மனிதனின் நடவடிக்கைகள் எல்லாமே எண்ணம், பேச்சு, செயல் என்ற மூன்றில் அடங்கிவிடுகின்றன என்று பார்த்தோம். இந்த மூன்றிலும் நாம் ஒவ்வொருவரும் விழித்திருந்தால் அது முழுமையான விழிப்புணர்வு எனலாம். அது நாம் நினைத்த உடன் நிகழ்வது அல்ல. சிறு வயது முதல் பயிற்சி இல்லாமல் இவ்வித விழிப்புணர்வு சாத்தியம் இல்லை. எடுத்துக்காட்டாக, நெடு நாள் கார் ஓட்டுபவர் ஒருவர் தொலை தூரம் ஓட்ட வேன்டி வந்தாலும் பக்கத்தில் இருப்பவருடன் பேசினாலும், சாலையில் நிகழ்வதைக் கண்டு அதற்குத் தக்கவாறே ஓட்டுவார். அந்த விஷயத்தில் அவர் விழிப்போடே இருப்பார். புதியதாக ஓட்டும் ஒருவர்க்கு அந்த விழிப்புணர்வு இருக்காது.
அதிக கவனத்துடன் செய்யும் ஒரு எண்ணம், செயல், பேச்சு என்பது நமக்கு மிகவும் பழக்கம் ஆகிவிட்டால் அது நமக்கு இயல்பாக அனிச்சைச் செயலாக அமைந்து விடும். நமது அறிவு அவற்றிற்குத் தானே முக்கியத்துவம் அளித்து விழிப்புடன் இருக்கும். அதனால் பல தவறுகள் தடுக்கப் படுகின்றன. அவ்விதம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
நாம் பேசும் முன்னமே நாம் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்னமே ஒரு எண்ணம் தோன்றும்போதே, ‘இது தவறு, இது சரியல்ல, இது தர்மம் அல்ல, இது உனக்கு ஏற்றதல்ல’ என்று கூடவே ஒரு எச்சரிக்கை தோன்றுமானால், அந்த எச்சரிக்கையை நமது மனம் ஏற்குமானால் நமக்கு விழிப்புணர்வு வந்து விட்டது என்று கொள்ளலாம். அவ்வித எச்சரிக்கையைச் செய்ய நமது அறிவை விழித்திருக்கச் செய்வதே இந்த சனாதன தர்மத்தின் சடங்குகளின் இரண்டாவது தொகுப்பு.
சூரிய உதயத்திற்குப் பின் உறங்காதே என்று சொல்லும். அது பழகி விட்டால், சூரியனின் உதயம் நிகழும்போது நம் தூக்கம் கலைந்து விழித்து விடுவோம். அது எந்த காலமானாலும், எந்த தேசமானாலும் நம்முடன் இருக்கும். அவ்விதம் காலையில் எழுவது பழகினால், நமது காலை நேர வேலைகள் செவ்வனே நடக்கும். அறிவும் அதனை நல்ல விதமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுவிடும். ஒவ்வொரு நாளையு சரியாகப் பயன்படுத்த, இது பெரும் உதவியாக இருக்கும். இன்றைய மேலாண்மையியல் இதனை வற்புறுத்துகிறது.
பெற்றவரைக் கடவுளாகப் பார் என்றது தர்மம். பெற்றவரைத் தவிர, பலரையும் அந்த நிலையில் வைத்துப் பார் என்றதும் தர்மம். அப்படியாகும்போது நாம் அவரைப் பற்றி எண்ணுவதும் அவருடன் பேசுவதும் அன்பும் மரியாதையும் கலந்து இருக்கும். யாரையாவது என் தாய் போல என் தந்தை போல என்று நினைத்து விட்டால், நமது எண்ணமும் பேச்சும் தானே சரியாக அமைந்து விடும்.
வாசற்படியி நிற்காதே, வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்குச் செல், சனிக்கிழமை எண்ணை தேய்த்துக் குளி, இருட்டியபின் நகம் வெட்டாதே, பெரியவர்கள் முன் காலை நீட்டாதே, உடையில்லாமல் குளிக்காதே என்று பற்பல விதிகள் நமது தினசரி நடைமுறையின் பற்பல செயல்களிலும் சொல்லப் படுகின்றன. அதனை முதன் முதலில் கேட்கும்போது நமக்கு அர்த்தமற்றதாகத் தோன்றும். ஆனால் அவற்றைப் பழகினால் அந்த செயல்கள் தவிர மற்றவற்றையும் செய்யும் முன், சொல்லும் முன் ‘இது சரியா, இது தேவையா’ என்பது போன்ற கேள்விகள் நம்முள்ளேயே எழுந்து அவற்றிற்கு சரியான விடை கிடைத்தால் மட்டுமே அந்தச் சொல்லும் செயலும் வெளிவரும். ஒரு செயலை அல்லது நிகழ்வை முன்கூட்டியே திட்டமிடும்போது அதன் பலாபலன்களைச் சீர்தூக்கிச் சரியான தேவையான வழியில் அதனைச் செய்யவும் இந்த விழிப்புணர்வு உதவி செய்யும்.
