தொடர்கள்
தொடர்கள்
சுப்புசாமியின் சபதம்...! - புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன் 8.

20240501080204722.jpeg


"ஒரு தெய்வம் தந்த பூவே...
கண்ணில் தேடல் என்ன தாயே...? நெஞ்சில் தில்... தில்..." என்று ருக்மணி பாடிக்கொண்டிருக்க, குண்டு ராஜாவும் அப்பாராவும் பெஞ்சில் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.


"எப்படிண்ணே இருக்கு...?" என்று கேட்டாள் ருக்மணி.

அதற்கு ராவ், "பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் ஸ்ருதி சேர்க்கணும்!" என்றான்.


"உனக்கு வர்றதை பாடு. மற்றதை நான் பாத்துக்கொள்றேன். தாத்தா இருக்கும்போது நமக்கு என்ன கவலை...?" என்றான் குண்டு ராஜா.


"தாயி சுசிலா - ஶ்ரீமான் இளையராஜா பாட்டு பாடு...!" என்றான் அப்பாராவ்.


"டேய், நாம சான்ஸ் புடிக்க போறது ரகுமான் மியூசிக். அதனால அவரோட பாட்டு பாடுவதுதான் நல்லது...!" என்றான் குண்டு.


"சின்ன சின்ன ஆசை. சிறகடிக்க ஆசை...!" என்று பாடத் தொடங்கினாள் ருக்கு.


"உனக்குத்தான் மெல்லிசை நல்லா வருதே. கொஞ்சம் ஸ்பீடான பாட்டா பாடு ருக்கு...!"


"வாஜி... வாஜி... பாடவா?"


"ஆத்தங்கர மரமே... அரசமரத்து இலையே...... பாடு...!" என்றான் குண்டு.


அவள் கர்மச் சிரத்தையாய் கர்ணக்கொடூரமாய் பாடியபோது, கீதாப்பாட்டி கிராமத்திலிருந்து மூட்டை முடிச்சுகளோடு இறங்கினாள்.

கொள்ளைபுரத்தில் தனது பேரன், பெண்டாட்டியோடு பாடிக்கொண்டிருப்பதைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். பக்கவாட்டில் கண்களை சுழற்றிய கிழவிக்கு அப்பாராவ் தாளம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. சுள்ளென்று அவள் கழுகு மூக்கின்மேல் கோபம் வந்தது.


குண்டு ராஜாவைப் பார்த்து, "அடப் போக்கத்தப் பயலே... பொண்டாட்டிய பாடச் சொல்றப்போ கண்ட மனுஷனையும் பக்கத்துல வச்சுக்கலாமா? யார் இவன்... அப்பாராவா...?" - உள்ளங்கையை நெற்றியில்வைத்து உற்று நோக்கினாள் கீதாப்பாட்டி. அவளே தொடர்ந்து,

"தம்பதிகள் மத்தியில மூணாவது மனுஷன் இருக்கக் கூடாது. இந்த சின்ன அறிவுகூட உங்க பட்டணத்துல கிடையாதா?"


வேற்றுக் கிழவியாய் இருந்திருந்தால், ராவின் பெருத்த மூக்கின்மேல் வந்த கோபத்திற்கு தட்டாமாலை சுற்றியிருப்பான்.


"சும்மா இரு பாட்டி. ஊருல இருந்து வந்தமா, கூடையை இறக்குனமான்னு அமைதியா இரு. நாங்க முக்கியமா ஒரு பாட்டை பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கோம். ருக்கு சினிமால பாடப் போகிறாள்...!"


"பயாஸ்கோப்பிலேயா?"


"ஆமா பாட்டி, ஏ.ஆர். ரகுமான் இசையில பாடப் போறேன்...!"


"எவனா இருந்தா நமக்கு என்ன? பணம் கிடைக்குமா?"


ருக்வுக்கு பூஜை நேரத்தில் கரடி வந்து விட்டதுபோல இருந்தது.


அப்பாராவுக்கோ கீதாப்பாட்டியை ஆதி முதல் அந்தம்வரை பிடிக்காது. சுப்புசாமி ஒருமுறை ஆட்டையை போட்டுக் கொண்டு வந்த வெள்ளிக்குழவியை மாக்கல் குழவியாக ஆக்கிவைத்த ஒல்லிக் கிழவி!


"நானு புறப்படுறேன்டா குண்டு. நானாகே தலைக்கு மேல வேலை ஹொண்டிறவா...!" என்று அவசரமாய்க் கிளம்பினான்.


"இருடாப்பா கொஞ்சம் அவிச்ச பயிறு சாப்பிட்டுட்டுப் போ. கல்யாணம் காரியம்னு ஏதாவது பண்ணுனியா இல்லையா...?"


