பரணீதரன் அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் கவித்திறன் பற்றி தொடர்கிறார்.
அந்தகன் என்ற தமிழ் சொல்லிற்கு பார்வை இல்லாதவர் என்று பொருள். அந்தகக்கவி என்று கூறினால் பார்வை இல்லாத கவிஞர் என்று பொருள். ஊனப் பார்வை இல்லாமல் இருந்தால் கூட இவருடைய ஞானப் பார்வையால் இவர் இயற்றிய செய்யுள்கள் மிகவும் அருமையாகவும் கற்பனை வளம் மிகுந்தும் இருக்கும்.
இப்போது இவருடைய மற்றொரு பாடலை பார்ப்போம்.
அவரை ஆதரித்த இலங்கை வேந்தன் பரராஜசேகரன் என்ற மன்னன் தன்னுடைய தம்பியுடன் ஏற்பட்ட மோதலினால் படை எடுத்து கிளம்புகிறார். அதை பார்த்த நமது புலவரும் பின்வருமாறு ஒரு செய்யுளை பாடுகிறார் :
வாழுமிலங்கைக் கோமானில்லை மானில்லை
ஏழுமரா மரமோ வீங்கில்லை- ஆழி
அலையடைத்த செங்கை யபிராமா வின்று
சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு
அதாவது இலங்கையுடைய அரசனான ராவணன் உயிருடன் இல்லை, தங்க நிறத்தில் ஜொலிக்க கூடிய மாய மானான மாரிச்சனும் இல்லை, சுக்ரீவன் பரீட்சை செய்வதற்கு வைத்திருந்த ஏழு மரா மரங்களும் இல்லை. கடலை அடைத்து பாலத்தை கட்டிய செம்மையான கையை (செங்கை) உடைய அபிராமனே ( அந்த காலத்தில் பொதுவாக அரசர்களை இராமனுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். இன்றைக்கு நாம் கூறும் ராம ராஜ்யம் போல) இன்று எதற்காக வில் எடுத்திருக்கிறாய் என்று கூறு என்று பாடிய அவர், அடுத்ததாக மிகவும் அழகான ஒரு செய்யுளை பாடுகிறார் :
செஞ்சுடரின் மைந்தனையுந் தென்னிலங்கை வேந்தனையும்
பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதே – விஞ்சு
விரதமே பூண்டிந்த மேதினியை யாண்ட
பரதனையும் ராமனையும் பார்
அதாவது சிகப்பான சுடர்களை உடைய சூரியனின் பிள்ளையையும் (கர்ணனையும் / சுக்ரீவனையும்), தென் இலங்கையை ஆண்ட அரசனையும் (இராவணனையும் / விபீஷணனையும்), பஞ்ச பாண்டவர்களில் பார்த்தனாகிய அர்ஜுனனையும் பார்க்காதே. அண்ணன் வரும் வரையில் கடுமையான விரதம் பூண்டு இந்த உலகத்தை ஆண்ட பரதனையும் ராமனையும் பார் என்று கூறுகிறார். அதாவது கர்ணனும் அர்ஜுனனும் அண்ணன் தம்பிகள், ஆனால் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதேபோல இராவணனும் விபீஷணனும் அண்ணன் தம்பிகள் அவர்களும் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதேபோல வாலியும் சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள் ஆனால் அவர்களும் சண்டை போட்டுக் கொண்டார்கள். இவர்களை எல்லாம் பார்க்காமல் ராமனையும் பரதனையும் பார்த்து ஒரு அண்ணனும் தம்பியும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள் என்று மன்னருக்கு புரியும் படியாக மிகவும் எளிமையாக விளக்குகிறார்.
மேலே உள்ள இந்த இரண்டு செய்யுள்களை வைத்தே வீரராகவருக்கு நமது இதிகாச புராணங்களை பற்றிய செய்திகள் தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கிறது என்று நமக்கு தெரிய வருகிறது.
