மனைவி ஊரில் இல்லை. என்னைத் தவிர வேறு யாரும் இல்லை வீட்டில்.!
திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன.என் மனைவி ராஜலஷ்மி என்கிற ராஜிக்கு தாயுமானவள் என்று பெயர் வைத்து இருக்கலாம்.
எங்களுக்கு ஒரு மகன்.மற்றும் மகள். மகன் பம்பாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர். திருமணம் ஆகிவிட்டது.
மகள்பௌதீகத்தில்அமெரிக்காவில் ஆராய்ச்சிசெய்துகொண்டிருக்கிறாள்.
ராஜிக்கு மூன்றாவது குழந்தை அல்லது முதல் குழந்தை நான் தான். எனது நித்தியக் கடன்களைத் தவிர பாக்கி எல்லா வீட்டு விஷயங்களையும் அவள்தான் பார்த்துக் கொள்வாள்.
குறைந்தபட்சம் ஒரு பத்து முறையாவது செல்போனில் அவளை கூப்பிடாமல் ஒரு நாள் எனக்குக் கழியாது.
என் செல்போனை மௌன நிலையில் வைக்கக் கூட அனுமதிக்க மாட்டாள்.
ராஜியின் தம்பி பையனுக்கு மதுரையில் கல்யாணம் என்பதாலும், எனக்கு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத வேலைகள் இருந்ததாலும், அவள் மட்டும் முதல் கிளம்பி மதுரை செல்வதாகவும், நான்கு நாட்கள் கழித்து நானும் அவளுடன் கல்யாணத்துக்கு சேர்ந்து கொள்வதாகவும் அவள் அரை மனதுடன், நான்முழுமனதுடன் ஒப்புக்கொண்டோம்.
நாலு நாட்களுக்கு எனக்கு தேவையான வத்தல் குழம்பு,வடாம், புளிக்காய்ச்சல் போன்ற கெட்டுப் போகாத சாமான்களாக ஃப்ரிட்ஜ்ல் அடுக்கி வைத்து விட்டாள். இரவு உணவான சிற்றுண்டிக்கும் பக்கத்து வீட்டு மாமி இடம் சொல்லி வைத்து விட்டாள்.
(ஹோட்டல் உணவு எனக்கு ஒத்துக்கொள்ளாதாம்.)
அன்று அலுவலக வேலைகள் சீக்கிரமே முடிந்து விட்டதால், மாலை ஆறு மணிக்கே வீடு திரும்பி ஒரு குளியலைப் போட்டு விட்டு பின்னர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கடந்த கால வாழ்க்கையை மனதில் அசை போட ஆரம்பித்தேன்.
பள்ளிக்கால மற்றும் கல்லூரிக் கால நண்பர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருப்பார்கள்.?
நான் இன்னும் ஒரு வருஷத்தில் ரிட்டயர் ஆக வேண்டும். அதற்கு முன் என்னுடைய பழைய நண்பர்கள் சிலரையாவது தேடிப்பிடித்துச் சந்தித்தாக வேண்டும்.
திடீர் என்று மனதில் ஒரு சோகம் ஏற்பட்டது. ஒரு குற்ற உணர்வு நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது.
வைதேகி....அந்தப் பெயரை எப்போது கேட்டாலும் என் நினைவலையில்.......
தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக்கில் கொசுவத்தி சுருள் சுற்றுவது போலத் தோன்றி என்னை அந்த வசந்த காலத்துக்கு மீண்டும் கூட்டிச் செல்லும்.
வைதேகி ஒரு பேரழகி. இடுப்புக்குக் கீழே தொங்கும் கரிய கூந்தல். பாரதியார் வர்ணித்தது போல, சுட்டும் விழிச்சுடர் போலக் கண்கள், ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் ஒரு கச்சிதமான உடல் அமைப்பு. இரண்டு காதிலும் தங்க வளையங்கள்.
வைதேகி என்னிடம்சிரித்துச் சிரித்துப் பேசும் போது நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்வேன்.
வைதேகியை,எங்கு எப்போது சந்தித்தேன் என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் இதை எங்கோ படித்திருக்கிறோமே என்று தான் தோன்றும்.
