திருமதி இந்திரா காந்தி இறந்த உடனே நாடே அல்லோல
கல்லோலப்பட , வடக்கே கலவரங்கள் வெடிக்க, இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலைமை சென்னையிலேயே எங்களுக்கு ஏற்பட்டது .
எங்கள் வீட்டில்,தேச நிலவரம், புதுப் பிரதமர் ராஜிவ், மறைந்த வீராங்கனை இந்திரா,இப்படிப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது,ஒரு பட்டிமன்றத் தலைப்புக் கேள்வி எழுந்தது.
"யார் அவரவர் (இதய) உலகின் மிகப் பெரிய பெண் தைரியசாலி?"
'இந்திரா காந்தி', என்று நானும், என் அப்பாவும் சொல்ல,
'கோல்டா மேயர், மார்கரட் தாச்சர்
அன்னி பெசன்ட், கிளீயோ பாத்ரா
ஜான்சி ராணி, மேரி க்யூரி, வேலு நாச்சியார், ஒளவயார், திரௌபதி, சாவித்ரி (திருமதி.சத்யவான் ), ராணி விக்டோரியா, அல்லி ராணி, பி. டி உஷா, மதர் தெரசா, குந்தவை தேவி' என்று ஆளாளுக்கு,என் சகோதரி,தம்பி , சில உறவினர்கள்,
நண்பர்கள் எல்லாம் மானாவாரியா ஒரு பதிலைச் சொல்ல,
எங்கள் அம்மா மட்டும் கவனம் சிதறாமல் அருவாமணையில் வெண்டைக்காய்த் தலைகளை கில்லட்டின் செய்த பின், நான்கைந்து தலை இழந்த காய் சேர்த்து சிறு சிறு அரை செ.மி கன பென்டகன்களாக வெட்டிக்
குவித்துக் கொண்டிருந்தாள்.
அருகில் என் மூணு வயது மகள்
வெட்டின வெண்டைக்காய்த் தலைகளை சுவரில் ஒட்டி ஒரு கலை வடிவப் பூனையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தாள்..
"அம்மா உன்னோட உலகத்தில் சிறந்த வீராங்கனை யாரு? "என்று என் அக்கா கேட்க,
அம்மா நிமிராமல்
"நல்லூர் ஜானா பாட்டி" என்றாள்.
"அது யாரு "
"உனக்கும் ரமணிக்கும் ஒருவேளை ஞாபகம் இருக்கலாம்.உங்க சின்ன வயசுல 1956ல நம்ம மயிலாப்பூர் வீட்ல பாத்திருக்கேள் ."
"எனக்கு அந்த மாதிரி எந்தப் பாட்டியும் ஞாபகம் இல்லை." என்றேன்.அக்காவும் ஆமோதித்தாள்.
"சரி . உங்களுக்கு ஜானா பாட்டி பத்திச் சொல்றேன்..
வெண்டைக்காய் வெட்டி முடித்த பின். " என்றாள் அம்மா.
முடித்த பின் ஆரம்பித்தாள்.
ஜனாப் பாட்டிக்கு 1956ல் அறுபது வயசு இருக்கும்.
அவளுடைய முப்பத்தஞ்சு வயசில 1930 ல கணவன் டைபாய்ட்ல இறந்த பின் நெல்லைப் பக்கம்,காரைக் குறிச்சியிலிருந்து தன் அப்பா வீட்டுக்கு, நல்லூருக்கு வந்தாச்சு.
அந்தக் கால வழக்கப்படி தலை முடி களைந்து முக்காடு. காவிப்புடவை உடுத்தி... என்று கட்டாயப் படுத்தப்பட்டு ஏற்படுத்திய விதவைக்கோலம்.
குழந்தை, குட்டி கிடையாது.
ஜானாவின் அம்மா இதுக்கு ஒரு வருஷம் முன்னால தான் பரமபபதம் போய்ச் சேர்த்து இருந்தாள்.
நல்ல காலம், அப்பா இருந்தார். அப்பா அந்தக்காலத்தில் மண்ணெண்ணய் டீலரா இருந்தார். நெல்லையில் கடை. நல்ல பணம்.
ஒரே பெண். நாலு பிள்ளைகள்.
பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆயாச்சு.
பிள்ளைகளுக்கு வியாபாரத்தையும் நிலபுலங்களையும் பிரித்துக்
கொடுத்து விட்டு
விதவைப் பெண்ணான ஜானாவுக்கு நல்லூர் வீட்டையும் கொஞ்சம் பணத்தையும் எழுதி வெச்சுட்டு ஒரு பெரிய மாரடைப்பில் இறைவனடி சேர்ந்தார்.
ஆக 1945 இல் இருந்து ஜானாக்கு அவள் வீட்டில் நல்லூரில் தனி ஆவர்த்தனம் தான்.
ஆஜானு பாகுவாக அஞ்சேமுக்கால் அடியில், கொஞ்சம் பயமுறுத்தும் ஒரு உருவம்.அழகுல சேத்தி இல்லவே இல்லை. நார் மடிப்புடவை. கணீர்னு பேசுவா. கோவிலில் பெருமாள் முன்னால சத்தமா, , ஸ்வர ஸ்தானங்கள் சுமாரா ஒத்துழைக்கப் பாடுவாள்.
.பரம பக்தி. அப்பா குடுத்த சொத்துக்குள்ள காலட்சேபம்.
ஜானா அசாத்திய பலசாலி.
ஊரில் ஒரு கோட்டை நெல்லைத் தனி ஆளா உரலில் போட்டு குத்தி அரிசி ஆக்கிவிடுவா.. என்பார்கள்.
நூறு தோண்டி ஜலம் கிணத்துல இருந்து இறைச்சுக் கோவில் காரியங்களுக்கு கொடுப்பா..
தாமிரபரணி ஆத்துல எவ்வளவு வெள்ளம் வந்தாக் கூட கைய வீசிப்போட்டு, காலை அடித்து, ஆம்பிளை மாதிரி எதிர் நீச்சல் போட முடியற உடம்பு என்று ஊர்ல எல்லாரும் கேலி செய்வார்கள்.
ஆனா திடுதிப் என்று எதையாவது சமயம் தெரியாமல் யாரிடமாவது கேட்டு விடுவாள். தனக்கு தெரியாத விஷயம் எல்லாம் சில சமயம் ரொம்பத் தெரிஞ்ச மாதிரி பேசுவா.
ஒரு வகையில் இப்போ நீங்க சொல்ற மாதிரி ஏதோ ஒரு காம்ப்ளக்ஸ் போலத் தான் இருந்திருக்கணும்.பாவம் அவளுடைய நல் வாழ்க்கை அவளிடமிருந்து திடீர்னு பறிக்கப்பட்ட காரணமாகவும் இருக்கலாம்.
ஊரில் இவ அசடா,?அல்லது அசாத்திய சாமர்த்தியமா? என்று
யாருக்கும் புரியாது.
நாள் ஆக ஆக, வயது ஏற ஏற, ஜானா, ஜானா பாட்டி ஆகிவிட்டாள்.
ஜனா பாட்டி அந்தக்காலத்தில் அஞ்சாப்பு வரை படிச்சதால் தமிழை ஓஹோ என்றும் இங்கிலிஷை கொஞ்சம் எழுத்து கூட்டியும் படிப்பாள்.
ஜானா பாட்டி பற்றிய இத்தகைய பிம்பம் மட்டும் தான் இதுவரை ஊரில் பரவலாக இருந்தது......
தர்மகர்த்தாவின்
பொண்ணு வசந்தாவும் அவரோட கவர்மண்ட் ஆபீஸர் மாப்பிள்ளையும் தங்களோட ரெண்டு வயசு தலைச்சன் பிள்ளையை அழச்சுண்டு மதுரைல இருந்து ஒரு வார லீவுக்கு நல்லூர் வரும் வரையில்....
குழந்தை ரொம்ப அழகு. பால கிருஷ்ணன் மாதிரி.தங்க
விக்கிரஹம் மாதிரி.வசந்தா குழந்தையோட வெளியேவே வரல.
காரணம், வசந்தா கிட்ட அவ அம்மா சொல்லி இருந்தா . "எல்லார் கிட்டயும் டக்குன்னு குழந்தையைக் குடுக்காதே . யார் கண்ணுல என்ன இருக்குமோ. திருஷ்டி படப் போறது."
