தொடர்கள்
கதை
சாஃப்ட்வேர் சம்யுக்தா- சுஶ்ரீ

2024904173312531.jpg
ஹலோ நான்தான் சாஃப்ட்வேர் சம்யுக்தா.நீங்க பாட்டுக்க ’டைப்பிஸ்ட் கமலானு’
நினைச்சுப் பாக்காம போயிடாதீங்க.அவங்கல்லாம் 70s ல வந்த கதாபாத்திரங்கள்.
விப்ஜியார் சாஃப்ட்வேர் கம்பெனி தரமணில இருக்கே,அங்கே முக்கியமான
பொறுப்புல இருக்கேன்(அது என்னனு நீங்க கேக்கக் கூடாது)பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரீல டிஸ்டிங்ஷன்ல பாசான க்வீன் மேரீஸ் பிராடக்ட் நான்.
அப்போவோட ஃபிரண்ட் பப்ளி பாஸ்கர் மாமாதான், ஒரு நாள் ஓசி பேப்பர் படிக்க
வந்தப்ப என்னைப் பாத்து சொன்னார்.”ஏம்மா டிகிரி முடிச்சு 3,4 மாசம் ஆறது போல இருக்கே,மேலே படிக்கப் போறயா இல்லை வேலைக்கு போற ஐடியாவா”
இதுக்குள்ளே அம்மா உள்ளே இருந்து காபி கொண்டு வர வாசனை வந்தது.சட்னு
அப்பாவைப் பாத்து சொன்னார்,”லண்டன்ல எல்லாம் இந்த மெக்விடீஸ் பிஸ்கட்லாம் இட்லி சைசுக்கு இருக்கும் தெரியுமோ?காபியோட ரெண்டு சாப்பிட்டா பிரேக்ஃபாஸ்டே வேண்டாம்.”
அப்பா புரிந்து கொண்டு “ஏய் சம்சி, காபியோட பிஸ்கட் டப்பாவை கொண்டு வரச்
சொல்லு அம்மா கிட்ட” பப்ளிமாமா முகம் விகசிக்க,”நான் பொதுவா சொன்னேன்,இப்ப எதுக்கு
பிஸ்கெட்லாம்,என் மிஸஸ் காலங்காத்தால உப்புமா கிளற ஆரம்பிச்சிட்டா,பையன் தப்பிச்சுப் போப்பானு ஹின்ட் கொடுத்தவுடனே பேப்பர் படிக்கற சாக்குல இங்கே வந்துட்டேன் ஹி..ஹி..”
“இந்த தேங்கா பிஸ்கட் கூட நன்னாதான் இருக்கு,இப்பல்லாம் நம்ம
வயசுக்காரங்களுக்காகவே சுகர் ஃப்ரீ, ஹை ஃபைபர்னு போட்டு கொள்ளை
அடிக்கறானுக” சொல்லிண்டே, ஒரு வாய் காஃபி, ஒரு கடி பிஸ்கட்னு அரை டஜன்
பிஸ்கட்க்கு மேலே காலி.
அப்பறம் என்னைப் பாத்து,”நேத்தைய ஹிந்து பேப்பர்ல வந்திருக்கு பாரு, தரமணில ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனில நிறைய ஆள் எடுக்கறா”
இப்படியாகத்தானே, கெமிஸ்ட்ரி டிஸ்டிங்ஷன் ஹோல்டர்,
சம்பந்தமே இல்லாத சாஃப்ட்வேர் கம்பெனில சேந்தேன்.பிரசாந்த் கவுல் கம்பெனி
ஜி.எம். என்னை இன்டர்வ்யூ பண்ணினவர் எதைப் பாத்து என்னை செலக்ட்
பண்ணினார்னு இது வரை தெரியலை.
பிரசன்னராவ்தான் வேலையெல்லாம் கத்துக் கொடுத்தான்.
விஜயவாடால எங்கேயோ வேலை பாத்துட்டு யு.எஸ்,ஜெர்மனிலாம் போயிட்டு
வந்தவன்.என்ன ஒரு டிரா பேக்னா ஜிலேபி ஜிலேபியா எழுதின தெலுகு
புஸ்தகங்கள்தான் படிப்பான்,தமிழ் சுத்தமா எழுதப் படிக்கத் தெரியாது.இவனோட எப்படி காலம்....அச்சச்சோ ஏதாவது உளறிட்டேனோ,அதாவது என்ன சொல்ல
வந்தேன்னா....போங்கப்பா ஒண்ணுமில்லை.
படிச்ச கெமிஸ்ட்ரி வேலைக்கு வரலைன்னா என்ன,இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்
ஆச்சு.சனிக் கிழமை மத்யானம் கேண்டீன்ல வச்சு வாயில இருந்த மோமோஸ் கூட ”ஐ யவ் யூ சய்யுத்தா” னு கஷ்டப்பட்டு மோமோசை முழுங்கினான்.
“ஏய் அண்டுகுண்டு,ஒழுங்கா புரொபோஸ் பண்ணத் தெரியாத உன்னை எப்படி
ஒத்துக்கறது”
எப்படியோ மூணு மாசமா குட்டி ஹுண்டாய் கார்ல சென்னையைச் சுத்தி
வந்தோம்.அந்த ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவிலுக்கு கைகோத்துண்டு போயி அந்த கோவில் தூண்ல இருந்த குங்குமத்தை என் நெத்தில வைக்கற நேரம்,
பப்ளி பாஸ்கர் மாமா கண்ல பட்டுட்டோம்.
“என்னம்மா உன் பாம்பே பெரியப்பா பையனா?குங்குமத்தை சரி பண்ணிக்கோ
கோணலா தீத்திட்டான் பாருனு” சொல்லிட்டு போயிட்டார்.
வீட்டுக்குள்ளே பயந்துண்டே நுழைஞ்சேன் அன்னிக்கு.சத்தம் போடாம சாப்உட்டு
என் ரூமுக்கு போறப்ப அம்மா,”யாருடி அது எனக்குத் தெரியாம பாம்பே
பெரியப்பாவும்,அவர் பையணும்?
“இல்லைம்மா அது வந்து வேறம்மா...னு” தடுமாறினப்ப
“எங்களுக்கு முன்னாலயே தெரியும் அந்த பையன்,அதான் உன் பாம்பே பெரியப்பா பையன்,போன மாசமே வந்து அப்பாவை பாத்து பேசிட்டு போயிட்டான்.ஒரு நல்ல நாளில அப்பா அம்மாவை கூட்டிண்டு வரேன்னிருக்கான்.நீயா சொல்வயானு
காத்திண்டிருந்தோம்.”
போம்மானு நான் ஓடியே போனேன்.சீக்கிரமே கல்யாணம் ஆச்சு,இப்ப என் அண்டு குண்டுவுக்கு ஜெனிவால வேலை.நானும் கூடதான் இருக்கேன்.
என் கெமிஸ்ட்ரி,அவனோட பிசிக்ஸ எல்லாம் சேந்து இப்ப ஆறுமாசம் வயத்துல
சாஃப்ட் காபி,
WAITING FOR HARD COPY.