிக்கிறார்.

நாம் முன்பே பார்த்தது போல தமிழில் பாக்கள் நான்கு வகைப்படும்.

அவை

வெண்பா,

ஆசிரியப்பா,

கலிப்பா

வஞ்சிப்பா ஆகும்.

முதலில் ஒவ்வொரு பா வகைக்கும் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம். அதன் பிறகு ஒவ்வொரு பாவுக்கான இலக்கணத்தை விரிவாக பார்ப்போம்.

வெண்பா

திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்

கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்

இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத

வன்கையின் வன்பாட்டது இல்.

  • நான்மணிக்கடிகை

திருவாகிய லட்சுமி தேவியின் செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் நட்புதுணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை.

ஆசிரியப்பா

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே

  • யாப்பருங்கலக் காரிகை

பொதுவாக தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும், நெருப்பு வெம்மையாக இருக்கும். அவற்றின் அருகில் நாம் செல்லும் பொழுது அதனுடைய குளிர்ச்சித் தன்மையும் வெம்மை தன்மையும் மிகுதியாக நமக்கு தெரியும். அவற்றை விட்டு நாம் விலகும் பொழுது அவைகளின் தன்மையும் நமக்கு குறைவாக தெரியும். ஆனால் சாரல் நாடனின் நட்பு நீரின் தண்மையையும், தீயின் வெம்மையையும் பெற்று விளங்கும். அவன் அருகில் இருக்கும் பொழுது நீரின் குளிர்ச்சியும், அவன் அருகில் நாம் இல்லாத பொழுது தீயின் வெம்மையும் நம்மை தாக்கும்.

கலிவெண்பா

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

  • சிவபுராணம்

என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

2024904152151986.jpg

வஞ்சிப்பா

செங்கண்மேதி கரும்புழக்கி

அங்கண் நீலத் தலர் அருந்தி

பொழிற்காஞ்சி நிழல்துயிலும்

செழுநீர்,

நல்வயற் கழனியூரன்

புகழ்தல் ஆனாப் பெருவண்மையனே.

  • யாப்பருங்கலக் காரிகை

சிகப்பான கண்களை உடைய எருமை மாடு கரும்பு காட்டுக்குள்ளே சென்று கரும்பினை மேய்ந்து விட்டு, அருகில் இருந்த குளத்தில் உள்ள நீலமலரை சாப்பிட்டு, குளத்தில் உள்ள தண்ணீரையும் அருந்திவிட்டு, காஞ்சி மரத்தின் நிழலில் சென்று நிலைப்பாடு உறங்கும், வயல்களையும் குளங்களையும் உடைய கழனியூரன் பேரும் புகழும் வீரமும் உடையவனாக திகழ்கிறான்.

அடுத்த வாரம் இந்த பாக்களின் பிரிவுகளையும், இலக்கணத்தையும் பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் பரணீதரன்.