தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 9 - ரேணு மீரா

20240005110849259.jpg

“ எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்.”

பிறரால் பழிக்கப்படாத நற்குணம் நிறைந்த மக்களை பெற்றாள், அந்த பெற்றோரை ஏழு பிறவியிலும் துன்பங்கள் சேராது, என்ற திருவள்ளுவரின் வாக்கின்படி, பெற்றோர்கள் தன் குழந்தைகள் இந்த சமூகத்தின் முன் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு.

13 வயதில் குழந்தைகள் டீன் ஏஜ் என்ற உலகத்தில் பயணிக்க ஆரம்பிக்கின்றனர் அதாவது குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறும் அந்தக் காலகட்டம் அவர்களுக்கு ஒரு புதிய அனுபவம், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் இந்த அனுபவம் அவர்கள் உணர்ந்து புரிந்து கொள்ள கால அவகாசம் கிடைக்கிறதா என்று நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் பெரும்பாலும் மற்றவர்களுடன் பேசுவது குறைவு, அதாவது இந்த வயது வரை எத்தனை பொது நிகழ்ச்சிகளுக்கு நாம் அவர்களை அழைத்து சென்று இருக்கிறோம், மற்றவர்களை பார்த்து பழகும் சந்தர்ப்பம் எத்தனை அவர்கள் கடந்து வந்துள்ளனர் என்று முதலில் நாம் கவனிக்க வேண்டும், அவர்கள் பெரும்பாலும் மொபைலிலும் லேப்டாப்பிலும் வாழ்கின்றனர், அவர்களின் பெரும்பான்மையான நேரம் விளையாட்டு போன்றவைகளில் கழிக்கின்றனர்.

அவை அனைத்தும் ஒரு தலை ஆட்டம்,

எதிர்பக்கத்திலிருந்து எந்தவித எதிர் வினையும் இல்லாததை பழகிவிட்ட குழந்தைகளுக்கு ஒரு பொது விழாவிலோ உறவினர் முன்னிலையிலோ எப்படி பேச வேண்டும், பழக வேண்டும், என்று தெரியாது, அவர்களுக்கு அது ஒரு புது அனுபவம், இதை பெற்றோர்கள் முதலில் புரிந்து கொண்டு அவர்களை சிறு வயதிலேயே பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துவது நல்லது.

பெரும்பாலான பெற்றோர் பொது இடம் என்றால் உடனே ஒரு fine dine restaurant, அல்லது ஒரு பெரிய shopping mall அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது குழந்தைகளின் சமூக நடத்தையை மேம்படுத்த உதவாது.

முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா வயதினர் மற்றும் அனைத்து தரப்பினர் இடையே பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவது அவசியம். Shopping Mall போன்ற இடங்களில் குறிப்பிட்ட வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் வருவதால் அங்கு அந்த குழந்தைகளுக்கு பெரிய அளவில் சமூக நடத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பு குறைவு.

சில நாட்களுக்கு முன் கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அங்கு என் அருகில் அமர்ந்திருந்த ஒரு குடும்பம் தாய் தந்தை சுமார் 13 அல்லது 14 வயது நிரம்பிய அவர்களது மகன் மூவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் தனித்தனியே தன் கையில் இருக்கும் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த பெண் தன் மகனிடம் ஊருக்கு போனதும் எப்படி எல்லோரிடமும் பேச வேண்டும், என்ன கேட்டால் எப்படி பதில் அளிக்க வேண்டும், என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அப்போது என்ன செய்யக்கூடாதோ, அதையே அழுத்தம் கொடுத்து திரும்ப திரும்ப சொன்னதாலும் அவன் இனி என்ன தவறுகள் செய்வான்…. இதற்கு முன் என்ன தவறுகள் செய்தான் என்று சற்று குரலை உயர்த்தி சொன்னது உடன் நிறுத்தாமல், அங்கு வரவிருக்கும் மற்ற உறவுக்கார குழந்தைகள் முன் தன் மானத்தை வாங்கி விட வேண்டாம் என்றும் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் அமர்ந்திருந்த தந்தையோ இதைப்பற்றி சிறிதும் கவனம் இன்றி போனில் பிஸியாக இருந்தார், தனியாக தன் தாயிடம் மாட்டிக் கொண்ட அந்த பையன் மற்றவர்கள் இந்த உரையாடலை கேட்டு விடுவார்கள் என்ற கவலை ஒரு புறம், ஊருக்கு சென்றால் சொந்தங்களால் ஏற்படப்போகும் இடையூறுகளையும் எண்ணி கோபப்பட ஆரம்பித்தான். பின்,