" வைதேகி! இவ்வளவு அழகாக இருக்கிற உனக்கு என்னை எப்படிப் பிடித்தது? நீ சத்தியமாக மனம் மாறிவிட மாட்டாயே.? "
என்று தயங்கித் தயங்கி தனி இடத்தில் பேசிக்கொண்டு இருக்கும்போது வைதேகியிடம நான் கேட்டேன்.
வைதேகி என் கையை இறுகப் பற்றிக் கொண்டு சொன்னாள்.
" ஏன் பாலு? உனக்கு என்ன குறைச்சல்? இந்தத் தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டு ஒழி. உன்னுடைய ஊடுருவும் கண்களும்,ஷார்ப்பான மூக்கும்,அதற்கு கீழே கரு கரு என்ற மீசையும்,கோடு போட்ட மாதிரி உதடுகளும்..... நான்தான் அதிர்ஷ்டசாலி.......நாம ரெண்டு பேரும் எப்போதுமே பிரியக் கூடாதுடா."
அவள் கண்கள் ஈரத்தால் இன்னும் மின்னியது.
எப்போதுமே பிரியக்கூடாது என்ற நாங்கள் அடுத்த சில மாதங்களிலேயே நிரந்தரமாகப் பிரியநேரிட்டது விதியின் சதி.
நான் வேலையில் சேர டெல்லிக்கு போய்ப் பின்னர் ஒரு வருடம் கழித்து திரும்பிய போது வைதேகிக்கு திருமணம் அவசர அவசரமாக நடந்து அவள் கணவனுடன் துபாய் சென்று செட்டில் ஆகிவிட்டாள் என்ற விஷயம் இடியாக விழுந்தது.
காதலின் தோல்வியுற்ற எல்லா சராசரி இளைஞர்கள் போல நானும் தேவதாஸ் போல சில மாதங்கள் அலைந்து , பின் சுய நினைவுக்கு வந்தாலும், வைதேகியின் உருவம்,அவளது சிரிப்பு எல்லாம் அப்படியே இன்னும் என்னை முழுமையாக ஆட்கொண்டு இருப்பதுதான் அப்பட்டமான உண்மை. ஒரு முறையாவது என் வைதேகியைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் எனக்கு அதிகமானது.
அவரது கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும். சிரிப்பை ரசிக்க வேண்டும்.
அலுவலகத்தில் அன்று எனது கவனம் முழுவதும் வைதேகி மேலே இருந்தது.
"சார் உங்கள் பழைய நண்பராம்.பேர் வி.ஆர். அனந்த ராமனாம்.உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். " என்று என் உதவியாளர் சொன்னதும் திடீரென்று ஒரு மெல்லிய அதிர்வு என் உடலை ஆட்கொண்டது.
என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் வி.ஆர்.அனந்த ராமனா? நானும் வைதேகியும் காதலித்த நாட்களில் எனக்கும் அவளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டவன் அவன்.அவனுக்கு ஏதாவது வைதேகி பற்றிய விஷயங்கள் நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
"வரச்சொல் " என்று ஒற்றைச் சொல்லில் உத்தரவிட்டு பதட்டத்துடன் காத்திருந்தேன்.
வி ஆர் அனந்தராமன் என் அறைக்குள் பிரவேசித்த போது அவனை அன்புடன் சென்று கட்டிக் கொண்டேன்.
பழைய கதைகள் நிறையப் பேசினோம்அவன் அப்படியே தான் இருந்தான். ரிசர்வ் வங்கியில்உயர்ந்த பதவியில் இருந்து பின் விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு,மனைவியுடன் தன் சொந்த வீட்டில்செட்டில் ஆகிவிட்டான்.
வழக்கம் போலவே அவனது மகளும் மகனும் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்கள். பதட்டத்தை உள்ளடக்கி,அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு, " வைதேகி என்னடா ஆனாள்? " என்று கேட்டுவிட்டு அவன் சொல்லப் போகும் பதிலில் அக்கறை இல்லாதவன் போல மேஜை டிராயரில் எதையோ தேடுவது போல பாசாங்கு செய்தேன்.
