தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 11 "வழியெங்கும் பல்புகள் - ஸ்விகி" - மோகன் ஜி


20240431203802248.jpg

பல்பு வாங்குபவர்கள் யாரும் அதை வெளியே சொல்வதில்லை. தன்னைப் பார்த்தே சிரித்துக் கொள்வது சிறந்த 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்று என் மனோவியல் வகுப்புகளில் சொல்வதுண்டு.

தன் அனுபவத்தைச் சொல்லி, தன்னைப் பார்த்தே சிரித்து, மற்றவர்களை சிரிக்க வைப்பதே உயரிய நகைச்சுவை. மற்றவர்களை நக்கலடிப்பதே பெரும்பாலும் நகைச்சுவை என்றாகி விட்டது. அந்த நக்கலுக்கு ஆளானவர்கள் எளியவராக இருந்தாலும், என்றும் நக்கலடித்தவரை மன்னிக்க மாட்டார்கள். கசப்பு மண்டி நிற்கும் சூழ்நிலையையே அலுவலகங்களிலும், வீடுகளிலும் பார்க்கிறோம். பெரும்பாலும் கேலி,நக்கல்,கால்வாரிவிடும் வண்ணம் விமரிசித்தல் ஆகியவையே இந்தக் கசப்பின் காரணம்.

நேற்று இரவு ஒரு பல்பு வாங்கினேன். அதைப் பார்த்து நீங்களும் சிரிக்கத் தடையில்லை.

இரவு எட்டுமணிக்கு கொஞ்சம் தினப்படி மாத்திரை வாங்க வேண்டி வெளியில் வந்தேன். தெருக்கோடி திருப்பத்தை தாண்டும் போது, பின்னாலிருந்து யாரோ கை தட்டி அழைத்தார்கள். திரும்பிப் பார்த்தேன். ஒரு எழுபது வயது பிராமண மாமி நின்றிருந்தார்கள். கொஞ்சம் பதட்டமாக என்னிடம் பேசலானார்கள்.

"ஏம்ப்பா! நீ ஸ்விகி தானே?"

" இல்ல மாமி. நான் மோகி"

அருகே நெருங்கியவனை கண்கள் மேல் உள்ளங்கை மலர்த்திப் பார்த்தார்கள்.

" அடடா ! சாரி சார். அந்த ஸ்விகி கடங்காரனுக்காக காத்திருக்கேன். சுகர் மாத்திரை வேற போட்டுகிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க. சாரி! சாரி!"

"பரவாயில்லை மாமி! பிஸ்கெட் ஏதும் சாப்பிடுங்கம்மா. சுகர் லோ ஆயிடும்."

இன்னும் சமாதானம் செய்யும் வண்ணம் சில குசலங்களுடன் விசாரித்த மாமியிடம் பிரியாவிடை பெற்றேன்.

“ஸ்விகி டெலிவரி பண்ண வரும் வழியிலேயே நமக்கான பாக்கெட்டை பிரித்து, கொஞ்சம்போல சாப்பிட்டு விடுவதை வாட்ஸப்பிலே பார்த்தேனே மாமி! எச்சிலானதை சாப்பிடாம ஒரு உப்புமா கிண்டிக்கக் கூடாதோ?”

“வாட்ஸப்பை நம்பாதீங்கோ. அதுல வம்புக்காரா ஜாஸ்தி. வேணும்னே எழுதிப் போடுவா. அப்படியே அவன் சாப்ட்டா தான் என்ன? பசிக்கு தானே சாப்பிட்டான் ? போறான் விடுங்கோ”

“வர்றேன் மாமி”

“வாங்கோ! திரும்பவும் ஸாரி!”

“பரவாயில்லை மாமி!” நடையைக்கட்டினேன்.

வீட்டுக்குத் திரும்பியவன் இதை என் சகதர்மனியிடம் போய் அசடாட்டம் சொல்வேனோ?! விழுந்து விழுந்து சிரித்தாள்.

‘அந்த மாமிக்கு ஒரு உப்புமாவையும் கிண்டிக் கொடுத்து விட்டு வரக்கூடாதோ’ என கேலி செய்தாள்.

“பாவம்டி! மங்கலான வெளிச்சத்துல சரியா பார்த்திருக்க மாட்டாங்க. உன் கிட்டப் போய் சொன்னேன் பாரு!”

“தப்பு அந்த மாமி மேல இல்லை. உங்கமேல தான். இப்படி ஆரஞ்சு கலர்ல ஆளை அடிக்கிற மாதிரி டீ ஷர்ட் போட்டா வேறெப்பிடி கூப்பிடுவாங்க?”

அப்போதே என் டீ ஷர்ட்டை கவனித்தேன். ‘அட! ஆமாம்.ஸ்விகியின் யூனிஃபார்ம்’.

காலையில் ஸ்விகி எபிஸோடை என் பிள்ளையிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். வாய் கொள்ளாத சிரிப்பு... ஒரு மனுஷன் சின்னதா பல்பு வாங்கக் கூடாதா?

உடனே இரண்டு விஷயம் பண்ணிவிடத் தீர்மானித்தேன்.

ஒன்று, ஸ்விகி கம்பெனிக்கு யூனிபார்மை மாற்றச் சொல்லியும், எக்ஸ்டராவாக ஒரு டிபன்பாக்ஸில் தச்சு மம்மு வைத்து டெலிவரி பாய்ஸுக்குத் தரவும் ஆலோசனை மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

இரண்டு, வூட்டுக்கார வம்புக்காரிக்கு ஒரு மனோவியல் வகுப்பு நடத்த வேண்டும்.

‘புருஷன் வாங்கும் பல்புகளைக் கண்டும் காணாமலிருப்பதே நல்ல மனைவிக்கு அழகு’ என்ற தலைப்பில்...

யோசித்துப் பார்க்கிறேன். சுவை மிகுந்த என் இனிய வாழ்க்கையில் வாங்கின பல்புகள் ஒன்றா இரண்டா? இங்கு எழுதினால் சிரிக்காமல் படிப்பீர்கள் தானே?!