இப்படி ரெண்டு நாள் போச்சு.
மூன்றாம் நாள் காலையில் தர்மகர்த்தா வீட்டுத் திண்ணையில்
வந்து உக்காந்த ஜானா பாட்டி "ஏண்டி,வசந்தா, . குழந்தைய என் கிட்ட குடுக்க மாட்டியா! " என்றதும்
வேற வழி இல்லாம தயக்கத்தோட குழந்தைய குடுத்தா வசந்தா.
வாங்கி இச்சு இச்சுனு முத்தம் குடுத்த ஜானா பாட்டி " குழந்தை கன்னத்தை பாருடி! ரோஜாப்பூ போல இருக்கு"னு சொல்லி கன்னத்தை லேசா கிள்ளினா.
கொழந்த ஓ ன்னு வீறிட்டு கத்தித்து.
குழந்தயை ஜானா பாட்டி கிட்ட இருந்து பிடுங்காத தோஷமா வாங்கி உள்ளே போனா வசந்தா.
அன்னிக்கு ராத்திரி குழந்தை கன்னம் செக்க செவேல்ன்னு ஆச்சு. ஒரேடியா ஜுரம் வேற. கன்னத்துக்கு சைபால் போட்டா.
அனாசின் பொடி பண்ணி தேன்ல கொழச்சு உள்ளுக்குக் கொடுத்தா. ஒண்ணுக்கும் கேக்கல.
கார்த்தால சிவந்த கன்னத்துல
நல் முத்து போல ஒரு கொப்பளம்.
மருத்துவச்சி பேச்சி பாத்து பயந்து வாசலுக்கு ஓடி வந்துட்டா.
"அம்மா! பெரிய அம்மா வந்திருக்காக. வைசூரிம்மா. உடனே வேப்பிலை எடுத்தாந்து
கெட்டுங்கம்மா." என்று ஓடி விட்டாள்.
வசந்தா அழ,அவள் கணவன் போஸ்ட் ஆபீஸ் போய் டிரங்க் கால் போட்டு அரசாங்க ஜீப்ல வசந்தா,குழந்தையோட மதுரை ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.
குழந்தை அதிருஷ்ட வசமா ரெண்டு மாசம் போராடிப் பொழச்சான். ஆனா உடம்பு முழுக்க வடு. ரணம் ஆற ஆறு மாசமாச்சு.
இந்த விஷயத்துக்கு அப்புறம் ஊர்ல ஜானா பாட்டியைப் பார் த்தாலே எல்லார் வீட்லயும் பயந்து போய் வாசக் கதவை சாத்திக்கொள்ள ஆரம்பிச்சுட்டா.
பாவம் அவளுக்கு இதெல்லாம் தெரியாது.
அப்பொறம் சில நாள் கழிச்சு
அவ வீட்டு வாசல்ல தலையாரி ராமசாமிக் கோனார் புது சைக்கிள்ல வந்த போது ஜானா பாட்டி " என்ன கோனாரே சைக்கிள் புதுசா? " என்று கேட்ட அஞ்சு நிமிஷத்துல டயர் ரெண்டும் பஞ்சர் ஆயுடுத்து.. என்றார்கள்.
ரங்கநாயகி வீட்டு வாசல்ல கொத்து கொத்தா கொடி மல்லி பூத்துக் குலுங்கின போது ஜானா பாட்டி " ரங்கா. இவ்வளவு மல்லிப்பூ
ஒரு கொடில நான் பாத்ததே இல்லைடி . பேஷ்." னு சொன்னா.
அன்னிக்கு ராத்திரியே
பெருச்சாளி மல்லிப்பூக்
கொடியை வேரோட புடுங்கிப் போட அப்புறம் அங்க மல்லிச் செடியே வளரல.
இப்படி பாட்டி "கண் வைத்த " இடத்தில் எல்லாம் விதி விளை யாடித்து. மக்கள் மனசுல பாட்டி ஒரு டெரர் ஆயுட்டா.
எஸ் எஸ் எல் சி பரிட்சை எழுதின பசங்க பாட்டி வீட்டு வாசல் வழியா கோவிலுக்குப் போகாம,ஊரச் சுத்திப் போனாங்க.
