தொடர்கள்
கதை
சுஜா இன்னும் அப்படியேதான் இருக்கா-மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240109182117934.jpeg

நான் டவுன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன்.ஜன்னலோர சீட்டில்
இதமான காலை நேரப் பயணம். லேசான உறக்கத்திற்கு வழக்கம் போல்
அடிமையானேன்.என் வீட்டிலிருந்து நடந்து போனால், அலுவலகத்திற்கு அரை மணி
நேரத்தில் போய் விடலாம். குறித்த நேரத்தில் போக வேண்டுமே என பேருந்து
பயணத்தை தேர்ந்தெடுத்தேன். இது வழக்கமாக எல்லோரும் சொல்லும் சமாதானம் என்னும் உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது.சரி.அதை விடுங்கள்.நான் ஆழ்ந்து தூங்கிவிட்டாலும், எனது அலுவலகத்தின் அருகில் ஓடும் கூவம் ஆற்றின் நறுமணம் என்னை எழுப்பிவிடும். கடமைச் செய்யத் தவறாது. செய்யத் தவறியதில்லை. ஆனால் இன்று என்னை எழுப்பியது ஒரு பெண் குரல் அலாரம்.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்னை’பாஸ்’ என்று ஒரு பெண் குரல்
அழைத்தது. யாரோ என்னைக் கூட பேர் சொல்லி கூப்பிடுகிறார்களே? அதுவும் ஒரு பொது வெளியில்.மனதில் அதிர்ச்சியும்,ஆனந்தமும் ஒரு சேர வந்து குவிய,குவியத்தொடங்கின. சுதாரித்துக் கொண்டு எழுந்துப் பார்த்தேன். யாரோ ஒரு பெண்பஸ்ஸிலிருந்து இறங்கிச் செல்வதைத்தான் பார்க்கிறேன்.முகத்தைப் பார்ப்பதற்குள் முழுவதுமாய் மறைந்து விட்டாள்.பஸ்ஸும் புறப்பட்டு விட்டது.கண்டக்டர் விசிலடித்தார். அவர் வேலையை இன்று மிகவும் சுறுசுறுப்பாக பார்க்கத் தொடங்கி விட்டார். பஸ்ஸை விட்டு இறங்கிப் போய் அவளை தேட முடியாது என்று என் உள்மனம் சொல்லியது.
அடுத்தது நான் இறங்க வேண்டிய இடம். அவள் விட்டு விட்டு போன
செண்டு வாசணை எனக்கு கூவம் ஆற்றின் நறுமணத்தை மறக்கச் செய்து விட்டது.
‘சார், நீங்க இறங்களையா?’ கண்டக்டர் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லத்
தோணவில்லை.
பள்ளி செல்ல அடன் பிடிக்கும் எல்.கே.ஜி. பையனாக ஆபீசுக்குள்
நுழைந்தேன். வழக்கமான,‘வணக்கம் சார்’களுக்கு கையால் மட்டும் பதில் வணக்கம்
சொன்னேன். இன்னும் ஒரு வாரம்தான் இந்த ஆபீசும், வணக்கங்களும்.இந்த மாதம் கடைசி நாளுக்குத் தான் காத்திருக்கிறேன். என்ன விசேஷம் என்று கேட்கறீர்களா?
எனக்கு அறுபது முடிவதால் ஓய்வு பெறப் போகிறேன். இது லீப் வருடம். இந்த
பிப்ரவரிக்கு ஒரு நாள் கூடவாம். அதனால், ’நான் ஒரு நாள் கூடுதலாக ஆபீஸுக்கு
வர வேண்டும்.அது ஞாயிற்றுக் கிழமையாக இருக்கக் கூடாதா? எனக்கு இதில் கூட
அதிர்ஷ்டம் இல்லை’ என்று என் மனம் ஆறு மாதமாக புலம்புவது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்.
காலையிலேயே ஆபீஸ் வேலையில் என் மனது ஓடவில்லை. எப்போதும்
வேலையில் நிலுவை என்பது எனக்கு பிடிக்காது.இன்று ஒரு பத்து பைல்கள்.’நீ
எப்போது என்னை கவனிப்பாய்’ என்று கேட்டுக் கொண்டிருந்தன.
