"மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவன வாஸினி"
என்று மரகத நிறத்தில் காட்சியளிக்கும் மீனாட்சி, கதம்ப வனத்தில் வசிப்பவள்!, கல்யாணி என்றெல்லாம் போற்றியிருக்கிறார் மகாகவி காளிதாசன். மதுரைக்குக் கடம்பவன க்ஷேத்திரம் என்று புராணங்களில் பெயர் உண்டு. மற்றும் மீனாட்சி அம்மனின் விக்ரகம் பச்சை நிற மரகத கல்லால் ஆனது.
சக்தியில்லையேல் சிவமில்லை எனச் சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி பீடங்களாய் விளங்கும் ஸ்தலங்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். ஆனால், மதுரையில் மட்டும் சக்திக்கே முதல் மரியாதை. இங்கு அம்மனை முதலில் தரிசித்த பின்னரே சுந்தரேசரை வணங்க வேண்டும். மதுரையில் சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்தாலும், சமயக் குரவர்கள் பாடல்கள் பாடியிருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மனை அலங்கார ரூபினியாகப் பார்ப்பது மிகவும் அற்புதமானது. கர்ப்ப கிரகத்தில் அம்மனைப் பார்க்கும் போது மாணிக்க மூக்குத்தி ஜொலிக்கும்.
மதுரையில் மீனாட்சி அம்மன் தினமும் எட்டு விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறார். அதனால், அம்பிகை தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றார். இது மற்ற கோவில்களில் இல்லாத தனிச்சிறப்பாகும்.
விடிவதற்கு முன்பு நடை திறப்பில் - ஸ்ரீபாலா
அதிகாலை - ஸ்ரீபுவனேஸ்வரி
காலை - ஸ்ரீகெளரி
உச்சி வேளையில் - சியாமளா
சாயரக்ஷை - ராஜ மாதங்கி
அர்த்த ஜாமம் - பஞ்சதசி
பள்ளியறை செல்கையில் - சோடஷி
பள்ளியறையில் - மகா சோடஷி
என்று எட்டுத் திருக்கோலங்களில் தினமும் அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார். மதுரை மீனாட்சிக்கு ஐந்து கால பூஜைகள் தினமும் நடைபெறும். அப்போது இந்த எட்டு அலங்காரங்களில் அழகு மிளிர அன்னை எழுந்தருளுவார். அதிகாலையில் சின்னஞ்சிறுமியாக வடிவெடுத்து உச்சி வேளையில் மடிசார் புடவையில் சியாமளாவாகி, சாயங்காலம் தங்கக் கவசம் வைர கிரீடம் அணிந்து ராஜமாதங்கியாக அரசியாகி, அர்த்த ஜாமத்தில் வெண்பட்டுப் புடவை உடுத்தியவாறு காட்சி தருவார்.
இந்த அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்பது சத்தியம். அம்மனின் இந்த எட்டு வடிவங்களை ஒரேநாளில் காண்பவருக்கு அரசனுக்குரிய செல்வங்களை அருளுவார் என்பது நம்பிக்கை.
மூக்குத்தி தீபாராதனை:
அர்த்த ஜாமத்தில் மல்லிகைப் பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்தவுடன், இரவு பள்ளியறைக்கு ஸ்வாமி சந்தியிலிருந்து சுந்தரேஸ்வரரின் வெள்ளிப் பாதுகைகள் எடுத்துச் செல்லப்படும். பாதுகைகள் வந்தபின் அம்மனுக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. வெண்பட்டால் அம்மனை அலங்கரித்துள்ளதால் அன்னையின் மூக்குத்தியை மிகத் தெளிவாகத் தரிசிக்க முடியும். மூன்று வகையான தீபங்கள் அப்போது காட்டப்படுகின்றது. அம்மனுக்குக் காட்டப்படும் மூன்றாவது தீபத்தின் போது அம்மனின் திருமுகத்தினையும், மூக்குத்தியையும் தெளிவாகத் தரிசிக்கலாம். மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அம்பிகையின் சந்நிதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்திய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது. இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும். பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்குச் சிறப்பு அதிகம்.
குழந்தை இல்லாதவர்கள் காலையில் மீனாட்சியின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையைத் தரிசித்து மனமுருகி வேண்டினால் கட்டாயம் பலன் தருவார். வியாபாரம், தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரம் கண்டு முன்னேற்றம் பெறலாம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோயிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையைத் தரிசித்தால் நல்ல பலனைக் கொடுக்கும்.
மீனாட்சி அன்னையின் பாதம் பணிவோம்!!
வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்!!!
Leave a comment
Upload