எங்கயாவது பாட்டி "பரிட்சை நன்னா எழுதின போலிருக்கே!"
என்று கேட்டு விட்டால் பெயில் தான்னு பயத்தில.
பிள்ளத் தாச்சி பொண்ணு எல்லாம் அந்த ரோட்லயே போக மாட்டா. பாட்டி தங்களை எத்தனை மாசம்னு கேட்டுட்டா அபார்ஷன் ஆயித் தொலைச்சிடுமோன்னு பயம்.!
இதெல்லாம் கூட பரவால்ல. ரோட்ல விளையாடுற சின்னக் குழந்தைகள் எல்லாம் கூட பாட்டி வீடு முன்னால பலூன் ஊதாது.
பாட்டி வந்து " பலூன் பெருசா இருக்கே" னு சொல்லிட்டா பலூன் வெடிச்சுடப் போறது.. என்று தான்!"
கதை சொல்லிக் கொண்டே வந்த அம்மா கொஞ்சம் நிறுத்தினாள்.
கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்.
ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பி ஆரம்பிக்கப் போன போது
என் அக்கா கேட்டாள்.
"ஏம்மா,அப்போ நீயும் ஜானா பாட்டிய பாத்து பயந்தியா?"
"அவ்வளவா இல்லை. எனக்கு இந்த கண் திருஷ்டி விவகாரம் எல்லாம் அரசல் புரசல் ஆகத் தான் அப்போ தெரியும்.நான் இப்போ சொன்ன விவரங்கள் எல்லாம் பிற்காலத்தில் பேச்சு வாக்கில் கிடைத்தது தான்.தவிர 1945 லேயே நான் கல்யாணமாகி ஊரை விட்டுட்டு மெட்ராஸ் போயாச்சே. அப்பப்போ ரெண்டு மூணு நாள் ஊருக்கு லீவுல வர்றது தான்."
"அப்புறம் எப்படி ஜானா பாட்டி பத்தி
ரொம்ப தெரிஞ்ச மாதிரி சொல்றே?."
"நான் சொல்ல வந்த கதையை கொஞ்சம் சொல்ல விடறீங்களா?"
என்று அம்மா சொன்னதும் கப் சிப் ஆனோம்.
அம்மா ஆரம்பித்தாள்.
"1956 னு ஞாபகம். உனக்கு அஞ்சு, உன் அக்காக்கு ஏழு வயசு இருக்கும். நாம அப்போ மெட்ராஸ்ல,மயிலை கச்சேரி ரோடுல இருந்தோம்.நவம்பர் மாசம். காய்கறி வாங்கற போது சவுத் மாடா ஸ்ட்ரீட்ல, ஜானா பாட்டி என்னைப் பாத்துட்டா.
"ஏண்டி! நீ நல்லூர் பங்கஜம் பொண்ணு லக்ஷ்மி தானே?"
"நீங்க ஜானா அத்தை தானே? "
( ஜானா மாமியா, பாட்டியா என்ற குழப்பம் வேண்டாம் என்று "அத்தை"! )
ஜானா பாட்டி ,ஒரு விசேஷத்துக்காக நல்லூரிலிருந்து போன வாரம் மெட்ராஸ் வந்து தன் சகோதரன் வீட்டில்,கேசவப் பெருமாள் கோவில் பக்கத்தில் இப்போ இருப்பதாவும்,
என்னைப் பாத்து நாளாச்சு என்பதாலும், என்னை அவளுக்கு சின்ன வயசிலேந்து ரொம்பப் பிடிக்கும் என்பதாலயும்,
நம்ம வீட்டுக்கு வந்து நாலு நாள் இருக்காப்போவதாய்ச் சொல்லி என் அட்ரஸ் கேட்டாள்.கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பினேன்.
வீட்ல என் அம்மா, அதான் உங்க பங்கஜம் பாட்டி,அப்போ வந்திருந்தா.ஜானா பாட்டி நம் வீட்டுக்கு வரும் விஷயம்
சொன்னதும் உங்க பங்கஜம் பாட்டிக்கு சுத்தமா பிடிக்கல.
