ஓவியமேதை மணியம் அவர்களின் நூற்றாண்டு விழா வண்ணமயமாக துவங்கியது. அவருடைய அருமையான ஓவியங்களை மணியம் செல்வன் தொகுத்து வழங்க, சுப்ர.பாலன் அதற்கு எழுத்து நல்க, பூம்புகார் பதிப்பகம் அருமையாக அச்சிட்டு ஓவிய ஜாம்பவான்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
1924 ஆம் ஆண்டு பிறந்த மணியம் இள வயதிலேயே ஓவிய ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை ஓவியக்கலை கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது அதனை முழுவதும் முடிக்கும் முன்னரே ஆசிரியர் கல்கியால் அடையாளம் காணப்பட்டு கல்கி இதழுக்கு படம் வரைய துவங்கினார். அதன் பிறகு அவர் மனதில் அவருடைய முதல் ஓவிய குரு ராய் சௌத்ரி, இரண்டாவது குரு ஆசிரியர் கல்கி என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.
ஆசிரியர் கல்கி தான் எழுதிய சரித்திர புதினங்களை அவை நடந்த இடத்திற்கே சென்று அந்த சூழ்நிலையை அனுபவித்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
மணியம் அவருடன் சேர்ந்த பிறகு அவர் சென்ற எல்லா சரித்திர இடங்களுக்கும் மணியமை உடன் அழைத்துச் சென்று அல்லது தனியே அனுப்பித்து படங்களை வரையச் செய்தார். ஸ்பாட் ஓவியங்கள் என்று சொல்லப்படும் பாணியில் (ஒரு பொருளை அது இருக்கும் இடத்திற்கே சென்று அருகில் இருந்து பார்த்து வரைவது) ஓவியர் மணியம் வல்லுனராக இருந்தார். பாதாமி, ஹம்பி, அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள், மாமல்லபுர சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில் என அவர் வரைந்த ஸ்பாட் ஓவியங்கள் ஏராளம். அந்த இடத்திற்கு சென்று பார்க்க முடியாதவர்கள் அனைவருக்கும் அதை உயிர்ப்பித்து அவர்கள் தொட்டு உணர்ந்து ரசிக்கும் அளவிற்கு கல்கியில் வெளியிட்டு தீபாவளி மலர் புத்தகங்களில் உயிர் பெற்று உலா வந்தன.
பொன்னியின் செல்வன் என்னும் மாபெரும் சரித்திர புதினத்தை கல்கி எவ்வளவு நாள் யோசித்து எழுதினாரோ அதை விடவும் இரண்டு மடங்கு உழைப்பை போட்டு அதன் 37 கதாபாத்திரங்களையும் தனித்தனியே முகபாவனை, நகை, நடை உடைகள் என மாறு படுத்தி காட்டி அந்தந்த வாரத்தில் அவர்களை பல்வேறு முக பாவங்களில் அதன் தொடர்ச்சியும் இருக்கச் செய்து, வாசகர்களை, பொன்னியின் செல்வனில் முதல் வரியில் கல்கி செல்வது போல் "கால ஓடத்தில் ஏறி இன்றைக்கு 900 ஆண்டுகளுக்கு முன் வாசகர்களை அழைத்துச் செல்ல இருக்கிறேன்" என்பதை நிஜமாக்கி அதை நிரூபித்தும் காட்டினார்.
நமது ஆசிரியர் மதன் பேசும் போது... "சிவகாமியின் சபதம் நாவல் தொடராக வெளிவந்த போது மெயின் படங்களை அப்போதைய சீனியர் ஆர்ட்டிஸ்ட் வர்மா வரைந்திருப்பார், அதே சமயம் அந்த தொடரில் குட்டி குட்டி ஓவியங்கள் வெளிவரும். குருவாள், கிரீடம், நாட்டிய முத்திரைகள் என்று மினியேச்சர் ஓவியங்கள். அவற்றை வரைந்தவர் அப்போதுதான் கல்கியின் பணியில் சேர்ந்திருந்த இளைஞர் பெயர் மணியம். அவை சிறு ஓவியங்கள் என்றாலும் துடிப்போடு காணப்படும். ஆசிரியர் கல்கியே அவற்றால் கவரப்பெற்றார் என்பது நிச்சயம். மணியம் அவர்களின் திறமையை கவனித்துக் கொண்டு வந்திருந்த ஆசிரியர் அந்த இளைஞருக்கு மிகப்பெரிய பிரமோஷன் கொடுத்தார். 'பொன்னியின் செல்வன்' எனும் மாஸ்டர் பீஸ் நாவலுக்கு ஓவியங்கள் வரையும் பணியை அவரிடம் ஒப்படைத்தார், கூடவே முழு சுதந்திரமும் மணியம் அவர்களுக்கு கிடைத்தது என்பது ஓவியங்களை பார்க்கும் போதே புரியும். கல்கி ஒரு மகா ரசிகர் அவரும் மணியமும் நிறைய கலந்தாலோசித்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அத்தனை கதாபாத்திரங்களையும் வரைந்து காட்ட வேண்டுமே. பொன்னியின் செல்வன் தொடரின் கதாநாயகன் அருண் மொழியில் துவங்கி வைத்தியர் மகன் பிணாகபாணி வரை ஏராளமான கதாபாத்திரங்கள் உண்டு. பல ஓவியர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முகங்களை வரைந்து மீசையை மட்டும் வெவ்வேறு விதமான காட்டி இருப்பார்கள். ஆனால் மணியம் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் கொடுத்தார்.
