தொடர்கள்
சோகம்
கரும்புகையில் பொசுங்கிய கனவுகள் ! குவைத் பயங்கரம் -மரியா சிவானந்தம்

20240514180336159.jpg

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலக மக்களை அதிர வைத்துள்ளது .

இந்த வாரம் புதன் (12/06/2024) அன்று அதிகாலையில் தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஒரு ஏழு அடுக்குமாடி குடியிருப்பில் காலை வேளையில் அந்த கொடுமையான விபத்து நடந்துள்ளது . எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த 196 தொழிலாளர்கள் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். அவர்களில் 150 பேர் பல மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் .

முதலில் கீழ்தள சமையல் அறையில் பற்றிய தீ 'மளமள'வென்று கட்டிடம் முழுவதும் பரவியது .எங்கும் கரும்புகை சூழ்ந்துக் கொள்ள, அங்கு குடியிருந்தவர்கள் வேகமாக வெளியேற முடியாமல் தவித்தனர். தீயில் கருகி ஏழு தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளனர். பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது அவர்களை அங்குள்ள ஐந்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெரும்பாலும் இந்தியர்களே தங்கி இருந்த குடியிருப்பில் ஏற்பட்ட விபத்து இந்திய அரசை பதற வைத்துள்ளது . குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா உடனடியாக மங்காப் பகுதிக்கு விரைந்தார்.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்திய தூதரகம் தக்க உதவிகளைச் செய்யும் என்று உறுதி அளித்து பணிகளை முடுக்கி உள்ளார் .

அன்று இரவே பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது .வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் உடனடியாக குவைத் சென்றார் . அரசின் உத்தரவின் பேரில் C 130 J இராணுவ விமானம் ஒன்று கொச்சினில் இருந்து புறப்பட்டுச் சென்றது .விபத்தில் இறந்த 45 பேரின் உடல்களை ஏற்றி கொண்டு வந்து அந்த விமானம் வெள்ளி அன்று கொச்சினை அடைந்துள்ளது .

தமிழகத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் உடல் இந்த விமானத்தில் வந்துள்ளது. கோவிந்தன் சிவசங்கர் ,முகமது ஷெரிப் ,கிருஷ்ணமூர்த்தி சின்னத்துரை,வீராசாமி மாரியப்பன் ,ரிச்சர்ட் ராய் ,கருப்பணன் ராமு ஆகிய எழுவரின் உடல்களையும் தமிழக அயலகத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டு ,அவசர ஊர்தி மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் . கேரளத்தைச் சேர்ந்த24 பேர்களின் உடல்களும் ,பிற மாநிலத்தைச் சேர்ந்தவர் உடல்களும் அவசர ஊர்திகள் மூலம் அனுப்பப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசும் ,மாநில முதல்வர்களும் நிவாரணத் தொகைகளை அறிவித்துள்ளனர்.

எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளுக்கு பிழைப்பைத் தேடி செல்லும் இந்தியர்கள் ஏராளம் . பலவித பணிகளில் அமர்த்தப்படும் இவர்களுக்கு நிறுவனமே இருப்பிடங்களை அமைத்துத் தருகிறது.குறைந்த வருவாய் கொண்ட இந்த தொழிலாளர்கள் , டார்மிட்டரி போன்ற கூடங்களில் தங்கி சுயமாக சமைத்து தங்கள் வேலையைச் செய்து குடும்பத்துக்கு பணம் அனுப்பி வைக்கிறார்கள் .ஓரளவு நல்ல வருவாய் கொண்டவர்கள் கூட வாடகை மிச்சப்படுத்த இவ்வாறு கூட்டாக சேர்ந்து வசிப்பது உண்டு.

தொழிலாளர்களுக்கு இருப்பிடம் ஏற்பாடு செய்யும் போது சில சட்ட திட்டங்களுக்கு , (குறிப்பாக ஒரு அறைக்கு இத்தனை பேர் என்பது போல) உட்பட்டு இடம் தரப்பட வேண்டும் .விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் கேரளத்தைச் சேர்ந்தவர் . விதிகளுக்கு உட்பட்டு தொழிலாளர்கள் குடி அமர்த்தப்பட்டுள்ளாரா , கட்டிட பாதுகாப்பு விதிகள் பின்பற்றி இருக்கிறார்களா போன்ற கேள்விகள் நம் முன் எழுந்துள்ளது . உரிமையாளர் உட்பட பலர் இந்த விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்

மின்கசிவால் ஏற்பட்ட விபத்து இது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே விவரம் தெரியும் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் ஏற்படாதவாறு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் . பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO ) ஏற்படுத்தி உள்ள நெறிமுறைகளை எல்லா நிறுவனங்களும் கடை பிடிக்க வேண்டும் .தொழிலாளர் நல சட்டங்கள் எவ்வித சமரசமும் இன்றி அமல்படுத்தப்பட வேண்டும் .

இந்த மண்ணில் பிறந்து அந்நிய மண்ணில் ஆதரவின்றி இறந்துப் போகும் அவலம் அவர்களது குடும்பத்தாருக்கு மறக்க முடியாத சோகம் . ஆறாத ரணத்தையும், துடைக்க முடியாத கண்ணீரையும் பல குடும்பங்களுக்கு குவைத் விபத்து தந்துள்ளது. அங்குப் பரவிடும் கரும் புகையில் , இறந்தவர்களின் கனவுகள் பொசுங்கிய வாடை வீசுகிறது.

உயிர்பலி வாங்கும் இது போன்ற விபத்துகள் இனி எப்போதும் வேண்டாம் , வேண்டவே வேண்டாம் .