" ஜானா அவ தம்பி வரது வீட்ல தான் இப்போ இருக்கா போல . ஆனா ரெண்டு பேருக்கும் எப்பவும் ஒத்துக்காது. சதா சண்டை தான்.அது தான் இங்க வரேன் என்கிறா.இங்க வந்து தொண
தொணன்னு பேசுவா. கிளம்ப மாட்டா.நம்ம வேல கெட்டுப்போகும். தவிர அவ கண்ணு பத்தி உனக்குத் தெரியும்.
கொள்ளிக் கண்ணு. அவ எது நல்லா இருக்குனு சொன்னாலும்
அது நாசமாப் போயிடும். "
என்றாள்.
" சரி அம்மா. நான் பாத்துக்கறேன்.
நீ ஜானா பாட்டியோட கொள்ளிக் கண்ணப் பத்தி யாரிடமும் புலம்பதே. என்ன செய்யறது...வா..ன்னு அவ கிட்ட சொல்லிட்டேன். நாலு நாள் இருந்துட்டுப் போகட்டும்."
என்றேன்.
அடுத்த நாள் காலைல நல்ல மழையில குடையும் கையுமா ஒரு மஞ்சப்பையோட ஜானா பாட்டி நம் வீட்டுக்கு வந்துட்டா.
பங்கஜம் பாட்டிக்கு இது பிடிக்கல.
வா..ன்னு மட்டும் சொல்லிட்டு மூஞ்சிய தூக்கி வெச்சுண்டுட்டா.
ஜானா பாட்டி வந்த ஒரே நாளுல நம் வீட்ல ஒரு ஆளாவே மாறிட்டா.
உங்களுக்கு எல்லாம்,...அதான், உனக்கும் அக்காவுக்கும்... பட்டர் பிஸ்கெட் வாங்கிக்கொடுத்தா.
பக்கத்து வீட்டு ஆல் இந்தியா ரேடியோ மாதிரியான பாட்டி மீனாட்சிக்கு ரொம்ப பிரன்ட் ஆயுட்டா.நம் வீட்டு மாடில குடி இருந்த கர்நாடக சங்கீதப் பாடகி கனகம், அவ புருஷன், அம்மா ரெண்டு குழந்தைகள், எல்லாரோடவும் மூணு நாள்ல அந்நியோன்யம் ஆயிட்டா.
ஆனா, வந்த அன்னிக்கே,நம் வீட்டு வேலைக்காரி அலமேலு வேலை செய்யற விதத்தை ரொம்பப் பாராட்டினா.
அடுத்த நாளிலிருந்து அலமேலு வேலைக்கு வரல. காய்ச்சல்.
பங்கஜம் பாட்டி
" இது நாம எதிர்பாத்தது தானே? " என்றாள்.
மூன்றாம் நாள் பக்கத்து வீட்டு மீனாட்சி பாட்டியின் ஒரு காது தோடு கீழே கழண்டு விழுந்து அதை வீடேல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள்.
ஜானா பாட்டி என்னிடம் சொன்னாள்.
"பாவம் பக்கத்து வீட்டு மீனாட்சி. ரொம்ப அழகான தோடு. நேத்திக்கு தான் நான் அவங்க கிட்ட தோடு ரொம்ப அழகா இருக்கு னு சொன்னேன். "
எனக்குள்ள இப்போ கொஞ்சம் பயம் வர ஆராமிச்சது என்பது உண்மை தான்.
ஆனா ஒரு சின்ன சந்தோஷமும் கூடவே எழுந்தது.
ஜானா பாட்டி மூன்றாம் நாள் காலையில் "லக்ஷ்மி. மெட்ராஸ் பரவாயில்ல. மழை நல்லா பெய்யறது " என்று சொல்லி முடிச்ச ஒரு மணியில் மழை சுத்தமா நின்னு வெயில் வந்து நான் எல்லா தோச்ச துணியையும் உலத்திட்டேன்.
அப்படியாக ஜானா பாட்டி வந்து நாலு நாள் ஆச்சு. எனக்கு நல்ல காலம்.. பெரிய நஷ்டம் ஒண்ணும் இல்லை.ஆனால் எப்ப கிளம்பப்போறான்னு தான் தெரியல. மர்மமாக இருந்தது.