’ஈ’ செக்‌ஷன் சூப்பரிண்டட் அவர் நண்பர் ஒருவரின் பைலைப் பற்றி
நேற்றே சொல்லியிருந்தார். பத்தில் அதுதான் மேலே உள்ள பைல். அவரும் அடிக்கடி என்னை வந்து பார்த்து செல்கிறார். அவர் வேலை ஆகவில்லையே என்ற கவலை அவருக்கு. அந்த அசாதரணமான செண்ட்டுக்காரி யார்? அவளுக்கு இந்த ‘பாஸ்கர்’ என்னும் பாஸை எப்படித் தெரியும்? ஒரு வேளை அவளுடைய ஆபீஸில் அவளுடைய பாஸூடன் தொலைபேசியில் பேசினாளா? இல்லை என்னை எழுப்பி விட்டு பேச நேரமில்லாமல் இறங்கி போய்விட்டாளா? என் மனம் கேட்கும் கேள்விக்கு பதில் எதுவுமில்லாமல் ரொம்பவும் குழம்பித்தான் போய் விட்டேன்.
அலுவலகத்தில் தேநீர் நேரம் வந்தது. ‘ஈ’ செக்‌ஷன் குமார் அறைக்குள்
வந்தார். ’வாங்க சார்’ வெளியே போய் ஒரு டீயும், பஜ்ஜியும் சாப்பிட்டு வரலாம்
என்றார். அவருக்கு அவர் வேலைப் பற்றி பேச வேண்டும். என்னை கவனிக்க
வேண்டும் என்ற அக்கறைதான். ஆனால், தலையை அசைத்து வேண்டாம் என்று
சொன்னேன். வழக்கமாக அறைக்கு வரும் டீ வந்தது. அதை உடனே குடித்துவிட
வேண்டும்.ஆறிய பின்னே குடித்தால், அதன் சுவையே வேறு மாதிரிதான்.சூடாகக்
குடித்து விட்டால் சுவையும் தெரியாது.பிரச்சனையே இல்லை. அந்த டீயையும்
குடிக்கத் தோணவில்லை.

நான் ரிடையர் ஆகிற கவலை வந்து விட்டது என ஒரு வாரமாகவே ஆபீஸில்
எல்லோருக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்களின் வாதங்கள் நமது பார்லிமெண்ட் வாதம் மாதிரியே இருந்தது.என்னுடைய பலம்,பலவீனம்
எல்லாத்தையும் நன்றாகவே அலசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றி பேச
இவ்வளவு விஷயம் இருக்கா? ரொம்பவும் சந்தோஷம்? ’சபாஷ் ‘ பாஸ்கர் என்னை
நானே முதுகில் தட்டி விட்டுக் கொண்டேன்.’இவ்வளவு விஷயம் என் ஒரே பிள்ளை
பாபுவுக்கு தெரியலையே’ என்ற புலம்பல் ஒருபக்கம்.
அவனும் என் பெண்டாட்டியோட ஒனக்கு சரிபட்டு
வராது.ரிடையர்மண்டுக்கு அப்புறம் ஏதாவது ஒரு வசதியோன ஹோம்லே
சேர்ந்துடு.நான் அப்ப அப்ப வந்து பார்க்கிறோம்னு சொல்லிட்டான். இப்பவே
வருஷத்துக்கு ஒரு தடவதான்,அதுவும் ஆபீஸ் வேலைன்னு வந்து பார்க்கிறான்.
எனக்கும் வயதாவது பத்தி வருத்தம்தான். தள்ளாமை தள்ளுது ஆள.என்ன பண்றது?
மதியம் வந்தது.எனக்கு ஆபீசில் இருப்புக்கொள்ளவில்லை.
வீணாகப்போகும் லீவில் அரை நாள் எடுத்துக் கொண்டேன். வீட்டுக்கு போய்
மீதியை யோசிக்கலாம்ன்னு மனம் சொன்னது.
