தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 11 - பித்தன் வெங்கட்ராஜ்

20240430162211613.jpg

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்

வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்-மகாகவி பாரதி

ஒரு வழியாக ஐபிஎல் ஜுரம் முடிவுக்கு வந்தது. இம்முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்று, அதுகுறித்த கருத்துகள் இன்னும் பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இச்சூழலில், அதற்குள் T20 உலகக் கோப்பை நடைபெறவிருக்கிறது. ஆம், நாளை ஜூன் 2இல் தொடங்கவிருக்கிறது இவ் 'இரட்டிருபது' உலகக்கோப்பை. உலகளவில் தீவிரமாகப் பின்தொடரப்படும் விளையாட்டுகளில் மட்டைப்பந்தும் ஒன்று. இந்நிலையில் தமிழ் நிலத்தில் எம்மாதிரியான பந்து விளையாட்டுகள் ஆடப்பட்டன என்பதைச் சற்று உற்று நோக்குவோம்.

கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப்படை வரிகளைப் பாருங்கள்.

'கால தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர்நிலை

வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ'-(பெரு - வரிகள்: 331-333)

செம்பொன்னால் செய்யப்பட்ட காற்சிலம்புகள் ஒலிக்க, வானளவு உயர்ந்த மாடத்தில் வரிப்பந்தை‌ அடித்தனர் என்கிறார் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். வரிப்பந்து என்பதற்கு நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து என்று பொருள்தருகிறார் நச்சினார்க்கினியர். மேலும், காற்சிலம்புகள் ஒலிக்க விளையாடுகின்றனர் என்ற புலவரின் குறிப்பைப் பார்க்கும்போது இது கால்களால் உதைத்து விளையாடப்படும் பந்தாட்டமோ என்ற ஐயம் எழுகிறது.

20240430162427797.jpg

போலவே, நற்றிணை 324ஆம் பாடலில்,

'ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி

அம்சில் ஓதி இவள்உறும்

பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே'

என்று வருகிறது. அஃதாவது, உருண்டுகொண்டிருக்கும் பந்தை மேலும் உருட்டி விளையாட ஓடிக் களைத்துக் கால்நோக மெல்ல நடக்கிறாள் என்ற பொருளைத் தருகிறார் புலவர் கயமனார். இது தற்காலக் கால்பந்தாட்டத்தினைக் கண்முன் நிறுத்துகிறது.

மேலும், 'வட்டாடுதல்' என்றொரு பந்தாட்ட வகையும் சங்கக் காலத்தில் இருந்துள்ளது. வள்ளுவர்கூட ‘அரங்கின்றி வட்டாடியற்றே’ என்று குறள் 401இல் குறிப்பிடுகின்றார். ‘அரங்கின்றி’ என்று அவர் குறிப்பிடுவதன்மூலம் வட்டாடுவதற்கென்று ஒரு குறிப்பிட்ட இடவசதியும், விதிமுறைகளும் உண்டென்று கணிக்கிறோம்.

சிலப்பதிகாரத்தில் இப்படியொரு வட்டாடல் பற்றிய குறிப்பு உள்ளது.

'உருள்கின்ற மணி வட்டைக் குணில்கொண்டு துரந்ததுபோல்' -சிலம்பு - (வாழ்த்துக்காதை - வரி: 15)

என்பது அப்பாடல் வரி. குணில் என்பதற்குக் 'குட்டையான கோல்' என்று பொருள். உருண்டுக் கொண்டிருக்கின்ற மணியான வட்டை ஒரு குட்டையான கோலால் அடித்து விரட்டியதுபோல, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலையெடுக்கக் கல் கொண்டுவருவதற்காக இமயம் நோக்கித் தன் படைநடத்தி விரைந்துசென்றான் என்கிறார் இளங்கோ. உருள்கின்ற பந்தைக் கோல் கொண்டு அடிப்பது என்பது தற்கால ஹாக்கியை (Hockey) ஒத்திருப்பதை நாம் உணரலாம்.

20240430162540916.jpg

அடுத்து, நற்றிணையில் ஒரு வட்டுப் பற்றிய குறிப்பு வருகிறது.

'செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்

விளையாடு இன்நகை அழுங்கா' -நற்றிணை 341 - வரிகள்: 2-3

செம்புள்ளிகள் பொறித்த அரக்கினால் செய்யப்பட்ட வட்டை, அடியில் நாக்குப்போல் இருக்கும் கோலால் அடிக்கும் விளையாட்டு என்பது பொருள். மேலும், இவ்வாட்டத்தின்போது சிரிப்பொலிகள் எதுவும் தோன்றாமல் அமைதியாக அடித்து விளையாடும் விளையாட்டு என்கிறது 'இன்நகை அழுங்கா' என்னும் வரி. இந்த ‘அடியில் நாக்குப்போல் அமைந்த கோல்’ மற்றும் ‘சிரிக்காமல் அமைதியாக அடித்து விளையாடுவது’ போன்ற குறிப்புகள் தற்கால கோல்ஃப் (Golf) விளையாட்டை நினைவூட்டுவதை மறுக்கமுடியவில்லை. மேலும் எதற்காகச் சிவப்புப் புள்ளிகள் கொண்ட பந்து என்றொரு கேள்வி எழும்போது, தொலைதூரத்திற்கு அடிக்கப்படும் பந்தாக இருப்பதால் எளிதில் அடையாளம் காணுவதற்காக அச்சிவப்புப் புள்ளிகளை அமைத்திருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.

இப்படிப் பந்தாடல் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் நிறைய உள்ளன. குறிப்பாக அவை கால்பந்து, ஹாக்கி மற்றும் கோல்ஃப் ஆகிய தற்கால விளையாட்டுகளை ஒத்தவையாக இருப்பதை உணரும்போது வியப்பாக உள்ளது. அதில் பொதுவாகப் பந்தாடல் என்பது பெண்களுக்குரியதாகவும், வட்டாடல் என்பது ஆண்களுக்குரியதாகவும் கருதப்படுகின்றன.

'பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்

விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே

எனத் தொடங்கும் 396ஆம் குறுந்தொகைப் பாடல் ஒரு பெண்ணுக்குத் தன் தோழிகளுடன் பந்தாடுதல் முதன்மையான விளையாட்டு என்பதைக் குறிப்புணர்த்துகிறது. தலைவி பால் உண்பதையும், தன் தோழிகளோடு பந்தாடுவதையும் விடுத்து, அவர்களைப் பிரிந்து இக்கடுமையான பாலை நிலத்தில் அவனோடு செல்ல எப்படித் துணிந்தாள் என்று செவிலித்தாய் பாடுவதைக் குறிப்பிட்டுள்ளார் கயமனார்.

ஆண்களுக்கு நிகராய்ப் பெண்களும் விளையாட்டுத் துறையில் சாதித்து வருவதைக் கண்ணுறும் இவ்வேளையில், கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்களும் விளையாட்டில் பெரும்பங்கு கொண்டிருந்தனர் என்பதை நமக்கு அறியத் தந்த கயமனார்க்கு‌ ஒரு தமிழ் முத்தம் தந்தோம்.

அவர்க்கும் நமக்கும் படிப்போர் யாவர்க்கும் அவர்தம் வாழ்வில் பெரும்பங்காற்றும் நம் தமிழுக்கு இது பதினோராவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்..‌.