பங்கஜம் பாட்டி வேற " எப்போ கிளம்பறா னு நேர கேட்டுடு . தப்பில்லை." என்று ஏத்தி வீட்டுக்கொண்டு இருந்தாள்.
நல்ல காலம் இதுக்கெல்லாம் அவசியம் இல்லாம போச்சு.
அடுத்த நாள் ஜானா பாட்டி என்னிடம் வந்து நாளைக்கு நான் தூத்துக்குடிக்கு என் தம்பி திருமலை வீட்டுக்குப் போறேன். ராத்திரி வண்டி. விஷயம் தெரியுமோ?இங்க மாடில குடி இருக்கற பாட்டு பாடற கனகமும் நாளைக்கு என்னோட வரா. ஒரே கம்பெர்ட்மென்ட். அவளுக்கு திருச்செந்தூர் கோவில்ல கச்சேரியாம். அவ அம்மா,புருஷன்
ரெண்டு கொழந்தைகள், பிடில் காரன், மிருதங்கக் காரன், எல்லாம் வராங்களாம். மாமி நீங்க கூட வர்றது ரொம்ப சௌகரியாமா இருக்கும்னு கனகம் சொன்னா. "
என்று மூச்சு விடாமல் சொன்னாள்.
"ஹ்ம்ம் கச்சேரி நடந்த மாதிரி தான்!" என்று என் அம்மா முணு
முணுத்தது என் காதில் மட்டும் கேட்டுது. ஆனாலும் ஜானா பாட்டி கிளம்பும் நியூஸ் கேட்டு அம்மாவின் முகம் உடனே பிரகாசம் ஆகிவிட்டது.
அடுத்த நாள் 22 நவம்பர் 1956 அன்று மாலை,ஜானா பாட்டியும் கனகம் குடும்பமும், டாக்ஸி ஏறி எழும்பூர் போயி தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல எட்டாவது பெட்டில ஏறிக் கிளம்பியாச்சு .
வீட்டுக்குள் என் அம்மா "பெருமாளே! நல்ல காலம் பிழைத்தோம். " என்றாள்.
அடுத்த நாளைத் தமிழ்நாடே என்னிக்கும் மறக்க முடியாது.
காலை ரேடியோவில் செய்தி.
" அரியலூர் தாண்டி, மருதை ஆற்றின் வெள்ளப்பெருக்கில், இன்று,நவம்பர் 23 ம் தேதி அதிகாலையில், ரயில் பாலம் அடித்துக்கொண்டு போக..அது அறியாத மெட்ராசிலிருந்து வந்த தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்,பாலம் தாண்டிச் செல்ல.... தோரணம் போல என்ஜின்.. பின்னர் ஏழு பெட்டிகள்.. எல்லாம் பாலத்திலிருந்து விழுந்து தொங்கிப் பின்னர் ஆற்று வெள்ளத்தில் மக்களுடன் அடித்துக்கொண்டு செல்லப்பட்டன. ."
எட்டாவது பெட்டி மட்டும்
செங்குத்தாக ஆற்றில் தொங்கி நின்றது. விபத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் இறந்திருக்கலாம். சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ரயில்
விபத்து "... என்பது போல நியூஸ் வந்துது.
அக்கம் பக்கத்துக்காரர்கள் நம் வீட்டுக்கு வந்துட்டா.
கனகம் ரொம்ப நல்ல பொண்ணு. பாவம். பிள்ளைகள் குமார், ரவி எல்லாம் சமத்து. வீட்டுக்காரர் ரொம்ப நல்லவர். கனகத்தோட அம்மா ரொம்ப சாது. என்ற மாதிரி எல்லாருக்கும் வருத்தம். சில நெருங்கியவா அழ ஆரம்பிச்சுட்டா.
நான் கூடவே ஜானா பாட்டி பற்றியும் நினைச்சேன்.
என் அம்மா கோபமா சொன்னாள். "ஜானா இவங்க கூட போறச்சேவே நினைச்சேன். " என்று.
அடுத்த நாள் வரை கனகம் குழு பற்றி எந்த தகவலும் இல்லை.
ரயில்வே அமைச்சர் லால் பகதூர்
சாஸ்திரி பதவி விலகல் வேண்டி எதிர் கட்சிகள் பத்திரிகைகளில் கனல் கக்கின.
