பெரும்பாலான விழாக்களில் மேடை வாசிகளுக்கும் பார்வையாளர்களுக்குமிடையே ஒன்றுதல் இருப்பதில்லை.
மைக் கிடைத்ததென்று அவர்கள் பாட்டிற்கு ஈசிக் கொண்டிருக்க, இங்கே இவர்களுக்குள் கச முசா! அல்லது மொபைல்கள் நோண்டப்பட்டுக் கொண்டிருக்கும்.
நூல் வெளியீடுகளில் அபத்தங்கள் பல அரங்கேறுவதுண்டு .
"நூலை இன்னும் நான் படிக்கவில்லை - பயங்கர பிஸி" என்கிற கூச்சமில்லா நேரடி சரண்டருடன் வாழ்த்துரை வழங்கப்படும்.
நூலை விட நூலாசிரியரை விட தத்தம் சுய தம்பட்டம்... அல்லது யாரையாவது தாஜா என சிலர் மெல்வர். கொல்வர்!
அங்கே ..சம்பந்தமில்லா சமபந்தி போஜனம்!
அதற்கு மாறுபட்டு அமைந்திருந்தது புதுவை ரா.ரஜனியின் சுப்புசாமி கதைகள் நூல் வெளியீடு.
நிகழ்வில் ஆள் கூட்டனும் - காட்டணும்.. என்கிற ஆர்ப்பரிப்போ, அரிப்போ இல்லாமல் ஆத்மார்த்த ஆர்வலர்கள்!
இந்த புத்தகத்தின் நகைச்சுவை கதைகள் எல்லாம் பெரும்பாலும் 'விகடகவி'ஆன்லைன் வார இதழில் வெளிவந்தவையாம்.
( இந்த நூல் மற்றும் 'விகடகவி'இதழ் ஆசிரியர் குழு விவரங்கள் இணைப்பில் )
அவற்றை ஆதரிக்கும் வண்ணம்- 7 வருடங்களாய் சிறப்பாய்,சிரிப்பாய் நடத்தப்பட்டு வரும் - 'விகடகவி' ஆசிரியர் மதன் முதற்கொண்டு அதன் குழுவே அங்கு ஐக்யம்.
விழாவில் இன்ஸ்டன்ட் காபி போல சுபா வெங்கட்டின் ஜட..ஜட... தொகுப்புரை!
வந்திருந்த அன்பர்களை அங்கு சொற்பொழிவு என்கிற பெயரில் கசக்கிப் பிழியாமல் , அனைவருமே நயத்துடன் நச் வாழ்த்துரை!
விகடகவி ..மற்றும் அந்த நூலின் அனைத்துப் புகழும் அவருக்கே என்கிற மாதிரி -
மதன் அங்கே பிரதானமாய் இருந்தார். அவரது திவ்ய தரிசனம் இதம்.. பதம்!
அவர்.. மென் நகையுடன் அமைதி! பவ்வ்யம்!
பிறர் காதுகளுக்கு வலிக்குமோ என்கிற மதனின் மென்குரல்! அவரது பேச்சும் சொல் - வீச்சும் சுகம்.
சுருக்கமாய் சொல்லணும் என்றால் அது - ஒரு மனம் திறந்த- மடைதிறந்த- மனம் மகிழ் கலந்துரையாடல்!
- என் . சி. மோகன்தாஸ்
பட மிக்ஸ்: ஹரி லக்ஷ்மன்
Leave a comment
Upload