தொடர்கள்
கதை
இதெல்லாம் ஜகஜம் - சுஶ்ரீ

20240501082737127.jpg

சாவகாசமா தினசரி பேப்பரை என் ஃபேவரைட் ஈசிசேர்ல உக்காந்து படிச்சிட்டிருந்தேன். திருவள்ளூர் அருகே புருஷனை கல்லால் அடித்துக் கொன்ற பெண்மணி. ரேஷன் கடைக்கு போக மறுத்து, மது அருந்த சென்றதால் கோபம்.

அபிராமி சமையலறையிலிருந்து வரும் சரக் சரக் சத்தம், தொடர்ந்து “என்ன இன்னிக்கு 8 மணி ஆச்சு அபி்அபினு ரெண்டாவது காபிக்கு சுத்தி வராம சமத்தா உக்காண்டிருக்கேள்” என் ரெண்டாவது காபி சரியான சூட்டில் என் பக்கத்திலிருந்த ஸ்டூல் மேல உக்காந்தது.

நான் அடுத்த சூடான செய்திக்கு தாவறதுக்கு முன்னால, காபியை எடுத்து ருசித்தேன், “ அபி உன் கைக்கு தங்கக் காப்புதாண்டி போடணும்,அதெப்படி ரெண்டாவது டிகாஷன்ல கூட உன் காபி அமிர்தமா இருக்கு”

“தங்கக் காப்பெல்லாம் வேண்டாம், அஞ்சு தேதி ஆறது போய் ரேஷன் கடைல போய் நின்னு சாமான்லாம்

வாங்கிண்டு வாங்கோ.”

“இந்த கூட்டத்துல எவன் ரெண்டு மணி நேரம் நின்னு வாங்குவான்,எனக்கு வேற வேலை இருக்கு.”வாய்ல இருந்து வார்த்தைகள் வந்தவுடனேதான் அந்த நியூஸ்பேப்பர் செய்தி ஞாபகம் வந்தது.ஆனா அபி அப்படியெல்லாம் செய்ய மாட்டா. ஆனாலும் சேப்டிக்கு சுத்துமுத்தும் பாத்தேன் கல் எதுவும் இருக்கானு.

“வேற யாரு போவா சுந்தரேசன் வேலைக்கு போகணும்(எங்க ஒரே பையன்)நான் சமையலை கவனிக்கணும், சரியா 1 மணிக்கு அபி என்ன சமையல்னு வந்து உக்காருவேளே.”

“அதில்லைடி போன தடவை போய் அவன் கைரேகை மெஷின்ல என் கட்டை விரலை வைக்கச் சொன்னான், கம்யூட்டர்ல பேர் வரலை, ஆள்காட்டி விரலை வைக்கச் சொன்னான் அதுவும் வேலை பண்ணலை, கையை சானிடைசர் போட்டு அழுத்தி துடைச்சிண்டு வச்சாலும் ஒண்ணும் நடக்கலை.”

வரிசைல எல்லாரும் கத்றானுக, ஒரு ஆளுக்கு பின்னால இத்தனை நேரமானு.

அந்த வரிசைல யாரோ ஒரு பொம்பளை, “சாமி பத்துப் பாத்திரம் தேச்சு கைரேகை அழிஞ்சு போயிருக்கும், போய் ஊட்டுக்காரம்மாவை அனுப்புன்றா.” எல்லாரும் என்னவோ பெரிய ஹாஸ்யத்தை கேட்ட மாதிரி சிரிக்கறதுகள்.

அபி, “ கூட்டத்துல பத்து பேர் பத்து விதமா பேசுவா, இதுக்காக ரேஷன் வாங்காம விடறதா? நம்ம அமைச்சர் வருத்தப்பட மாட்டாரோ”

“நீயும்தானே எப்பவாவது எனக்கு முடியாட்டா பாத்திரமெல்லாம் தேய்க்கறே.இதெல்லாம் இந்த பசங்களுக்கு எங்கே புரியறது”

“என்ன சந்துல சிந்து பாடறீங்க இந்த மாசம் நான் என் தங்கையாத்துக்கு போன ஒரு நாள் நீங்க பாத்திரம் தேச்சு வச்சிருப்பேள், என்னமோ தினம் தேய்க்கற மாதிரி சொல்றேளே”

“சரி சரி விடு கடைக்கு போய் நான் மொபைல்ல கூப்படறேன்

நம்ம நம்பர் வரப்ப வந்து ரேகை வை. யாரு ரேகை தேஞ்சி இருக்குனு தெரிஞ்சு போயிடும்”

ரேஷன் கடை விஷயம் விடுங்க இது மாசா மாசம் வரதுதான் பழகிப் போயிடுத்து.

போனமாசம் சிங்கப்பூர்ல இருந்து என் தம்பி, அவன் ஒய்ப், ரெண்டு பொண் குழந்தைகள் வந்து ஒரு வாரம் எங்க கூட இருந்தா. நமக்குதான் கொஞ்சம் கொலஸ்ட்ரால் ஜாஸ்தி ஆச்சே. சான்ஸ் கிடைச்சா அபிராமியை வாருவேன். அதுக்காக யாரும் என் அபிராமி மேல எனக்குள்ள பிரியத்தை கம்மியா எடை போட்டுடாதீங்க.

சாம்பார் பண்ணினா அந்த வாசத்தை பிடிச்சிண்டே தம்பி அவன் மனைவி முன்னால, பூண்டு ரசமா சூப்பரா மணக்கறதேம்பேன்.வெஜ் பிரியாணி பண்ணினா உன் அண்ணி மாதிரி மாதிரி சாம்பார் சாதம் யாராலயும்

பண்ண முடியாதுன்னுவேன்.

