தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
எளிமையின் மறுவுருவம் சுதாமூர்த்தி -தில்லைக்கரசிசம்பத்

20240209070341433.jpeg
21 வருடங்களாக புது புடவை வாங்க ஷாப்பிங்கே போனதில்லையாம் நம்ம இன்ஃபோசிஸ் சுதாமூர்த்தி. “என்ன ஆச்சர்யம்! இன்ஃபோசிஸ் நாரயணமூர்த்தியை விட அதிர்ஷ்டசாலி இ்ந்த உலகத்தில் உண்டா?” என்று மற்ற ஆண்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு நிச்சயமாக இது ஒரு அபூர்வமான கொள்கை தான்.

20240209070416967.jpeg

காசிக்கு செல்லும் போது கங்கையில் நீராடும் சமயம் நமக்கு பிடித்த எதையாவது விட வேண்டும் என்பது ஐதீகம். சுதாமூர்த்தி காசி சென்றபோது தாம் ஷாப்பிங் செய்வதை குறிப்பாக புது புடவை வாங்குவதை விட்டு விடுவதாக உறுதி எடுத்திருக்கிறார். அதன்படி 21 வருடங்களாக கடைகளில் புடவை வாங்குவதில்லையாம். “மனிதருக்கு அழகு எளிமையும் நேர்மையான எண்ணமும் தான், இதை என் கணவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது” என்கிறார் சுதாமூர்த்தி. புடவை என்று இல்லை.., பொதுவாகவே பெண்களுக்கு ஷாப்பிங் என்றாலே கொள்ளை ஆசை.

கணவனின் பணத்தை கொள்ளை அடிக்கும் ஆசை தானே என்று கணவன்மார்கள் முறைக்கலாம். அது செல்லமான கொள்ளை, அதற்கு கூட உரிமையில்லையா என்கிறார்கள் மனைவிகள். இருந்தாலும் ஷாப்பிங் பிடிக்காத ஒரு பெண்மணி என்பது உலக அதிசயம் தான்.

20240209070457667.jpg

ஒரு புறம் முகேஷ் அம்பானியின் மனைவி நீடாஅம்பானி தனது இளையமகனின் திருமண ஏற்பாட்டு நிகழ்ச்சியில் 500 கோடி மதிப்புள்ள கையகல மரகத கல்லில் செய்த வைரமாலையை போட்டுக்கொண்டு ஜொலித்தார் என்றால் மறுபுறம் சுதாமூர்த்தி சாதாரண 500 ரூபாய் மதிப்புள்ள காட்டன் புடவையை அணிந்துக்கொண்டு இங்கிலாந்தின் பிரதமரான தனது மருமகனையும் மகளையும் பார்க்க லண்டன் கிளம்பி போகிறார்.
21 வருடங்களாக புது புடவை எடுக்கவில்லை என்றால் எப்படி என்ற சந்தேகம் வேண்டாம். சுதாமூர்த்தி கட்டும் எளிமையான புடவைகள் எல்லாம் பரிசாக அவரது சகோதரிகள், நண்பர்கள் மற்றும் என்ஜிஓ பெண்கள் அவருக்கு கொடுத்தவை. தான் பொக்கிஷமாக வைத்திருக்கும் கைவேலைப்பாடுகள் கொண்ட இரு புடவைகள், என்ஜிஓ பெண்கள் குழு கொடுத்தது என்று மகிழ்வுடன் கூறியிருக்கிறார். 20,000 புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கும்
சுதாமூர்த்தி புத்தகங்கள் வாங்குவதற்காக மட்டுமே அதிகம் செலவு செய்திருக்கிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை. இதுவரை 150 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கும் சுதாமூர்த்தி நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல கல்வியாளர், சிறந்த சமூகசேவகியும் கூட என்பதை அனைவரும் அறிவர்.

சமீபத்தில் சுதாமூர்த்தி ஒரு பேட்டியில் “நான் எப்படி என் கணவர் நாராயணமூர்த்தியை மிகப்பெரிய தொழிலதிபராக மாற உறுதுணையாக நின்றேனோ அதே போல் என் மகள் அக்‌ஷதா மூர்த்தியும் தனது கணவர் ரிஷிசுனக்கை இங்கிலாந்தின் பிரதமராக ஆக்கியுள்ளார். ஒரு மனைவி நினைத்தால் தன் கணவனை சமூகத்தின் பெரிய மனிதராக்க முடியும்” என்று சொல்கிறார். உண்மையே! ஒரு உயர்ந்த லட்சியமுள்ள பெண்மணிதான் தன் கணவனை உயரத்தில் கொண்டு நிறுத்த முடியும். சும்மா இல்லை. சுமார்40,000 கோடி சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார் சுதாமூர்த்தி. மென்கணினி பொறியாளரான சுதாமூர்த்தி, டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் என்பது பெருமைக்குரியது. 2006 ல் பத்மஸ்ரீ விருதும், பின் பத்மபூஷன் விருதையும் பெற்றவர்.
சமூகசேவை , பெண்கள் முன்னேற்றம், கல்வி போன்ற துறைகளில் சுதாமூர்த்தி ஆற்றிக்கொண்டிருக்கும் பணியை முன்வைத்து அவருக்கு சர்வதேச மகளிர் தினத்தன்று ராஜ்யசபா உறுப்பினர்பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆடம்பர வாழ்க்கையை கடன் வாங்கியாவது வாழ துடிப்பவர்கள் மத்தியில்,எல்லாம் இருந்தும், இல்லாதது போல வாழ தனி மன உறுதி வேண்டும்.

இது வெறும் புடவை வாங்காமல் இருப்பதை பற்றி அல்ல. மிக உயரத்தில் இருந்துக்கொண்டு, அடக்கம், எளிமையுடன் வாழ்வது என்பதும் அவ்வளவு எளிதல்ல.
பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் இலக்கணப்படி எளிமையை ஆடையாக்கி, அறிவை ஆபரணமாக்கி, வைராக்கியத்தை மனதில் இறுக்கி , ஆசையை ஏழைகளுக்கு செய்யும் தொண்டுகளில் வைத்து, நேர்மையை நேர்கொண்ட பார்வையில் பதித்து, உயர்ந்த சிந்தனையுடன், மனசாட்சி சொல்கிற பாதையில் தலைநிமிர்ந்து நடந்து செல்லும் சுதா மூர்த்தி அவர்களுக்கு ஒரு சல்யூட்.