போகும் வழியில் வங்கிக்கு சென்று லாக்கரில் என் மனைவியின்
தாலியை வைச்சுட்டு போலாம் என முடிவு செய்தேன்.அவள் இறந்து ஆறு மாதமாகி
விட்டது.தனியே அவ்வளவு பெரிய வீட்டில் இருக்கும் எனக்கு எல்லாமும்
பாரமாகவேத் தெரிகிறது.அவள் நினைவாக என்னிடம் இருப்பது அவளுடைய சில
போட்டோக்களும்,இந்த தாலியும்தான்.
இப்போதெல்லாம் எனக்குன்னு ஆசைகள் எதுவும் இருப்பதில்லை. இந்த
தாலியையும் லாக்கரில் வைத்து விட்டால் என்கிட்ட திருடுவதற்கு ஒன்னும்
இருக்காது.நிம்மதியா தூங்கலாம். அதுவும் ரிடையர் ஆயிட்டா, எப்ப வேணுண்னாலும்
தூங்கலாம்,எப்பவன்னாலும் எழுந்தலுக்கலாம். யார் கேக்கப்போறா? வர்ர
பென்ஷன்லா சிக்கனமா இருக்கனும்னு மட்டும் மனசுக்குள் சொல்லிண்டே வங்கிக்குள் நுழைந்ஜேன்.

வங்கிக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சா. பார்க்கிறா எல்லாம் புது,புது
முகங்கள்.நேராக அக்கவுண்டட்டிடம் சென்றேன்.லாக்கர்ப் பற்றி விசாரித்தேன். அவர் வங்கி மேனஜரை கைக்காட்டி விட்டு, இருந்த மற்றொரு வாடிக்கையளரின்
வேலையை பார்க்கத் தொடங்கினார். இப்போது மட்டும் என் சுஜா,அதான் சுஜாதா
இந்த பாங்கின் மேனேஜரா இருந்தா எனக்கு கிடைக்கும் மரியாதையே தனியாத் தான் இருக்கும்.ஆனா, நினப்புதான் பொழப்ப கிடைக்குது. மேனேஜர் ரூம் பக்கம் கால்கள் தானாக நடந்தன.
அது சரி.’சுஜா ‘ யாருன்னுதான்னா கேக்கறீங்க.அவளைப் பத்தி நீங்க
அவசியம் தெரிஞ்சிக்கனும்.நானும்,சுஜா என்கிற சுஜாதாவும் ஒரே மாயவரத்துல ஒரே காலேஜ்லதான் படிச்சோம்.அவள் ஒரு பணக்காரி.தினமும் காரில்தான் காலேஜுக்கு வருவாள்.ஆனால், க்ளாஸ்ல எந்த பந்தாவும் காட்ட மாட்டா.எல்லோரிடமும் சகஜமாக பழகுவா. கேண்டினுக்கு எங்கோளடத்தான் வந்து சாப்பிடுவா.இப்படித்தான் கேண்டீன்ல எனக்கு பழக்கமானாள். அவளது பணமும், கூடவே இருந்த எளிமையும் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. என்கிட்ட அவள் பணம் இருந்தா,நான் இப்படி இருக்க வாய்ப்பே இல்ல.அவள் ஒரு அதிசயப்பிறவிதான்.
நான் காரில் வருவது என் அப்பாவின் விருப்பம்.எனக்கு உங்களப் போல
பஸ்ஸில் வருவதுதான் பிடிக்கும் என்று ஒரு நாள் வெளிப்படையா சொன்ன பிறகு
அவ மேல எனக்கு இருந்த இன்னும் அதிகமாயிடுத்து.