"ஐயோ பாட்டி, அப்பாராவ் அனுமன் பக்தன். கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியா இல்லை அவனுக்கு...!"


அப்பாராவ் புறப்பட்டான்.


ருக்குமணி "அச்சூ...!" என்று பெரும் தும்மல் தும்மினாள்.


"ஏன்டாப்பா வாந்தி சத்தம் கேக்கணும்னு பாத்தா பாட்டு சத்தமும் தும்மல் சத்தமும்தான் கேக்குது. என்னத்தைதான் குடும்பம் நடத்தினியோ...?" என்றாள் பாட்டி.


"உங்க பாட்டி வந்தாச்சு. இனிமே தொணதொணப்புதான்!" என்றாள் ருக்கு ரகசியமாய் குண்டுராஜா காதில்.


"யாரது கீதாப்பாட்டியோ...?" என்றபடி உள்ளே நுழைந்தார் சுப்புசாமி.


"வாங்க சாமி. எப்படி இருக்கீங்க? உங்க சம்சாரம் நல்லா இருக்காளா? கொரோனா கிரோனா அவளை ஒன்னும் செய்யலையே...?" என்றாள் பாட்டி.


"என்ன ருக்கு... ப்ராக்டிஸ் எல்லாம் ஒழுங்கா பண்ணிட்டியா? ஒரு சாம்பிள் பார்க்கலாமா...?"


ருக்குமணி, சுப்புசாமியிடம் வந்து அவரது காலைத் தொட்டு பணிவோடு வணங்கி தொண்டையைச் செருமினாள். அதைப் பார்த்ததும் பாட்டிக்கு பகபகவென்று எரிந்தது.


"கொஞ்சம் நிலவு...
கொஞ்சம் நெருப்பு...
ஒன்றாகச் சேர்ந்தால்...!"
ருக்கு பாதி பாடியதும்,

"போதும்...போதும். அந்த கொஞ்சம் மிருகம் மட்டும் சரி செஞ்சுடு...!"


"சரிங்க தாத்தா. கொஞ்சம் காப்பி கொண்டு வரட்டுமா?"


"கேட்டுட்டே... பேஷா கொண்டு வா...!"


"ஏண்டி நான் வந்து மாமாங்கம் ஆகுது. என்ன ஒரு வாய் தண்ணீ குடிக்க கேட்டியா? என்ன பாட்டு பாடுறீங்க? கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்புன்னு. கேக்க சகிக்கலையே...!"


"டேய் குண்டு, உன் பாட்டி இன்னும் மாறவே இல்லையடா...!" என்றார் தாத்தா.
பாட்டி முறைத்தாள்.
*****
அன்றைய நாளிலே தாத்தாவை கண்ட குண்டு ராஜா விஷயத்தை நைசாக வாங்கினான்.


'ரகுமான் கூப்பிட்டார் என்கிறார்; பாடப் போகிறேன் என்கிறார்! ஏதாவது கனவு கினவு கண்டிருப்பாரோ என்று நினைத்தால் அது இல்லை. இதோ கண்ணுக்கு எதிரே ரஹ்மானின் படகு காரில் வந்து இறங்குகிறார். தாத்தாவிடம் நைச்சியமாய்ப் பேசி ஏதாவது காரியத்தை சாதித்துக் கொள்ள இதுவே சரியான சந்தர்ப்பம்...!' என்று திட்டம் போட்டான் குண்டு.


"தாத்தா நான் உங்ககூட நண்பனாக எத்தனை வருஷமா இருக்கேன்...?"


"சுமார் 40 ஆண்டுகள் இருக்கலாம்...!"


"இதுவரை நான் உங்ககிட்ட ஏதாவது உதவின்னு கேட்டிருக்கேனா? எந்த உதவியைத்தான் நீங்க ஒழுங்கா செஞ்சிருக்கீங்க, சொல்லுங்க...?"


"நானே அந்தக் கிழவிகூட இருந்து அல்லல் படுறேன். இதுல உங்களுக்கு வேற உதவியா? சரி, இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்லு..."


"ருக்கு, அவ சின்ன வயசிலேயிருந்து ஒரு சினிமா பாடகியா ஆகணும்னு ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டாள். அந்த ஆசையை உங்க மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும். அது உங்களால் மட்டுமே முடியும்...!"


"பிஸ்கோத் ஆசை! உடனே நிறைவேற்றலாம். என் நண்பன் ரஹ்மான் இருக்கும்போது நமக்கு என்ன கவலை?"


விதி சிரித்தது...!


ரஹ்மானை பார்த்தா? சுப்புசாமியைப் பார்த்தா...?


(அட்டகாசம் தொடரும்...)