மூன்றாம் நாள் காலையில் ஒரு வேனில் கனகம் மற்றும் கூடச் சென்ற எல்லாரும் ( வயலின் , மிருதங்ககாரர்கள் சேர்ந்து ) வந்து வீட்டு வாசலில் இறங்கினர் ..
கனகம் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடிச்சு அழுது பின்
" எங்கே ஜானா பாட்டி? . அவங்க வந்துட்டாங்க இல்லையா? அவங்க ளுக்கு நாங்க ஜென்மம் முழுக்க கடன் பட்டிருக்கோம். " என்றாள்.
பின் அழுவதை நிறுத்தி நடந்ததைச் சொன்னாள்.
23 ம் தேதி அதிகாலைல, முதல்ல
பயங்கர இடி போல சப்தம். வண்டி ஏகமா ஆடித்து. எல்லாரும் நடுங்கிப்போய் விட்டோம். ஜானா பாட்டி மிக தைரிசாலி. எல்லாருக்கும் தைரியம் சொல்லி 'நான் பாத்துக்கறேன்.' என்றாள்.ஒரு பெட்ஷீட்டை ஜன்னலில் கட்டி அதில் நீள வாட்டில் ரெண்டு முடிச்சபோட்டு இரண்டு பேரைப் பிடிச்சுக்கச் சொன்னாள். இப்படியே மூன்று பெட்ஷீட்டை ஜன்னலில் கட்டி எல்லாரும் முடிச்சைப் பிடிக்க
ஜானா பாட்டி சொன்னாள்.
" எனக்கு என்னவோ இந்த பெட்டி கவுந்துடும் னு தோணரது. முடிச்ச கெட்டியா பிடித்துக்கொள்ளுங்கள் .. என்று சொல்லும் போது பெட்டி கவிழ்ந்து அபாயகரமாகத் தொங்க,
எல்லாரும் முடிச்சு தயவால் தொங்கி காலை ஏதாவது பிடிமானம் இருக்கும் இடத்தில் வைத்து சமாளித்தார்கள். இரண்டு குழந்தைகளைத் தோளில் வைத்துத் தூக்கிக்கொண்டு, தொங்கும் ரயில் பெட்டியில், சர்க்கஸ்காரி போல,கீழே இறங்கிச் சென்ற ஜானா பாட்டி பின் மிலிட்டரி போல இயங்கி கீழ இருந்த கதவைத் திறந்து குழந்தைகளை பத்திரமாக வெளியில் ஆற்றுக் கரையில் இறக்கி விட்டா.
பின் எங்களை ஒவ்வொருவராகக் கீழே இறக்கி, கதவு வழியா வெளியில் கொண்டு வந்து, கரையில மெதுவாக இறக்கி விட்டா. பக்கத்தில ஆறு வெள்ளமா ஓடுறது.கொஞ்சம் பிசகினாலும் வெள்ளத்தில் விழுந்து செத்திருப்போம். இருட்டுல வெள்ளம் எது, ஆத்து மணல் எதுன்னு யாருக்கும் தெரியல.யாருக்கும் நீச்சலும் தெரியாது.பாட்டிக்குத் தான் எவ்வளவு பலம்! தைரியம்!.கண் பார்வை எவ்வளவு கூர்மை!
நல்ல காலம் கடவுள் பாட்டி உருவில் வந்தார்."
"சரி அப்புறம் ஜானா பாட்டி ஏன் உங்களோட வரல."
"ஜானா பாட்டி தான் எங்கள நடந்து அரியலூர் ஸ்டேஷன் போகச் சொன்னா."
" எவ்வளவு பேர் ஆற்று வெள்ளத்தில் தவிக்கிறா பாருங்கோ.
இன்னும் சில பேரத் தண்ணில இருந்து காப்பாத்த முடியுமானு பாக்கிறேன். .எனக்கு நீச்சல் நன்னா தெரியும்.நீங்க போங்கோ" என்று சொல்லிவிட்டு கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் அதிகாலை மங்கல் வெளிச்சத்தில்,அலட்சியமாகப் பாய்ந்து விட்டாள்.
