தொடர்கள்
அனுபவம்
நடந்தது - ஜாசன்

2024904090833574.jpg

ஞாயிற்றுக்கிழமை காலை முடி வெட்டிக் கொள்ள போனபோது கொஞ்சம் கூட்டமாக தான் இருந்தது. நான் காத்திருந்தேன். முடி வெட்டுபவர் இளைஞர் சுறுசுறுப்பாக வேலையை செய்வார் என்பது எனக்கு தெரியும்.

அவர் ஒருவருக்கு முடி வெட்டிக் கொண்டிருக்கும் போது அவர் செல்பேசி ஒலித்தது. எதிர் முனையில் இருந்த பெண்ணிடம் மேடம் என்று ஆங்கிலத்தில் அழைத்து "உங்கள் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் ரெடியாகி ஸ்பரையல் பைண்டிங் போகுது எப்படியும் மதியம் வந்துவிடும் நீங்கள் மூன்று மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளலாம்" என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னார். நான் அவரிடம் "நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் ? என்று கேட்டேன்.

"நான் எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன்" என்று சொன்னார்.

அப்போது நான் அவரிடம் "இந்த வேலை உங்களுக்கு ஏன் வேறு நல்ல வேலைக்கு போகக்கூடாதா ? என்று கேட்டேன். அவர் கூலாக இந்த வேலையில் எனக்கு எந்த கௌரவ குறைச்சலும் கிடையாது. இது என் குலத்தொழில். என் அப்பா இந்த தொழில் செய்து தான் என்னை படிக்க வைத்தார். நான் கல்லூரி மாணவ மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயார் செய்து தருவேன் அதன் மூலம் எனக்கு மாதம் தோறும் நல்ல வருமானம் வரும். இருந்தாலும் ஆரம்பத்தில் இதுதான் எனக்கு சாப்பாடு போட்டது" என்று கத்திரிக்கோலை காண்பித்து சொன்னார்.

நான் அவரிடம் உங்கள் தொழிலை நான் கொச்சைப்படுத்தி பேசியிருந்தால் மன்னியுங்கள் பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் தங்கள் குல தொழில் செய்வது விரும்பவில்லை அதனால் தான் என்று விளக்கம் சொன்னேன். அப்போது அவர் குலத்தொழில் என்பது கேவலம் இல்லை சார் இவர் என் தம்பி ஒரு பிரபல வங்கியில் மேனேஜராக இருக்கிறார் கூட்டம் ஜாஸ்தியாக இருக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை அவரை வரச் சொல்வேன் என்றார்.

எனக்கு இது இன்னொரு ஆச்சரியம் குலத்தொழில் வேண்டாம் என்று சொல்கிறவர்கள் அரசியல்வாதிகள் தான். ஆனால், அரசியல்வாதிகளின் வாரிசுகள் எங்கேயாவது தூய்மை பணியாளர்களாக அல்லது ஹோட்டலில் சர்வர் வேலை அல்லது முடி திருத்தும் வேலை பார்க்கிறார்களா இல்லையே அவர்களும் அமைச்சர் எம் பி எம் எல் ஏ என்று அவர்கள் குலத்தொழில் தான் செய்கிறார்கள்.

குலத்தொழில் கூடாது என்கிறார்கள்.

ஒரு வாதத்துக்கு குலத் தொழில் வேண்டாம் என்றால் யார் முடிவெட்டுவார், யார் தூய்மை பணியாளராக இருப்பார், யார் செருப்பு தைத்து கொடுப்பார், யார் துணிகளை சலவை செய்வார்கள். இந்தப் புரிதல் மக்களுக்கு இருக்க வேண்டும் அதுதான் இல்லை.

இப்போது கூட பிரதமர் விஸ்வகர்மா என்ற திட்டம் மூலம் எங்களைப் போன்ற தொழில் செய்பவர்களுக்கு உதவி செய்கிறார். அதைக் கூட சில அரசியல் தலைவர்கள் குல தொழில் செய்ய சொல்கிறார் என்று விமர்சனம் செய்கிறார்கள். தொழில்தானே செய்ய சொல்கிறார் கொள்ளையடிக்க சொல்லச் சொல்லவில்லையே "என்றார் அந்த இளைஞர் .அவரே தொடர்ந்து என் மனைவி பிரபல மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிகிறார்.

என் மகன் பிளஸ் டூ படிக்கிறார். அவர் டியூஷன் போய் இருக்கிறார். டியூஷன் முடிந்து இங்கு வந்து இந்த அறையை சுத்தம் செய்யும் வேலை செய்வார் என்றார். எனக்கு அவர் சொல்ல சொல்ல அவர் மீதும் இந்த இளைய தலைமுறை மீதும் இந்தியாவின் எதிர்காலம் மீதும் நம்பிக்கை ஏற்பட்டது.

அரசியல் தலைவர்கள் அறிவுரை என்று எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே இளைஞர்கள் உருப்பட்டு விடுவார்கள் போல் தெரிந்தது.