“கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்” என்ற குணா பட பாடலுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம்.
குணா குகை தான் திரைபடத்தின் கதை களம்.
கொச்சியில் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இணைந்தவர்கள் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற குழுவை உருவாக்கி அதகளம் பண்ணும் நண்பர்களின் கதை.
தொழிலாளர்கள் வர்க்கத்தை சேர்ந்த நண்பர்கள் வேலை பளுவிலிருந்து தங்களை விடுவிக்க தேர்ந்தெடுத்த இடம் சில்லென்ற கொடைக்கானல்.
பத்து நண்பர்கள் ஒரு குவாலிஸ்காரில் கொடைக்கானல் பயணத்தை மேற்கொள்வது தான் கதையின் ஆரம்பம்.
பத்து பேரில் ஒருவன் வரவில்லை என சொல்ல சந்தோஷ் என்ற நண்பனை சேர்த்து கொண்டு பயணத்தை தொடங்கும் போது வர மாட்டேன் என்ற நண்பனும் குவாலிஸ்ஸில் தன்னையும் இணைக்க, மிகுந்த குதுகுலத்துடனும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
பழனியில் குணா பட சிடியை வாங்கும் போது கதையின் அடித்தளம் ஆரம்பிக்கிறது. கூத்தும்,கும்மாளமும், குடியுமாக கொடைகானலை வலம் வருகின்றது நண்பர்கள் பட்டாளம்.
ரோமான்சம் படத்தில் ஒஜோ போர்டை வைத்து நடித்த ஷோபின் ஷகீர் (Soubin Shahir) மட்டுமே தெரிந்த முகம்.
குணா குகையை பார்த்தே ஆக வேண்டும் என தடை செய்யப்பட்ட பகுதியின் வேலியை தாண்டி பெரும் ஆரவாரத்துடன் குணா குகையில் வேலி தாண்டிய வெள்ளாடுகளாக மஞ்சும்மல் பாய்ஸ் இறங்கும் போது கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கின்றது திரைப்படம். மற்றவை வெள்ளி திரையில் காண்பதே சிறப்பு.
2006-ம் வருடம் கொச்சியில் இருந்து கிளம்பிய 11 நண்பர்களின் உண்மை கதை தான் இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின். படம் ஆரம்பிக்கும் போது கல்யாண வீட்டில் கயிறு இழுக்கும் போட்டியில் 11 நிஜ நண்பர்களும் 11 ரீல் நண்பர்களும் காண்பிக்க பாடுகின்றார்கள்.
நிஜத்தை பின்பற்றியே திரைக்கதை நகர்கின்றது.
‘Devil’s Kitchen’ குணா குகையின் ஒரிஜினல் அக்மார்க் பெயர். தமிழில் ‘சாத்தானின் சமையலறை’. பி எஸ். வார்டு என்ற ஆங்கிலேய ஆபீஸரால் 1821ம் வருடம் பெயரிடப்பட்டது. அதை உலகத்திற்கு பிரபலபடுத்தியவர் குணா படத்தின் மூலம் நடிகர் கமலஹாசன். குணா படத்தில் குணா குகையின் அழகை மட்டுமே காட்டி நம்மை பிரமிக்க வைத்தார்.
“ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்” பாடினால் பிரபலமானது குணா குகை. அதில் புதைந்துள்ள மர்மங்களால் குணா குகை தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. குணா குகையின் பலரும் அறியாத மறுபக்கத்தின் பதிவு தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’
கொடைகானலின் அழகை சிறப்பாக காட்டிய கேமரா அந்த மலையில் புதைந்துள்ள ரகசியத்தையும் திகிலோடு நம்மை அழைத்து செல்கின்றது. ட்ரோன் காமிரா மூலமாக மலையின் அழகை அழகாகவும், பயமுறுத்தலுடனும் காட்டியுள்ளது.
இளையராஜாவின் இசையில் ஏற்கனவே பிரபலமான பாடல் வரிகள் இந்த படத்தின் அடிநாதமாக ஒலிக்கின்றது.
படத்தின் முக்கிய இடத்தில் ஒலிக்கும் “ இது மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல…அதையும் தாண்டி புனிதமானது” என்ற வரிகளில் திரையரங்கமே கைதட்டி, சந்தோச குரல்கள் எழுப்பிய தருணங்கள். படத்தால் பாடலுக்கு பெருமையா அல்லது பாடலால் படத்துக்கு பெருமையா என்றால் இங்கு இரண்டும் இணைந்து உயிரூட்டமுள்ள படமாக மாறியது தான் நிஜம்.
டைரக்டர் சிதம்பரம். ஒரு வரி கதையை இவ்வளவு அழகாக திரைப்படமாக மாற்ற முடியுமா என ஆச்சரியப்பட வைத்துள்ளார். சாதாரண மனிதர்கள், அனைவரும் பரிச்சயம் இல்லாத நடிகர்கள்.
ஆனால் நிஜ கதையானது நடுவில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டதால், ஹீரோவும் தேவையில்லை, ஹீரோயினும் தேவையில்லை. டூயட் பாடல் தேவையில்லை. ஆனாலும் சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைத்து விட்டனர். ஒரு வரி கதையை விறுவிறுப்பாக மக்களை இரண்டு மணி நேரம் கட்டிப் போடும் நேர்த்தியான நெகிழ்ச்சியான அம்சங்கள் நிறைந்த நல்ல படம்.
படத்தின் பாதிக்கு மேல் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்தோடு நம்மையும் பயணிக்க வைத்துள்ளது.
படத்தை உருவாக்கிய அனைவரையும் நல்ல படத்தை கொடுத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும். பல விருதுகள் பெற தகுதியான படம்.
மிக சாதாரண படமாக ஆரம்பித்து நம்மை படத்தோடு ஒன்றி பயணிக்க வைத்த நேர்த்தியான படம்.
படம் பார்த்த பின் வீடு வந்த பிறகும் தாக்கத்தை ஏற்படுத்திய படம். திரையரங்கில் சென்று படத்தை பாருங்கள்.
Leave a comment
Upload