தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - புறக்கணியுங்கள்.

2023927194016298.jpg

அரசு பேருந்துகள் எவ்வளவுதான் இருந்தாலும் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க பலர் விரும்புவது உண்டு. இதற்கு காரணம் சுகாதாரம் இல்லாத அரசு பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில் உள்ள கூட்ட நெரிசல். ஆம்னி பேருந்துகளில் பயணம் கொஞ்சம் சொகுசாக இருக்கும். கட்டணம் கூடுதலாக இருக்கும் நினைத்த இடத்தில் அவர்கள் நம்மை இறக்கி விடுவார்கள். அதே சமயம் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் ரொம்பவும் அதிகமா இருக்கும் இது அரசாங்கம் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை இது பற்றி பொதுமக்கள் புகார் வந்து சொன்னால் ஏதோ பேருக்கு நடவடிக்கை இருக்கும். ஆம்னி பேருந்துகள் அரசுக்கு தரும் 'கவனிப்பு' அப்படி.

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை இப்படி தொடர் விடுமுறை காரணமாக இந்த முறை அரசாங்கம் கூடுதலாக பேருந்துகளை ஏற்பாடு செய்தாலும் ஆம்னி பேருந்துகளை நோக்கியும் கூட்டம் இருக்கத்தான் செய்தது. இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கொள்ளை லாபம் அடிக்கப் பார்த்தார்கள். இந்த முறை திடீர் என்று அரசு அதிகாரிகளுக்கு ஞானோதயம் ஏற்பட்டு அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளை கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் செய்வோம் என்று அறிவிக்க அதன் பிறகு என்ன நடந்ததோ ஆம்னி பேருந்துகள் சேவை தொடரும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. கூடவே அவர்கள் அறிவித்த கட்டண விவரம் தான் மிகப்பெரிய அதிர்ச்சி.

ஆம்னி பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டண விவரம் என்று சென்னையில் இருந்து திருச்சி செல்ல 1610 முதல் 2430 வரை, மதுரைக்கு 1930 முதல் 3070 வரை, தூத்துக்குடிக்கு 2320 முதல் 3810 வரை, திருநெல்வேலி 2380 முதல் 3920 வரை, சேலம், தஞ்சை 1650 முதல் 2500 வரை இதை அவர்கள் பத்திரிக்கை செய்தி குறிப்பாக வெளியிட்டார்கள். இதிலிருந்து அரசாங்கம் கிட்டத்தட்ட இந்த கட்டண கொள்ளைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெட்ட வெளிச்சம். இது வந்தே பாரத் ரயில் கட்டணத்தை விட அதிகம் விமான கட்டணத்தை விட சற்று குறைவு என்பதுதான் உண்மை. அரசு பேருந்து கட்டணத்தை விட ஐந்து மடங்கு அல்லது ஆறு மடங்கு கட்டணத்தை உயர்த்திருக்கிறார்கள். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள். இதை இதுவரை எந்த அரசியல் கட்சியும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. காரணம் தேர்தல் நேரத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அவர்கள் பார்க்க வேண்டியிருக்கும் என்பதால் தான் இந்த கள்ள மவுனம். அல்லது நன்றி கடன்.

இது எப்படியோ பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளை புறக்கணித்து அரசு பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் அப்போதுதான் அரசாங்கமும் தங்கள் மௌனத்தை கலைக்கும் ஆம்னி பேருந்துகளும் தங்கள் தவறை உணர்வார்கள். அவர்களுக்கு தரும் கடுமையான தண்டனை இதுவாகத்தான் இருக்கும் மக்கள் இதை உடனே அமல்படுத்த வேண்டும்.