திருநாள் இதுபோல்
கலியில் வருமோ,
அண்ணல் அயோத்தி திரும்புகிறார்!
அரியணை ஏறி தருமபாலனம்,
தரணி போற்றவே
தருகின்றார்!
இந்நாள் பொன்னாள்
இனியெல்லாம் நன்னாள்,
பெரியோர் பலதும்செய்கின்றார்!
அடியேன் அளவில்
ராமகாதையை எளிய தமிழில் தர விழைந்தேன்!
*
அயோத்தி மாநகர் ஆண்டவராம்
கதிரவன் வழியவர் வந்தவராம்
இஷுவாகு முதலரசரானவராம்
ரகுவம்சம் எனபுகழ் கொண்டவராம்
தசரதன் என்றொரு மன்னவராம்
இந்திரன் சரி நிகர் நின்றவராம்
பத்தினிகள் பல கொண்டவராம்
பிள்ளைகள் இன்றி தவித்தவராம்
புத்திர யாகம் செய்தாராம்
பிள்ளைகள் நான்கு பெற்றாராம்
அவர்களில் முதல்வன் ஸ்ரீராமன்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
கோசலை மகனாய் பிறந்தாராம்
ஒழுங்கின் உருவாய் வளர்ந்தாராம்
தந்தை தாய் கண்ணென வாழ்ந்தாராம்
தம்பிகள் அன்பில் திளைத்தாராம்
விசுவாமித்திரர் அழைத்தாராம்
தாடக வனம் அவர் புகுந்தாராம்
அரக்கர் கூட்டம் அழித்தாராம்
கௌசிக யாகம் காத்தாராம்
மிதிலை மாநகர் அடைந்தாராம்
மைதிலி விழி சிறை புகுந்தாராம்
சனகனின் வில்லினை வளைத்தாராம்
ஜானகி மணாளன் ஆனாராம்
துணையுடன் அயோத்தி மீண்டாராம்
திருமணம் ஒன்றென வாழ்ந்தாராம்
அடுத்திவர் அரசென கேட்டாராம்
அமைதியாய் அதையும் கடந்தாராம்
நாட்டு மக்கள் குளிர்ந்தாராம்
நம் மகன் அரசன் என்றாராம்
அனைவரும் சிரித்து மகிழ்ந்தாராம்
கிழ மகள் கூனி நின்றாராம்
சிறு தாய் சிறுமதி கொண்டாராம்
தன் மகன் அரியணை என்றாராம்
தயரதன் வரமென தந்தாராம்
துயரிது என்றே வீழ்ந்தாராம்
ராமன் வந்து நின்றாராம்
தந்தை நிலைமை கண்டாராம்
அய்யன் ஆணை கேட்டாராம்
கானகம் செல்வேன் என்றாராம்
இலக்குவன் உடன் வர சீதாராம்
கானகம் நோக்கி சென்றாராம்
குகனொரு அனுஜனாய் ஏற்றாராம்
கங்கை கடந்து மறைந்தாராம்
இடையே பரதன் வந்தாராம்
திரும்பிடு அண்ணலே என்றாராம்
திரும்பா நிலைமை உணர்ந்தாராம்
சிரமதில் செருப்புடன் சென்றாராம்
சித்திரகூடம் வந்தனராம்
சித்திர வாழ்வு வாழ்ந்தனராம்
நித்திரை இல்லா இலக்குவனராம்
இமை போல் அவர்களை காத்தனராம்
தசமுகன் தங்கை வந்தாராம்
மணம்புரி என்னை என்றாராம்
அண்ணல் அவளை மறுத்தாராம்
அரக்கி அனுஜனை அழைத்தாராம்
மறுத்து மறுத்து பார்த்தாராம்
அரக்கி பிராட்டியை பழித்தாராம்
சினமுடன் தம்பி கொதித்தாராம்
அரக்கி மூக்கினை அறுத்தாராம்
ராவணன் தங்கை அண்ணனை தேடி,
லங்கா நகரம் சென்றாராம்
தானிழந்த காதும் மூக்கும்,
கதைக்கு தூக்கி வைத்தாராம்
மூக்கும் முழியும் அழகும் செழிப்பும்,
சீதை ஒருத்தியே என்றாராம்
அரக்கன்மனதில் ஆசை விதைத்து,
வினையை அறுக்க நினைத்தாராம்
மானின் உருவில் மாரீசன்,
சீதை முன்னே வந்தாராம்
ஆசை காட்டி மோசம் செய்ய,