காலை எழுந்தவுடன் தனது கைகளையே பார்த்து அதனை இறைவனாக எண்ணி அதற்கு வணக்கம் சொல் என்றது தர்மம். அது தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை நெறிப்படுத்தி இரவு படுக்கும்போது இறைவனுக்கு நன்றி சொல்லி உறங்கச் சொன்னது தர்மம்.
வானில் இடி இடித்தால் அஞ்சும் குழந்தைக்கு அர்ஜுனன் பெயரைச் சொல் இடி ஒன்றும் செய்யாது என்று சொல்லி தைரியம் ஊட்டியது தர்மம். இடியின் விஞ்ஞானத்தை அறிய முடியாத வயதில் அர்ஜுனன் பெயரால் தன்னம்பிக்கையை ஊட்டியது தர்மம். வளரும்போது இடியின் விஞ்ஞானத்தை அறியும்போது அச்சம் போகும் ஆனால் தன்னம்பிக்கை நிலைத்து மற்ற செயல்களில் துனையாய் நிற்கும்.
எந்த நிலையிலும் தாய் தந்தையரை மதி என்று சொன்னது, பிற்காலத்தில் மாற்றுக் கருத்து உள்ளவரோடு சுமுகமாகப் பேசி தீர்வுகள் காணும் திறமையைத் தந்தது. பூஜை முடிந்துதான் உணவு என்றது பொறுமையைத் தந்தது. விரத நாட்கள் பசி தாங்கும் தன்மையைத் தந்தது. இறை வணக்கம் என்பது நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்ற உண்மையை உணர்த்தி, இயற்கையை மதிக்க அனுசரிக்கச் சொல்லித் தந்தது.
இவை எல்லாம் தினசரி அல்லது அடிக்கடி என்ற நிலையில் சொல்லி பழக்கப் படும்போது அவை நமது கவனமான (consicous) என்ற நிலையிலிருந்து அழ்மனதில் (sub-conscious) பதிந்து விடுகின்றன. அதனால் தீயை மிதித்தால் கால் விலகுவதுபோல தவறிலிருந்து விலகவும், பொது நன்மை என்றால் நமது துன்பத்தையும் பாராமல் முயலவும் நமது இயல்பே சிறந்து விடுகிறது. இந்த மாற்றம் நமக்கு நமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்பம் என்ற நிலையிலும், நம்மைச் சுற்றியுள்ளவர் நலன் என்ற நிலையிலும், நமது நாட்டின் மேன்மை என்ற நிலையிலும் இந்த அனைத்தையும் தாண்டி மனித குலத்தின் நீடித்த நலன் என்ற நிலையிலும் துணைநின்று நம்மை வழிநடத்தும்.
அங்கே இங்கே ஒருவர் இருவர் இதுபோல நல்ல விழிப்புணர்வுடன் இருந்து செயல் பட்டதே இந்த உலகில் பல நன்மைகளைத் தந்துள்ளது. அப்படி நாட்டின் பெரும்பாலான மக்கள் இருந்து விட்டால் அந்த நாடு சிறப்புறும். அதைத் தான் ராமபிரான் ஆண்ட காலத்தில் அயோத்தியின் சிறப்பாகச் சொல்லி அதுவே ராமராஜ்ஜியம் என்று புகழப் படுகிறது. இன்றும் ஒரு உயர்ந்த நிலையில் நிலவும் அரசை ராமராஜ்ஜியம் என்று சொல்வதே அதற்கு அத்தாட்சி.
எந்தெந்த சடங்குகள் இந்த இரண்டாவது தொகுப்பில் அடங்கும் என்ற பட்டியலை நான் பதிவிட விரும்பவில்லை. ஆனால் அப்படிப்பட்ட சடங்குகளை நாம் பின்பற்றும்போது நமது மனதில் அறிவில் ஒரு கட்டுப் பட்டும் தெளிவும் தைரியமும் உண்டாகும். அதுவே அந்தச் சடங்கின் குறிக்கோள் என்று நாம் அறியலாம்.
இவற்றின் ஒரு உட்பிரிவாக சில நிகழ்வுகள் சார்ந்த சடங்குகள் உள்ளன. அவை பெரும் விவாதங்களுக்குக் கருப்பொருளாக அமைகின்றன. அவற்றை நாம் தனியே ஒரு இதழில் காண்போம்.
Leave a comment
Upload