அந்தகக்கவி வீரராகவ முதலியாருக்கு ஒரு சமயத்தில் மிகுந்த மனக்கஷ்டம் வருகிறது. அந்த கஷ்டத்தை வைத்து ஒரு செய்யுளை உருவாக்குகிறார். அந்த செய்யுள் :
சோனையும் காத்துநல் லானையும் காத்து திரௌபதிதன்
தானையும் காத்தடைந் தானையும் காத்து தடத்தகலி
மானையும் காத்தனு மானையும் காத்து மருவிலுறு
ஆனையும் காத்தவனே! எனைக்காப் பதுஅரிதல்லவே
அதாவது சோனை என்றால் மழை என்று பொருள். கிருஷ்ணாவதாரத்தில் இந்திரனுடைய கோபத்தால் ஆயர்பாடியில் மிகுந்த மழை பொழிய ஆரம்பித்த பொழுது ஆயர்களை கிருஷ்ணர் தன்னுடன் அழைத்துக் கொண்டு கோவர்தன மலைக்கு வந்து அந்த மலையை தூக்கி அவர்களை காத்தருளினார் என்பதை சோனையும் காத்து என்ற பதத்தில் விளக்குகிறார். அடுத்ததாக நல் ஆனையும் காத்து என்ற பதத்தில், பசு கூட்டங்களையும் காப்பாற்றினார் என்ற பொருளில் பாடுகிறார். ஆ என்பதற்கு பசு மற்றும் பசு கூட்டங்கள் என்று பொருள். அடுத்ததாக திரௌபதி தன் உடையையும் (தானை என்ற பதத்தில் இருந்து தான் முந்தானை என்ற வார்த்தை வந்தது) காத்து என்ற பதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகிலை உரியும் பொழுது, அங்கு உடனடியாக வந்து காத்தான் என்று விளக்குகிறார்.
அடுத்ததாக தடத்து அகலி மானையும் காத்து என்ற பதத்தில் ராமர் நடந்து வந்த வழிப்பாதையில் இருந்த அகலிகையை காத்து, அதன் பிறகு மாய மானாக வந்த மாரிச்சனை அழித்து அவருக்கு முக்தி கொடுத்தார் என்று கூறுகிறார். அனுமானை காத்து என்ற பதத்தில், தெற்கு நோக்கிய (இலங்கை) பயணத்தில் அனுமனுக்கு ஏற்பட்ட மன சங்கடத்தை ராம நாமத்தின் மூலமாக அழித்து அனுமனுக்கு வெற்றியை உருவாக்கினார்.
அதன்பிறகு இலங்கையில் சீதை தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணிய பொழுது அதன் மூலமாக ராமரும் அனுமனும் அழிவர் என்பதால் ராம கதையை சீதையிடம் பாடி அதன் மூலமாக சீதையைக் காத்து அதன் மூலமாக ராமனை காத்து அதன் மூலமாக அனுமனையும் காத்தவன் என்று பொருள் வருமாறு பாடுகிறார்.
அதாவது, ராம நாமத்தின் மகிமையை கூறுகிறார். மருவில் உறு ஆனையும் காத்து என்ற பதத்தில் மடுவில் (ஆழமான நீர் பகுதி) மாட்டிக் கொண்ட யானை அல்லது மிகப் பெரிய தந்தங்கள் கொண்ட யானை என்ற பொருளில் கஜேந்திர மோக்ஷ கதையை பற்றி கூறுகிறார்.
கஜேந்திரனாகிய யானையை காப்பதற்காக திருமால் தன்னுடைய சக்கரத்தை ஏவி கஜேந்திரனுடைய காலை பிடித்துக் கொண்டிருந்த முதலையை அழித்த கதையை இங்கே கூறுகிறார். இப்படி அனைவரையும் காத்த அந்த ஆதிமூலம் என்னை காப்பது ஒன்றும் கடினமான வேலை இல்லையே என்ற கேள்வியுடன் இந்த செய்யுளை முடிக்கிறார்.
அதாவது செயற்கரிய செயல்கள் அனைத்தையும் செய்த திருமாலுக்கு இவருடைய இந்த சிறிய மன வருத்தத்தை அழிப்பது மிகவும் சுலபமே என்று இந்த செய்யுளில் திருமாலின் பல்வேறு விதமான வீரச் செயல்களை புகழ்ந்து தன்னுடைய வருத்தத்தை போக்குவதற்கு அழைக்கிறார்.
நாம் பல வாரங்களுக்கு முன்னால் யானைக்குரிய பல பெயர்களை பற்றிய ஒரு செய்யுளை பார்த்தோம். அதை இயற்றியதும் இவர்தான்.
இவருடைய இன்னும் சில செயல்களை நாம் வரும் வாரமும் பார்ப்போம் என்று முடிக்கிறார் பரணீதரன்.
Leave a comment
Upload