நாங்க அரியலூர் ஸ்டேஷன் வந்துட்டோம். அங்கிருந்து ஸ்பெஷல் வண்டியில் வந்தோம்.பாட்டி இன்னும் வரலியா?. "
என்று குற்ற உணர்ச்சியுடன் கேட்டாள் கனகம்."
யாரும் பதில் சொல்லல.
அம்மா ஒரு நிமிடம் நிறுத்திப் பின் தொடர்ந்தாள்.
" விபத்து முடிஞ்சு பத்து நாள் கடந்தது.பாட்டி நல்லூருக்கோ தூத்துக்குடிக்கோ மெட்ராசுக்கோ.. எங்குமே திரும்பி வரவில்லை .
கனகம், மற்றவர்கள், எல்லாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட்டாங்க.
லல்பாகதூர் சாஸ்திரி, கடமை உணர்ச்சியில் ராஜினாமா செய்தார். நேரு அதை ஒப்புக்கொண்டார். பின் அரியலூர் விபத்தின் சோகம் மெதுவாக மக்களிடையே மறைய ஆரம்பித்தது.
ஆனால் விபத்தில்,ஏகப்பட்ட வெள்ளத்தில், சேற்றில் முழுகிய பெட்டிகளுக்குள், காணாமல் போன பலர் அப்புறம் திரும்பியதாகத்
தெரியல , அவர்களை கண்டுபிடிக்கவும் முடியல. .
"ஜானா பாட்டி உள்பட" என்று பேசிக்கொண்டோம்.
ஆனால், தான் காணாமல் மறைந்ததற்கு முன்னால
வெள்ளத்திலிருந்து இன்னும் ஒரு சில பேரையாவது அவள் நிச்சயம் காப்பாற்றி இருந்திருப்பாள். "
என்று நான் எண்ணி நாளைக் கடத்திக் கொண்டிருந்த போது, ஒரு மாசம் கழிச்சு நல்லூரில் இருந்து ஜானா பாட்டி சாவகாசமாக ஒரு போஸ்ட் கார்டு எழுதியிருந்தாள்.
அன்று ஆற்று வெள்ளத்தில் மீட்புப்பணிக்கு தன்னால் முடிந்ததைச் செய்து சில பேரைக் கரை ஏற உதவி செய்து விட்டு, அரியலூரில் தன் அத்தை பெண் வீட்டுக்கு சென்று மூன்று வாரம் இருந்து, பின் நல்லூர் திரும்பியதாக வெகு சாதாரணமாக எழுதி இருந்தாள்.
கனகம் தான் ரொம்ப நெகிழ்ந்து போனாள்.
கனகம் அடுத்த மாசம் நல்லூர் சென்று கோவில்ல கச்சேரி பண்ணிட்டு ஜானா பாட்டியின் புகழை நல்லூர் முழுக்க பரப்பினாள்.
கொள்ளிக்கண் என்ற அவப்பேர் போய் பாட்டிக்கு ஊர்ல ஏகப்பட்ட மரியாதை ஏற்பட்டது.
பாவம் ஜானா பாட்டி. அவளுக்கு அவப்பேர் இருந்ததும்
தெரியாது. அது போனதும் தெரியாது.!
ஜானா பாட்டி அப்புறம் நல்லூர்ல ரொம்ப நாள் இல்லயாம்.
அரியலூர் அத்தை பெண்ணும் ஒண்டிக்கட்டை என்பதாலும் அவ ஆசையா அழைத்ததாலும் நல்லூர் வீட்ட வித்துட்டு அரியலூர்ல போய் அவளோட செட்டில் ஆயிட்டா. " என்றாள் அம்மா.
"பாட்டி இப்போ இருக்காளா அம்மா? எங்க இருக்கா? என்று கேட்டேன்.
போன மாசம் தனது 88 வது வயசுல அரியலூர்ல,எந்தத் தொந்தரவும் இல்லாம தூக்கத்திலேயே இறந்ததாகவும், பத்தாம் நாள் காரியம் நல்லூரில் நடப்பதாகவும்
பாட்டியோட தம்பி கடிதாசு போட்டிருந்ததாக அம்மா சொன்னாள்.
ஜானா பாட்டிக்காக எல்லாரும் எழுந்து நின்று ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செய்தோம்.
Leave a comment
Upload