மாயமானாய் நின்றாராம்
மானை விரட்டி சென்ற ராமன்,
குரலை பிராட்டி கேட்டாராம்
வீணில் பயந்து மைத்துனனை அவர்,
சென்றே பார்க்க சொன்னாராம்
அண்ணியை காக்க அண்ணலின் இளவல்,
அம்பினால் கோடு போட்டாராம்
தாண்டவேண்டாம் அன்னையே இதை,
என வேண்டி அவரும் சென்றாராம்
யாரும் இல்லா வேளை பார்த்து,
யாசகர் ஒருவர் வந்தாராம்
கோட்டைத்தாண்டிய தாயை கவர்ந்து,
ராவணன் வானில் சென்றாராம்
விவரம் அறியா ஸ்ரீராமன்
மானின் மாயம் களைந்தாராம்
விவரம் தெரிந்தது பதைத்தாராம்
துணையை பிரிந்து தவித்தாராம்
வானில் அன்னை குரலை கேட்டு,
பக்ஷி ராஜன் வந்தாராம்
தூணில் மோதிய பறவை போல,
இறகு முறிந்து வீழ்ந்தாராம்
துணையை தேடி அலைந்த அண்ணல்,
கண்ணில் அவரும் பட்டாராம்
தென்திசை காட்டி அண்ணலின் மடியில்,
மோக்ஷம் அவரே கொண்டாராம்
அயோத்தி ராஜன் அன்னையை நாடி,
கிஷ்கிந்தைக்கு வந்தாராம்
அனுமன் என்றொரு அடியவன் அவரிடம்,
அருளின் கடலை கண்டாராம்
வாலியை வீழ்த்தி சுக்ரீவனுக்கு,
வானர ராஜ்ஜியம் தந்தாராம்
சீதை தேடலில் வானர சேனையை,
அனுப்பி வையேன் என்றாராம்
தென்னிலங்கை தனிமைத்தீவில்,
அனுமன் தாயை கண்டாராம்
சூடாமணியை காட்டி அவரிடம்,
அண்ணல் வருவார் என்றாராம்
சூடாய் சேதி தரலாம் எனவே,
கடலை தாண்ட விழைந்தாராம்
லங்காபுரிக்கு தீயை வைத்து,
குறும்படம் காட்டி சென்றாராம்
கண்டேன் சீதையை கண்டேன் சீதையை,
என்றே பாடி வந்தாராம்
அண்ணல் இதயம் தணியும் சேதி,
அனுமன் அன்று சொன்னாராம்
கடலை தாண்டிய லங்காபுரியில்,
இதயம் வாழுது என்றாராம்
அன்னை இன்னல் இனியும் வேண்டாம்,
போர்தான் இனிமேலென்றாராம்
வானர சேனை கடலை தாண்டிட,
கற்கள் கொணர சொன்னாராம்
ராம் ராம் என்றே எழுதி அவற்றை,
கடலில் வீச சொன்னாராம்
கற்கள் மிதக்கும் அதிசயம் கண்டு,
அகிலர் உற்று நோக்கினராம்
அன்பில் உள்ளது இறைவன் அருளென,
விளங்கி அணில் போல் துள்ளினராம்
வீடணன் தஞ்சம் கண்டாராம்
கும்பகர்ணனை வென்றாராம்
இலக்குவன் அம்பை எய்தாராம்
இந்திரஜித்தை கொன்றாராம்
ராவண யுத்தம் முடித்தாராம்
பத்து முடியையும் அழித்தாராம்
பத்தினி இவள் என உரைத்தாராம்
அன்னை கைத்தலம் பிடித்தாராம்
விமான பயணம் கொண்டாராம்
அயோத்தி மாநகர் வந்தாராம்
பரதனின் பாரம் கலைத்தாராம்
பாரத பாரம் ஏற்றாராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம் ராம ஜெய சீதாராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம் ராம ஜெய சீதாராம் !!
*
அடியவன் ஆராஅமுதன் பாடிய
ராமாயணத்தை கேட்டீர்கள்!
தவறிதில் ஆயிரம், இருக்கும் எனினும், பொடியவன் பிழைகளை பொருத்தருள்வீர்!!
ஶ்ரீராம் ஜெயராம்
ஜெய ஜெய ராம்!
ஶ்ரீராம் ஜெயராம்
ஜெய ஜெய ராம்!!
Leave a comment
Upload