" உனக்கு?விஷயமே தெரியாதா? வைதேகி இந்த ஊரில் தான் இருக்கிறாள். துபாயில் இருந்து திரும்பி வந்து, கணவனுடன் இங்கு செட்டில் ஆகிவிட்டாள்.எப்பவாவது என்னிடம் போனில் பேசுவாள். வசதியாகத் தான் இருக்கிறாள்.அவளுடைய செல்போன் நம்பர் தரட்டுமா? "என்றான்.
ஜுரம் வருவது போல் என் உடலில் பலவித ரசாயனமாற்றங்கள் ஏற்படுவதை
உணர்ந்தேன். வைதேகியை மீண்டும் சந்திக்க போகிறேனா? அது சரியாக இருக்குமா? எங்கோ ஓர் குற்ற உணர்வு என்னை முறைத்து பார்த்தது.
"அனந்தரமா. போன்ல வேண்டாம்.சர்ப்ரைஸா அவ முன்னால போய் நின்று ஒரு மகிழ்வான அதிர்ச்சியை கொடுக்கணும்.நீயும் என் கூட வா "என்று சொன்னதும் ஒப்புக்கொண்டு விட்டான்.
"நாளைக்கு மாலை பிருந்தாவன் ரூஃப் கார்டன் ரெஸ்டாரெண்டுக்கு வர முடியுமா..? என்று அவளிடம் கேட்டுப் பார்க்கிறேன். என் மனைவியை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக கூறினால் நிச்சயம் வருவாள்...."
சினிமாவில் ஃப்ளாஷ்பேக் இருப்பது போல் வாழ்க்கையில் பிளாஷ் ஃபார்வேர்ட் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?.
சரி! அனந்தரமா, நாளைக்கு மாலை 6 மணிக்கு நான் பிருந்தாவன் ரெஸ்டாரண்டுக்கு வந்து விடுகிறேன்.
நீயும் அதற்கு முன்னால் வந்துவிட்டு வைதேகியை வரவேற்று உட்காரவை."
என்று சொன்னவுடன் அனந்தராமன் சரி என்று சொல்லி விடை பெற்றான்.
இனம் தெரியாத பயம் என்னை ஆட்கொண்டது.நான் செய்வது சரியா? ராஜிக்கு இதை தெரிவிக்க வேண்டுமா?..
கூடாது.. நானும் வைதேகியும் பழைய காதல் ஜோடிகள் என்பது அவளுக்கு இதுவரை தெரியாது..
'இப்போது எதற்காக வைதேகியை சந்திக்க வேண்டும்?.அழகாகத் தானே போய்க் கொண்டிருக்கிறது.!'
'ஏன்?இனிவரும் நாட்களில் நானும் வைதேகியும் சிறந்த நண்பர்களாக இருக்கக் கூடாதா? சரி! ஆனால் மீண்டும் பழைய எண்ணங்கள் எங்களை நிம்மதியாக வாழ விடுமா?'
கடைசியாக ஒரே ஒரு முடிவுக்கு தான் என்னால் வர முடிந்தது. வைதேகியை நிச்சயமாக சந்தித்துத் தான் தீருவேன்!!
மறுநாள் காலையிலிருந்து எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினேன்.மாலை மணி ஐந்து ஆனவுடன் அலுவலகக் கடையை மூடினேன்.மூன்று முறை சோப்பால் முகத்தை கழுவினேன். பத்து முறையாவது தலையை சீவினேன். ஷுக்கு பாலிஷ் போட்டேன்......
விலை உயர்ந்த சென்ட்டை பலமுறை ஸ்பிரே செய்து கொண்டேன். சரியாக ஆறு மணிக்கு பிருந்தாவன் ரூஃ ப் டாப் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தேன்.
வி. ஆர்.அனந்தராமன் வைதேகியுடன் பேசிக் கொண்டிருந்தான். வைதேகி முதுகுப் பக்கம் தான் எனக்கு தெரிந்தது.அனந்தராமன் என்னை நோக்கி கையசைத்து அருகில் வருமாறு கூறினான்.
தவம் கிடந்த தருணம் இது.தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவள் முன்னாள் சென்று" ஹலோ வைதேகி" என்று கையை நீட்டினேன்.
" ஹாய் பாலா! எப்படி இருக்க? "என்று கையைக் குலுக்கினாள்.