ஏழைகள் மிகவும் நல்லவங்க. அவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்
என்று வெள்ளந்தியாய் சொன்ன போது உண்மையில் அதிர்ந்துதான்
போனேன்.’நானும் ஏழைதான்’ என்று சொன்னேன்.உன்னையும்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னாள். ’எனக்கும்தான்’ என்று நான் சொன்ன போது அவள் முகம் நாணத்தால் சிவந்து போனது. எனது காலேஜ் படிப்பு முடிந்தது.ஏழ்மை எனது படிப்பை ஏறக்கட்டியது.அப்பல்லால் செல்போன்லாம் கிடையாது. கல்லூரி நிறைவு விழா நாளன்று ரொம்ப நேரம் நாங்க பேசிகிட்டு
இருந்தோம். கடசி நாளில்ல.அப்பதான் ’நான் ஒரு வங்கி மேனேஜர் ஆகனும். உன்ன கல்யாணம் பண்ணிக்கனும். இதுதான் என்னோட லைப்ல எனது ரெண்டு

ஆசைகள்’ன்னு சொன்னாள். உள்ளபடி நான் மகிழ்ச்சியை அதிகமாக உணர்ந்த நாள் அன்றுதான். நான் ’முதல் ஆசை நடக்கலாம். ரெண்டாவது ஆச சாத்தியமா’ என்று எதார்த்தை உணர்ந்து கேட்டேன்.
வளமைப் பற்றி அறியாதவன் நான். வறுமைப் பற்றி அறியாதவள்
அவள்.விஷயம் அவள் அப்பாவுக்கு தெரிந்து,பெரிய விவகாரமாகிவிட்டது.அது ஒரு பெரிய கதை. என்னுடைய தந்தை சென்னைக்கு மாற்றலானார். நானும் பல முறை க்ளாஸ் ஃபோர் எக்சாம் எழுதி தப்பித் தவறி இந்த அரசு வேலையில் சேர்ந்து,இந்த மாசம் ரிடையரும் ஆகப்போறேன்.
எங்க அப்பா மாமாப் பொண்ணயே எனக்கு கல்யாணம் பண்ணி
வெச்சாரு.கல்யாணத்துக்கு முன்னமே எல்லா விஷயத்தையும் அவகிட்ட
சொல்லிட்டேன்.அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு நினைச்சன்.ஆனா அவள் மனசல இருக்கறதலெம்மாம் மறைக்கமா சொன்ன நீங்க ரொம்ப நல்லவங்க.கட்டுனா உங்களாத்தான் கட்டுவன்னு சொன்னா.கல்யாணமும் நடந்துச்சு.
சுஜாவுக்கு பத்திரிக்கை அனுப்பினேன்.அவள் கல்யாணத்தை
நிறுத்திடாவன்னு நினைச்சேன்.அப்புறம்தான் தெரிஞ்சது.அவ டெல்லிக்கு
மேல்படிப்புக்கு போயிட்டான்னு. பாவம் இப்ப எங்க இருக்காளோ.நல்லா
இருக்கட்டும் என்று மனதில் சொல்லிக் கொண்டே மேனேஜர் ரூம் வாசலில் இருந்த
பென்ச்சில் உட்கார்ந்தேன். மேனேஜர் ரூம் வாசலில் ‘சுஜாதா,பி.இ., எம்.பி.ஏ, என்று
போர்டு தொங்கியது.
ஒரு வேளை என் சுஜாதானோ? நாம் திரும்ப போய்விடலாம் என்று எழுந்து
வெளியே வரத் தயாரானேன். ’உங்கள மேடம் உள்ளே கூப்படறாங்க’ என்னும் குரல்
என்னை ரூமில் உள்ளே தள்ளியது.
’உட்காருங்க’ என்றார் மேனேஜர் சுஜா. இது வரை எந்த மேனேஜரும்
என்னை உட்கார வைத்து பேசனதில்ல.’இருக்கட்டும்மா.பரவாயில்ல.’ இது நான்.
இதற்கிடையில் காலையில் வந்த செண்ட் மணம் அந்த அறை முழுவதும் நிரம்பியது.
அவதான் இவ என்று மனம் சொன்னது. வந்த வேலைப் பற்றிச் சொன்னேன்.அவள்
அதைக் கண்டுக் கொள்ளவேயில்லை.

