நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணன் ஆவார் என்று நெய்தல் நிலத்தப் பற்றி நமது பரணீதரன் ஆரம்பிக்கிறார்.
அவரே தொடர்ந்து…..
பொதுவாக சமய இலக்கியங்களில் வருணன் நீரின் கடவுளாக போற்றப்படுகிறார். வடமொழி சமஸ்கிருத இலக்கியங்கள் ஆனாலும் சரி தமிழ் மொழி இலக்கியங்கள் ஆனாலும் சரி வருணனை தண்ணீரின் கடவுளாகவும் நெய்தல் நில மக்களின் கடவுளாகவே கூறுகின்றன.
வருணனை ‘கடல் தெய்வம்’ என்றும் இலக்கியங்கள் அழைக்கின்றனர். வருணனுக்கு வாகனமாக மகர மீன் என்று அழைக்கப்படும் சுறாவும் முதலையும் கலந்த உருவத்தை கொடுத்துள்ளனர். நாம் முன்பே பார்த்தது போல ஒவ்வொரு வாகனத்திற்கும் அந்த நில மக்களுக்கு உதவி செய்யக் கூடிய ஒரு தன்மை இருப்பதாலேயே அவைகளும் வணங்கப்பட்டன. அதேபோல் கடலும் கடல் சார்ந்த இடமும் இருக்கக்கூடிய நெய்தல் நிலத்தில் மக்கள் சூரியன் அஸ்தமிக்கும்பொழுது அதாவது எற்பாடு சமயத்தில் மீன் பிடிக்கச் செல்வர். கடலில் மீன்கள் எங்கு நிறைய இருக்கும் என்று தெரிய வேண்டும் என்றால் நாம் சுறா மீனையோ கடல் முதலையையோ (பொதுவாக ஒரு ஆறு கடலில் சங்கமிக்கும் சுழிமுகப் பகுதியில் சுற்றித் திரியும். ஆற்றில் இருந்து கடலுக்கும் கடலில் இருந்து ஆற்றுக்கும் மீன்களைத் தேடி அலையும்) பின் தொடர வேண்டும். மீன்கள் நிறைய இருக்கும் இடத்தில் சுறா மீன்கள் வட்டமிட்டு கொண்டிருக்கும். அவற்றை வைத்து அந்த கால மீனவர்கள் நிறைய மீன்களை பிடித்து வருவார்கள். இதனாலேயே சுறா மீனும் முதலையும் கலந்த உருவத்தை அவர்களின் தெய்வமான நீர் கடவுளான வருடனுக்கு வாகனமாக கொடுத்தார்கள்.
பொதுவாக நெய்தல் நிலங்கள் மருத நிலத்திற்கு அருகிலேயே இருக்கும். சில நேரங்களில் பெரிய நகரங்கள் கூட கடற்கரைகளில் அமைந்திருக்கும்.
மூவேந்தர்களான சேரர் சோழர் மற்றும் பாண்டியர் ஆகிய மூவரின் தலைநகரங்கள் ஒரு காலத்தில் கடற்கரைகளில் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக சோழர்களின் ஆரம்ப கால தலைநகரமான காவிரிப்பூம்பட்டினம்(காவிரி புகும் பட்டினம்) என்று அழைக்கப்பட்ட பூம்புகார் இருந்தது கடற்கரையில். அதேபோல் கொற்கை (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) பாண்டியர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. இதேபோல் வஞ்சி (இன்றைய கொடுங்கலூர்) சேரர்களின் முக்கியமான துறைமுகமாக இருந்தது.
இன்றும் கூட பாரதத்தின் நான்கு பெரிய மெட்ரோபாலிட்டன் நகரங்களில் இரண்டு கடற்கரையிலேயே உள்ளது - சென்னை மற்றும் மும்பை. உலக நாடுகளில் பல நாட்டின் தலைநகரங்கள் கடற்கரையிலேயே இருந்தன மற்றும் இருக்கின்றன. அதனால் நெய்தல் நில மக்கள் தங்களுடைய பொருட்களை மருதநில மக்களுக்கே விற்பனை செய்வார்கள். மருதநில மன்னனின் ஆதரவு இல்லாமல் நெய்தல் நில மக்களால் மருத நில மக்களோடு வியாபாரம் செய்ய இயலாது. அதனால் தான் வருண தேவன் இந்திர சபையில் (மருத நிலக் கடவுள்) தேவர்களில் ஒருவனாக கொள்ளப்பட்டிருக்கிறார். அதாவது இந்திரனுக்கு அடங்கி நடப்பவராக வருண தேவனை இலக்கியங்கள் காட்டுகிறது.
அடுத்ததாக, முன்பு மற்ற நில தெய்வங்களுக்கு பார்த்தது போல நெய்தல் நில கடவுளின் கையில் உள்ள பொருட்களை பற்றி பார்ப்போம். வருணனின் கையில் பொதுவாக பாச கயிறு இருக்கும். இந்த பாசத்தை ஆயுதமாகவும் அந்த காலத்தில் பயன்படுத்தி உள்ளார்கள். பாசம் என்பது ஒரு பக்கம் சுருக்கு போட்ட ஒரு வகை ஆயுதம். அதை ஒருவர் மேல் எரிந்து அவர்களை கட்டி இழுத்து வர முடியும். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் எதற்காக வருணனுக்கு பாசத்தை கொடுத்தார்கள் என்று. பொதுவாக மீன்பிடிப்பதற்கு தூண்டிலோ வலையோ போட்டு மீன்களை பிடிப்பார்கள். அதேபோல் நெய்தல் நில மக்களும் மீன்பிடிப்பதற்கு பாசம் (தூண்டில், வலை) போன்ற ஆயுதத்தையும் போர்க்காலங்களில் அந்த பாசத்தை ஆயுதமாகவும் பயன்படுத்தி இருந்தார்கள். இதனாலையே வருணனுக்கு பாச கயிறு ஆயுதமாக இருந்தது.
இப்படி நெய்தல் நில மக்கள் மீன்பிடிக்க செல்லும் வேளை சிறு பொழுதானது (எற்பாடு - சூரியன் அஸ்தமிக்கும் நேரம்). அவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது அந்த நேரத்தில் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாட்டு பாடுவதற்காக உருவாக்கப்பட்டது செவ்வழி பண் என்று அழைக்கப்படும் ‘இரு மத்திமத் தோடி’ ராகம் மற்றும் விளரி யாழ். அவர்களுக்கு உதவிய சுறா மற்றும் முதலை அவர்கள் வணங்கும் விலங்குகள் (வாகனம்) ஆயின. அவர்கள் பயன்படுத்தும் தொழில் கருவி மற்றும் போர் கருவி (பாசம்) வழங்கப்படும் பொருளானது. அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்த கடலை அவர்களுக்கு தெய்வம் ஆகியது (வருணன்). அவர்களுக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்த மருத நில தெய்வமும் (இந்திரன்), மக்களும் அவர்களுக்கு ஒரு தெய்வம் போல் இருந்தார்கள்.
அடுத்த வாரம் பாலை நில தெய்வத்தையும், அந்த நிலத்து மக்களின் வாழ்க்கையும் பார்ப்போம் என்று விடை பெற்றார் பரணீ.
Leave a comment
Upload