தொடர்கள்
அழகு
யானைகள் முகாம் - மூன்றாம் பாகம்  ப ஒப்பிலி 

20240209085825732.jpeg

யானைகள் முகாம் இனிமேல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதற்க்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் மனித விலங்குகள் மோதல்கள் என்கிறார் ராமன் சுகுமார். இவர் ஆசிய யானைகள் குறித்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

யானைகள் முகாம் குறித்து கூறுகையில் தமிழகத்தில் யானைகள் முகாம் நூறு வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பிரிட்டிஷார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த முகாம்கள் ஆரம்பிக்கப்பட்ட பொழுது, காடுகளில் உள்ள மரங்களை வெட்டியபின் அவைகளை இந்த முகாமில் உள்ள யானைகள் மூலம் லாரிகளில் ஏற்றுவதற்கு பெரிய அளவில் பயன்படுத்த பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் விலங்குகள் மருத்துவம் வளர்ந்து வந்த நிலையில் அதே மருத்துவத்தை யானைகளுக்கும் பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டது. அந்த முயற்சிகள் நல்ல பலன்களை தரவே, யானைகளுக்கான மருத்துவ முறைகள் பயன்பாட்டிற்கு வந்தது, என்கிறார் அவர்.

20240209085849358.jpeg
அதற்கு முன்னரே யானைகள் குறித்த பாரம்பரிய அறிவு நமது கலாச்சாரத்தில் இருந்துள்ளது. அதனால்தான் யானைகளை பழக்கி போர் முனையில் அவைகளை மாபெரும் படையாக பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளனர் பல இந்திய அரசர்கள்.

இந்தியாவில் யானைகள் குறித்த புத்தகம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே கஜ சாஸ்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் யானைகளின் நகங்களின் எண்ணிக்கை, கண்கள், துதிக்கை, காதுகள், கழுத்து, மார்பு, முன்னங்கால்கள் , மற்றும் பின்னங்கால்கள், வால், தோலின் நிறம், ஆண் யானை என்றால் அதன் கொம்புகள் குறித்து மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த யானைகள் நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
20240209085915508.jpeg
இந்தியாவில் 1970கள் முதல் 1980கள் வரை முகாமில் இருந்து யானைகளுக்கு பொற்காலம் என்கிறார் ராமன் சுகுமார். அப்பொழுதான் யானைகளின் பராமரிப்பு குறித்து ஒரு சிறப்பான முறையை உருவாக்கினர் விலங்கு மருத்துவர்கள். அதற்கு டாக்டர் கோபாலன் என்பவரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் (யானை டாக்டர்) பெரும்பங்காற்றினார்கள் என்கிறார் அவர்.

எண்பதுகளுக்கு பிறகு வந்த வனச்சட்டங்கள் காடுகளை அழித்து மரங்களை பயன்படுத்தும் முறைகள் பெரிதளவில் குறைக்கப்பட்டு வனங்களை பாதுக்காக்க முழு முயற்சிகள் எடுக்கப்பட்டதால் முகாமில் இருந்த யானைகளின் பயன்பாடும் பெரிதளவில் குறையத்தொடங்கியது. எண்பதுகளின் பிற்பகுதியில் யானை சவாரி இந்த முகாம்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டது.

20240209085946143.jpeg

தற்போது யானை சவாரி என்பது தமிழகத்தில் உள்ள யானைகள் முகாமில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அசாம் போன்ற மாநிலங்களில் இந்த சவாரிகள் இன்றளவும் தொடர்கிறது. அதே போல கர்நாடகாவில் யானை முகாம்களில் இருந்த யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து விடவே, அந்த மாநில அரசு சில யானைகளை முகாம்கள் இல்லாத மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது, என்கிறார் அவர்.

பின்னர் இருபதாம் நூற்றாண்டில் மனித விலங்கு மோதல் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்த நிலையில், முகாம் யானைகளின் பங்கு திருத்தி எழுதப்பட்டு, முகாம் யானைகள் கும்கி யானைகளாக பழக்கப்படுத்தப்பட்டன.

பழக்கப்படுத்தப்பட்ட கும்கி யானைகள் காட்டு யானைகளை வனங்களுக்குள்ளேயே திரும்ப விரட்டவும் அல்லது அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து முகாம்களுக்கு அழைத்து வரவும் உதவின. அந்த பணியே இன்றளவும் தொடர்கிறது.

தமிழகத்தில் உள்ள யானை முகாம்கள் உலகத்திலே மிகவும் சிறந்து விளங்கும் முகாம்கள், ஏனெனில் இங்கு யானைகள் பயன்பாடு மற்றும் குட்டிகள் பிறக்கும் விகிதாச்சாரம் சிறந்த முறையில் உள்ளதே அதற்கு காரணம். இந்த முகாம்களில் இருக்கும் யானைகள் எழுவது வயதிற்கு மேலும் வாழ்ந்து வருவதும், நல்ல முறையில் குட்டிகள் பிறப்பதும் உலகளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள முகாம்களை போல் வேறெங்கும் காண முடியாது, என்கிறார் ராமன் சுகுமார்.

வருக்காலங்களில் இந்த முகாம்கள் நிதி சுதந்திரம் பெறவோ அல்லது அரசாங்கமே இதற்கென்று தனியாக நிதி ஒதுக்கி, யானைகளின் பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்தவேண்டும். முகாம்களின் உள்ள யானைகளுக்கான நீண்ட கால மேலாண்மைத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு திட்டங்கள் ஏற்படுத்தினால்தான் யானைகள் முகாமை சீரும் சிறப்புமாக செயல்படுத்த முடியும் என்பதை சுட்டிக் காட்டுகிறார் ராமன் சுகுமார்.

வரும் காலங்களில் இந்த முகாம்களின் பயன் பெரிதளவில் தேவைப்படும். ஏனெனில் நாளுக்கு நாள் மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றை சமாளிக்க கட்டாயமாக கும்கி யானைகள் தேவைப்படும். எனவேதான் இந்த முகாம்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு சிறப்பான பராமரிப்பு முறைகளை உருவாக்கிட வேண்டும் என்கிறார் அவர்.

மேலும் இந்த முகாம்களில் அடர்ந்த வனங்களுக்கு அருகிலேயே செயல்படுவதால் முகாம் யானைகளும் அவைகளின் இயற்கை சூழலை ஒட்டியே வாழ்ந்து வருவது மற்றும் ஒரு சிறப்பு காரணி. மேலும் இங்குள்ள பெண் யானைகளை காட்டு ஆண் யானைகள் புணர்வதால் மாறுபட்ட மரபணுக்களுடன் புதிய யானை குட்டிகள் பிறக்க ஏதுவாக உள்ளது, என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

(முற்றும்)