அவளை முழுதாக பார்த்த எனக்கு மின்சாரத்தை தொட்டது போல இருந்தது.
அந்த பாரதியின் 'சுற்றும் விழிச்சுடர்' கண்கள் அங்கே இல்லை... சிகை முழுவதும் வெண்ணிறமாக...அவள் சிரித்தபோது அந்த ஒளி இல்லை.நான் கடைசியாக பார்த்ததை விட ரெண்டு மடங்கு எடை கூடுதலாக இருக்கும். கழுத்தில் சுருக்கங்கள்.... கண்களுக்கு கீழே கருப்பு வளையங்கள்..
என் மனதில் நான் பூட்டி வைத்திருந்த அந்தப் பேரழகி வைதேகி இவள் இல்லை.காலம் செய்த விளையாட்டு.
காலம் நம் நினைவுகளை இளமையாக வைத்திருக்கிறது.ஆனால் நம் தோற்றத்தை மட்டும் இஷ்டமாக மாற்றி விடுகிறது.
பெருமையாகப் பேசினாள்.
பழைய நினைவுகூர்தல் எதையும் செய்யவில்லை.பேச்சில் ஒரு முதிர்ச்சி இருந்தது. நிறையப் பேசினாள். நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.இதே மாதிரி அந்த காலத்தில் அவள் பேசியபோது நான் அவள் அழகயே ரசித்துக் கொண்டிருந்தேன். என்ன பேசினாள் என்பது மனதில் பதியவில்லை.
இப்போது வைதேகி பேசிய போது அவள் அழகை நான் ரசிக்கவில்லை. பேச்சுத் திறமையையும் புத்திசாலித்தனத்தையுமே ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் என்னைப் பற்றி அக்கறையோடு விசாரித்தாள். என் 30 வருஷக் கதையை 600 வினாடிகளில் சொல்லி முடித்தேன்..
நான் வைதேகியைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததும் ஒரு வகையில் நல்லது தானோ என்றுஒரு கணம் நினைத்தேன்.
வைதேகியிடம் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.
"மீண்டும் சந்திப்போம் வைதேகி "என்றேன்.
"ஷ்யூர் பாலா" எனக் கூறி விடை பெற்றாள்.
அவள் நடையில் ஒரு தளர்ச்சி தெரிந்தது.
அனந்தராமன் என் தோளைக் குலுக்கி என்னை சுயநினைவுக்கு கொண்டு வந்தான்.
"அனந்தராமா நான் கை கழுவப் போனபோது வைதேகி உன் கூட என்னைக் கைகாட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தாளே! அப்படி என்னதான் என்னைப் பற்றி சொன்னாள்?"
அனந்தராமன் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.......
"சொன்னா நீ வருத்தப்படுவ."
" பரவால்ல!சும்மா சொல்லுமா!"
" உன்னைப் பார்த்ததும் அவள் ஷாக் ஆயிட்டாளாம்.உனக்கு தல முடி எல்லாம் கொட்டி,வழுக்கை விழுந்து, இருக்கிற முடி எல்லாம் சுத்தமா நரைத்துப் போய்...... உன்னை பார்க்கவே அவளுக்கு பரிதாபமாக இருக்காம். "
'அந்த காலத்துல இருந்த கருகருன்னு மீசையோட தீர்க்கமான மூக்கும..கம்பீரமான நடையும்... எல்லாம் என்ன ஆச்சு இவனுக்கு?
இது பாலு தானான்னு எனக்கு சந்தேகமே வந்துடுச்சு.ஆனால் பாலு ரொம்ப நல்லவன்.பாவம் காலம் உருவத்தை எப்படி எல்லாம் மாத்தி விடுகிறது.?' என்று நொந்து கொண்டாள்.".. என்று அவன் சொன்னதும்...
உண்மைதானே! நானும் சுய தரிசனம் செய்து கொள்ளாமல் விட்டது என் தவறுதான்.
என்னுயிர்க் காதலி என் மனதில் இருந்து மறைந்து விட்டாள்.ஆனால் என் உயிர்த் தோழியாக அவள் மீண்டும் கிடைத்து விட்டாள்... என்று நினைத்துக்கொண்டேன்.
Leave a comment
Upload