சிறிது நேரத்தில் சம்பந்தம் இன்றி கத்தி கோபத்தில் பக்கத்தில் இருந்த கைப்பிடி வைத்த பெட்டிகளை தட்டி விட்டதும் திரும்பிப் பார்த்த அந்த தந்தை அவன் பெயர் கொண்டு அழைத்து, “behave yourself”, என்று திட்டிவிட்டு தன் மனைவியிடம் “ அந்த பெட்டிகளின் மேல் கவனம் வைக்க கூடாதா“ என்று கடிந்து பேசியதுடன் தன் மகனிடமும் என்ன நடந்தது என்று கேட்க தவறுவதை பார்த்தேன்.

அந்த சூழலில் தான் தனித்து விடப்பட்டதாக அந்த பையன் உணர்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பொது இடங்களில் குழந்தைகள் எப்படி நடக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர் அதற்கு முன் உதாரணமாக தான் இருக்கிறோமா என்று சற்று கவனம் கொள்வது அவசியம்.

இந்த இடத்தில் தன் மகனை வீட்டில் இருந்து கிளம்பும் நேரம் முதல் அவனுடன் ஒரு சிறு குறும்பு அரட்டை கிண்டல் போன்ற உரையாடலுடன் கிளம்ப வேண்டும், அத்தியாவசிய தேவை இன்றி கைபேசியை உபயோகப்படுத்துவதை தவிர்த்தல் நலம், பையன் கைபேசி வைத்திருந்தால் அதை அதட்டி கோபப்பட்டு வாங்குவதை விட “நீ போன் பார்க்காதே” என்று சொல்லுவதை விட அவர்கள் ரசிப்பதை நீங்களும் ரசிக்க பழகுங்கள், அதைப்பற்றி கற்றுக் கொள்ளுங்கள் அவர்களை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கச் சொல்லுங்கள், கேம்ஸ் youtube போன்றவற்றை அவர்கள் முன் ரசிக்க வேண்டும். ஊருக்கு செல்ல நீங்கள் தயார் செய்த பை பெட்டி கொண்டு செல்லும் பொருட்களில் ஏதேனும் ஒன்றின் பொறுப்பை அவர்களிடம் கொடுங்கள், அவர்களிடம் சின்ன சின்ன ஆலோசனை கேளுங்கள், இப்படி செய்வதன் மூலம் அவர்கள் உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும்.

20240025223053832.jpg

அவர்கள் செய்யக்கூடாதவற்றை சொல்வதை விட, செய்ய வேண்டியதை மட்டும் சுருக்கமாக சொல்ல பழகுங்கள், ஒருவரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பேச வேண்டாம், எங்கு சென்றாலும் நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து இருக்கும் இடம் அவர்களுக்கு சௌகரியமான சூழலை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். அதாவது அக்கம் பக்கம் யாரேனும் இருந்தால் நீங்கள் குழந்தைகளிடம் சொல்ல வேண்டுமென்று நினைக்கும் விஷயத்தை கவனத்துடன் அவர்களிடம் ரகசியமாக சொல்வது நல்லது. இது தந்தை தாய் இருவருக்கும் பொருந்தும். குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர் இருவரின் பொறுப்பு. சின்ன சின்ன தந்திரங்கள் மூலம் அதை சுலபமாக கையாளலாம். குறிப்பாக இந்த வயது குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்பும் தாரக மந்திரம்.

“மெல்ல பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்கக் கூடாது“...

தொடர்ந்து பேசுவோம்...