’என்ன பாஸ். எப்படி இருக்கீங்க’ என்று கேட்ட அவளை சற்று உற்று
நோக்கினேன்.என் சுஜாதான். சந்தேகமே இல்லை. நான் அவமானத்தால் தல குனிந்து
உட்கார்ந்திருந்தேன்.கண்ணாடி அறையில் இருந்த எங்களை எல்லோரும் பார்க்க
முடியும்.அவள் எந்த உணர்வும் இல்லாமல் கருமமே கண்ணாயிருந்தாள். ‘எனக்கு
இன்னும் கல்யாணமாகலே‘என்று சொன்ணாள். நான் அதிர்ச்சியானேன். அவளும்
அதே நகரில் இருப்பதாகவும்,என்னை தினமும் பஸ்ஸில் பார்ப்பதாகவும்
சொன்னாள்.வங்கியின் கார் இருந்தாலும் பஸ்ஸில் தான் வருகிறாள் என்பதை புரிந்து கொண்டேன். வாடிக்கையாளர்களை நிற்க வைத்து பேசாத அவளை ஏழைகள் தெய்வமாகவே கொண்டாடுவதை சூழ்நிலை எனக்கு விளக்கியது. அவளுக்கு ரொம்ப வேல இருந்தது.கனத்த இதயத்தோட வெளிய வந்த நான் ஆட்டோ ஒன்றில் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தேன். வாழ்க்கையில சவால்களை சமாளிப்பது எப்படின்னு யோசிச்சிட்டே படுக்கையில் சாய்ந்தேன்.
அன்னிக்கு மாலை வீட்டு காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்துப்
பார்த்தேன்.சுஜாதான் வந்திருந்தாள். நான் ’உள்ளே வா’ என்று சொல்வதற்கு
முன்னமே உள்ளே வந்தாள்.சோபாவில் உட்கார்ந்தாள். ’ஒரு கப் காபி கிடைக்குமா” என்றாள். மேசை மேலிருந்த பிளாஸ்க்கிலிருந்து காபியைக் கொடுத்தேன்.கொடுக்கும்போது, ஏனோ என்கை நடுங்கியது.அவள் என்னைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தாள்.
’நான் நேரவே பேச்சுக்கு வரேன். என்னோட ரெண்டு ஆசையில ஒன்னு
நடந்துட்டது.இன்னொன்னு உனக்கே என்னன்னு தெரியும். நான் இப்பவும்
ரெடி.எனக்கு அப்பா, அம்மான்னு எந்த உறவும் இல்ல.முடிவ நான்தான்
எடுக்கனும்.’சொல்லிவிட்டு என்முகத்தையே பார்த்தாள். ’நான் ஒரு வார்த்தை எம்
பசங்கள கேக்கட்டுமா?’ என்றேன்.’சரி கேட்டுட்டு சொல்லுங்க.நான் ஹாஸ்டலுக்கு கிளம்பறேன்’ என்றாள் அவள். எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும்
இருந்தது.அவமானமாகவும் இருந்தது.
’எவ்வளவு எதார்த்தமாகவும், தைரியமாகவும் இருக்கிறாள். என்னால் ஏன்
எப்போதும் இப்படி இருக்க முடியவில்லை’ என்று என்னையே நான் நொந்து கொண்டேன்.விரும்பியதை செய்ய பெண்களுக்கு உள்ள மன உறுதி ஆண்களுக்கு இருப்பதில்லை. நான் யோசிச்சு பார்த்தேன். பையன கேட்க வேண்டியதில்ல.
‘அவன்தான் என்னை முதியோர் இல்லத்தில சேர்க்க முடிவு செய்ஞ்சுட்டானே.
என்னப் பத்தி கவலப்படாத அவன்கிட்ட நான் ஏன் கேட்கனும்’என் மனம்
சொல்லியது.
அடுத்தநிமிடம் என்னிடமிருந்த என் மனைவியின் தாலி அவள் கழுத்திலிருந்தது.
போட்டோவிலிருந்த என் மனைவி எங்களை வாழ்த்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு என் மகிழ்ச்சிதான் முக்கியம்.
எனது முதல் ஆசையும்.அவளது ரெண்டாவது ஆசையும் நிறைவேறிய
மகிழ்ச்சி.அதைக் கொண்டாட இதோ வெளியே புறப்பட்டு விட்டோம். வயசானா
என்னா?மனசுக்கு என்றுமே வயசாகாதே. உலகம் ஏதாவது சொல்லுமோ என்ற
வருத்தம் எனக்குள் ஏனோ இல்லை.அவளுக்கும்தான்.