கையில் அழகான குட்டி யானை பொம்மை… இதயம் நிறையக்
கதைகள்… அனுபவ ஆளுமை… இப்படியொரு பெண்மையைச் சந்திக்க
நேர்ந்தது.
குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் கற்பனை ஆற்றலை ஒருங்கே
வளர்க்கும் WI-CALP– (Wisdom + Kalpana) (Home for Creative
Minds) அமைப்பின் நிறுவனர் மற்றும் க்ரியேட்டிவ் ஹெட் ஆகப்
பொறுப்பாற்றிக்கொண்டு, Homeschooler, Phonics Consultant-
ஆகவும், பேரன்டிங் கோச்-ஆகவும், பல என்.ஜி.ஓ.க்களில்
தன்னார்வலராகவும் பன்முகத்தோடு செயலாற்றி வரும் சரஸ்வதி
ஜானகிராமன், கட ந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நன்கு
அறியப்பட்ட கதை சொல்லியாக, கல்வியாளராக – சென்னையில்
வசித்தவர் - தற்போது பெங்களூருவிலிருந்து இயங்கி வரும் திருச்சி
தமிழச்சி.
சிறு வயதிலிருந்தே ஆசிரியையாகும் விருப்பம் கொண்டவர், இப்போது
கற்பிக்கும் துறைக்கே வந்தது, காலம் காட்டிய பாதை.
எப்போதும் குழந்தைகளோடு நேரம் ஒதுக்கியவருக்கு, கொரோனா
தனிமைக் காலத்தில், அவர்களைச் சந்திக்க முடியாத சூழல். பரிதவிப்பு.
என்ன செய்யலாம் என்று அக்கறையோடு யோசித்தபோது எடுத்த
அவதாரம்தான், இந்த kadhai with appu (கதை வித் அப்பு).
தன் பெண் குழந்தைக்குப் பிறந்த நாள் பரிசாக வந்த குட்டி யானை
பொம்மையை அப்பு… என்று பெயர் வைத்துக்
கொஞ்சிக்கொண்டிருந்தவர் – அந்த அப்புவை வைத்தே சொன்ன முதல்
கதைக்குக் கிடைத்த அபார வரவேற்பு. இன்னும் இன்னும் யோசிக்க –
வாசிக்க வைத்திருக்கிறது, உதவிக்கு, வீட்டில் இருக்கும் நூலகம்.
முன்னோர் சொன்ன நல்ல விஷயங்கள், சொந்த அநுபவங்கள் என்று
பட்டியலிட்டு கதை தயாரிக்க ஆரம்பித்தார். கையில் அப்புவோடு இவர்
கதை சொல்லும் ஸ்டைல், யூ ட்யூப்-ல் குழந்தைகளிடம் ஹிட் அடித்தது.
அப்போது இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல
முடிவெடுத்தபோது, சென்னையிலிருக்கும் தனது பரத நாட்டிய
ஆசிரியை, ‘Kalpa Vruksha’ தீபா சதாசிவம் மூலம் தனக்கு அறிமுகமான
கீர்த்தனாவின் பங்களிப்பை மெச்சுகிறார்.
கீர்த்தனா, அடிப்படையில் கர்னாடக சங்கீதத்தின் அடிப்படைப்
பயிற்சிகளை, குழந்தைகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் கற்றுக்கொடுக்கும்
ஆசிரியை. LIC Insurance Advisor-ஆகவும் இன்னொரு முகம்.
சரஸ்வதியின் வீடியோக்களுக்கு நவீனத்துவம் தரும் பொறுப்பை
கீர்த்தனா எடுத்துக்கொண்டதும், அப்பு most wanted ஆகிவிட்டது.
“முழுக்க முழுக்க சரஸ்வதி அக்காவின் உழைப்பு. ஆர்வம். நானும் இதில்
பங்கெடுத்தது எனக்குப் புதிய அடையாளம். அவர் சொல்லித் தான் நான்
99% கதைகளையே கேட்டிருக்கிறேன். உலகம் கேட்பதற்கு முன், முதலில்
நான் கேட்பது தனி சுகம்” என்று சிலாகிக்கிறார், கீர்த்தனா.
குக்கிராமத்தில் இருக்கும் குழந்தைகளும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற
ஏதுவாக, கதைகளில் நிறைய ஆங்கிலச் சொற்றொடர்கள், உலகக்
குழந்தைகள் இலக்கியத்தையெல்லாம் சரஸ்வதி அறிமுகம் செய்ய…
சிறியோருடன் பெரியவர்களும் அப்புவுக்குக் காது கொடுக்க
ஆரம்பித்தார்கள்.