குலாப்ஜாமூன் நன்னாதான் பண்ணி இருப்பா ஆனாலும் ஹ்யூமர்னு நினைச்சிண்டு, இந்த வெல்லச்சீடை கோகுலாஷ்டமிக்குதானே பண்ணுவா, இப்ப ஏன்பேன்.

அப்பல்லாம் ஒண்ணும் சொல்லாம சிரிச்சு சமாளிச்சிப்பா.

ஆனா அவங்க திரும்பிப் போனவுடனே ரெண்டு நாள் பேச மாட்டா. நாமதான் டல் ஆச்சே ஏன்னு புரிய நாளாகும். டங்குனு டிபன் பிளேட் டேபிள்ல வக்கறப்ப உறைக்கும்.

“என்னாச்சு அபி ஒரு மாதிரி இருக்கே உடம்பு சரியில்லையா,

மனசு சரியில்லையா, குரோம்பேட் அக்கா ஆத்துக்கு வேணா ரெண்டு நாள் போயிட்டு வரயா?”

உடனே கண் கலங்க“எப்படா தொலைச்சுக்கட்டலாம்னு பாக்கறேள், கொசுவா, மூட்டைப் பூச்சியா அடிச்சு கொல்ல, பகவான் கொடுத்த நாளை கழிச்சிட்டுதானே போக முடியும்”

“என்னடி சொல்லிட்டேன் ஏன் இப்படி பேசறே”

“இன்னும் என்ன கேவலப் படுத்தணும், உங்காத்தவா யாராவது வந்தா போறுமே, நான்தான் இருக்கேனே

வடிச்சும் கொட்டணும், வாங்கியும் கட்டிக்கணும்.எனக்குனு பேச யார் இருக்கா, உங்க எல்லாத்துக்கும் கிள்ளுக் கீரை நான்”

இப்ப புரிஞ்சது நான் வேடிக்கைனு பேசறது பூரா அவளுக்கு எத்தனை வேதனை தந்திருக்கும்னு அதுவும் பிறத்தியார் முன்னால.

இப்ப சமாதானம் பண்றது கஷ்டம். சட்டையை மாட்டிண்டு வெளியே கிளம்பினேன், அவ பலமா மூக்கை உறிஞ்சிண்டு சமையலறைக்கு போனா.

தெரு முனைல வேலப்பன், பன்ருட்டி பலாப்பழம் கைல எண்ணை தடவி உரிச்சிண்டிருந்தான்.என்னைப் பாத்தவுடனே, ”சாமி, பன்ருட்டி பழம் கல்கண்டா இனிக்கும்”

அபிராமிக்கு பிடிக்குமே, அரைக் கிலோ கொட்டையோட வாங்கிண்டேன். ஆவின்ல ஸ்பெஷல் திரட்டுப் பால்

வந்திருக்காமே. (என் மாமியார் திரட்டுப் பால் பண்ணினா போக வர ஒரு ஸ்பூன்னு நானே காலி பண்ணிடுவேன்) ஆவின் ஸ்டால்ல கேட்டேன், நம்ம கடைக்கு வரல சாமி, பஸ்ஸ்டாண்டு கடைல கேளுன்னான். லொங்கு லொங்குனு ஒரு கி.மீ. நடந்து பஸ்ஸ்டாண்டு ஆவின் ஸ்டால் போனேன். இப்பதான் ஃபிரெஷா வந்தது சாரேனு ஒரு டப்பா கொடுத்தான்.

அந்த டப்பாக்குள்ளே ப்ரவ்ன் கலர்ல பளபளனு செக்சியா பளபளத்தது திரட்டுப்பால்.

கொஞ்சநேரம் அங்கேயே பெஞ்சுல உக்காந்து முழங்காலை லேசா அமுக்கி விட்டுண்டு மெதுவா ஷார்ட்கட்ல வீடு திரும்பினேன்.

“அபி,அபி இங்கே வாயேன்”

“என்னவாம் அபிக்கு இப்ப”

“இதோ பாரு என்ன வாங்கிண்டு வந்திருக்கேன்னு” பாக்கறது என்ன பலாப்பழ வாசனை வீட்டையே நிறைத்தது.

“வாயேன், இங்கே”

“அங்கே இருந்தே சொல்லுங்கோ என்னனு, அடைக்கு அரைக்கணும் எனக்கு”

“ஏய் அபிக்குட்டி வாடீன்னா பிகு பண்றயே”, கையை பிடிச்சு பெஞ்சில் உக்கார வச்சு பக்கம் நான் உக்காந்தேன்.

இப்பதான் பழைய அபிராமியை பாக்க முடிஞ்சது. லேசான புன்னகையுடன்,“வேணும்னா எல்லார்

முன்னாலயும் கேவலப் படுத்தறது,அப்பறம் கூப்டு கொஞ்சறது, எதுக்கு இந்த டிராமா.”

அவ தோளை இறுகப் பிடிச்சு என் பக்கம் திருப்பினேன்.

“ஐய்யோ விடுங்க பிள்ளையில்லா வீட்ல கிழவன் துள்ளி விளையாடறான்றாப்பல”

“நானா கிழவன் வா பாத்துடுவோம்”

“போறும், போறும் சுந்து வர நேரம்,இதெல்லாம் அப்பறம்”

“ஏய் அபி, அபி இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் அவன் வர”

“போங்க எனக்கு வேற வேலை இருக்கு “அவள் நழுவி

எழுந்து போனா. அவள் முகத்தில் இத்தனை வயதிலும் வெட்கம், சந்தோஷம்

என் மனதை நிறைத்தது.

வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்ப்பா சண்டை வரும்,

அதுக்கப்பறம் சமாதானம் பண்ணி சரி பண்றதும் ஒரு கலை.