240-க்கும் மேற்பட்ட (அம்மாடியோவ்….!) படைப்புகளைச் செய்திருக்கும்
சரஸ்வதியின் கதை வித் அப்பு அப்லோட் ஆகும் நேரத்திற்காக
எல்லோரும் காத்திருக்க முக்கியமான காரணம், அவரது கதை சொல்லும்
பாணி, குரல் மாற்றங்கள், எக்ஸ்பிரஷன்ஸ், அதோடு, கீர்த்தனாவின், ‘ந்ச்’
ஸ்டைல் எடிட்டிங், பொருத்தமான இசை, கதைக்கேற்ற விஷூவல் டச்!.
ஒவ்வொரு பதிவேற்றத்திற்கு முன்பும் இருவரும் உட்கார்ந்து பேசி,
அவ்வளவு மெனக்கெடுவது தெரிகிறது.
‘கல்வி வசதியில்லாத குழந்தைகளுக்கு இலவசக் கல்வி
கிடைக்கவேண்டும். உறுதியான அஸ்திவாரமும், உலக ஞானமும்,
ஒழுக்கமும் அவர்களைச் சென்று சேரவேண்டும்’ என்பதற்காகத் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். சரஸ்வதி சபதம்!
குழந்தைகளுக்கு ஆங்கிலம் பற்றிய பயம் இருப்பது இயல்பு. அதைப்
போக்க, அனிமேஷன், பாடல், இசை, விளையாட்டுகள் மூலம் சொல்லித்
தர, Bumble B Trust-ன் கல்வி – 40 என்ற App மூலம் குழந்தைகளுடன்
கைகோர்க்கிறார். Read with Saras and Kicha Mama எனும்
series-ஐ முழுத் திருப்தியோடு செய்துவருகிறார்.
Pepul Platform-ல் கலக்குவதுபோல், இன்னும் பல ஆச்சரியங்களை
தினத்தந்தியின் மின்மினி ஆப்-ல் விரைவில் எதிர்பார்க்கலாம்.
தெனாலி ராமன், மரியாதை ராமன், முல்லா, அக்பர் பீர்பால் கதைகள்
தாண்டி, தேசிய சிறப்பு தினங்கள், தீபாவளி, நவராத்திரி, சிவராத்திரி
மற்றும் சர்வ சமயப் பண்டிகைகளின் அருமை, வரலாறு, ஜப்பானியக்
கதைகள், உலக நன்மை, self-hygiene, parenting, global
warming, body shaming, good – touch; bad - touch… என்று
யாரும் தொட முடியாத ஏராள விஷயங்களைக் கதை வழியே சொல்லி,
சமூக மாற்றத்திற்கான விதைகளைத் தூவுகிறார்கள்.
“எவ்வளவு Views-ங்கிறதை விட View பண்றவங்களுக்கு எவ்வளவு
Useful-ஆ இருக்குன்னு தான் நினைப்போம்” என்று கீர்த்தனா சொல்லி
முடிக்க, “வெறும் கதைதானேன்னு அரிச்சந்திரா நாடகத்தை காந்தி
அலட்சியப்படுத்தாம, சத்தியம் தவறாம– அகிம்சையை ஒரு
கொள்கையாவே வாழ்ந்து காட்டினாரே! கதைக்கு அவ்வளவு சக்தி
உண்டு. ‘கதை வித் அப்பு’வும் அதைச் சாதிக்கும்” என்று நம்பிக்கையோடு
சொல்லிவிட்டு, குட்டித் தும்பிக்கை கொண்ட அப்புவை
அணைத்துக்கொண்டு… புத்தம் புதுக் கதை சொல்லக் கிளம்பினார்,
சரஸ்வதி.
wikalphhomeforcreativeminds@gmail.com-ல் வரும் புதிய
வாய்ப்புகளை வரவேற்கிறார். பின்னூட்டங்களுக்கு ஏற்ப மேலும்
மெருகேற்றிக் கொள்கிறார்.
இரு பெண்கள் சேர்ந்தால், குட்டி புரட்சி செய்ய முடியும்… ஆனால்,
குட்டீஸ்-க்கான புரட்சி செய்யும் இவர்களுக்கு, விகடகவியின் பெரிய
சல்யூட்!
Leave a comment
Upload