ரவிதாசன் மீசை மூக்குக்கு கீழே ஒன்று சேராது அதுவே ஒரு அரேபிய கொள்ளைக்கார “லுக்” வரும். தேவராளனுடைய பெரிய மீசை. அதே போல பெண் பாத்திரங்கள் பலவிதமாக வரைய தனித்தன்மை வேண்டும். குந்தவை நந்தினி, வானதி, மணிமேகலை போன்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கொண்டை முக லட்சணங்கள். மணியம் அவர்களால் கவரப்பட்டாரோ என்னவோ தெரியாது. கல்கியே ஒரு அத்தியாயத்தில் குந்தவையின் அழகையும் ,நந்தினியின் வசீகரத்தையும் ஒப்பிட்டு ஒரு பெரிய பேராவை எழுதி இருப்பார். மணியமும் இரண்டு அழகிகளின் குளோசப்பை வரைந்து பிரமாதப்படுத்தி இருப்பார். வந்திய தேவனுக்கு அவர் தந்த நடு வகிடு ஹேர்ஸ்டைல், அன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு ஓவியரும் யோசிக்காத ஒன்று. அவர் ஒரு மிகச்சிறந்த டிசைனரும் கூட. பார்த்திபன் கனவு திரைப்படத்தின் கலை இயக்குனராய் அவர் தொட்ட சிகரங்கள் இன்றைய கால கட்டத்தில் கூட யாரும் நினைத்து பார்க்க முடியாதது. அவர் மகனுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்வாண, மறக்கமுடியாத தருணங்கள் என்றார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஓவியர் மற்றும் திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணி குறிப்பிட்டது போல பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மணியம் அவர்களுடைய ஓவியங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான் அதை எனது கற்பனையில் இன்னும் சில மாறுதல்கள் செய்து உபயோகப்படுத்திக் கொண்டேன். நந்தினியின் கொண்டையும் குந்தவியின் ஐந்தடுக்கு முடி அலங்காரமும் என்னால் மாற்ற முடியவில்லை. என்று அவர் சொன்ன போது கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தாண்டியும் அவர் ஓவியத்தின் வீச்சு நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் சொன்னது போல பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து கல்கியில் தொடராக வெளியிடப்பட்டது ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஓவியர்கள் அதற்கான ஓவியங்களை வரைந்தார்கள். அது தவிர அது கல்கியின் படைப்புகள் பொது உடைமையாக்கப்பட்ட பிறகு நிறைய பதிப்பகங்கள் பொன்னியின் செல்வனை வெளியிட்டன. சில ஓவியங்களோடும் வெளியிட்டன. அவற்றை அதிகமான அளவில் வரைந்தவர்கள் ஓவியர் வினு பத்மவாசன் மற்றும் வேதா ஆகியோர் மூவரும் அவர்கள் மணியம் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் கற்பனையில் மெருகேற்றி அதனை வரைந்தார்கள் என்பதுதான் மிகவும் வியப்பான விஷயம்.இது எந்த ஒரு ஓவியருக்கும் கிடைக்காத ஒரு பெருமை மணியமிற்கு உண்டு என்று அவர் சொன்னார்.
ஒவ்வொரு இடத்திற்கும் ஸ்பாட் ஓவியங்கள் வரைய அவர் செல்லும் போது மணியம்மின் துணைவியார் எப்படி உடன் சென்று அவருக்கு கிடைக்கும் இடத்தில் சமைத்து உணவு ஏற்பாடு செய்தார்கள் என்பதை காணொளி காட்சியில் சொன்னதை நினைவு படுத்திய ஓவியர்.
நடிகர் சிவகுமார், தான் அதுபோல ஸ்பாட் ஓவியங்கள் வரைய மகாபலிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு சென்றபோது, பட்ட கஷ்டங்களை சொல்லி, மணியம் பட்ட கஷ்டத்திற்கு இது சற்றும் குறைவானது அல்ல, ஆனால் நான் வரைந்த கால கட்டங்கள் சிறிது முன்னேற்றம் அடைந்த காலங்கள் மணியம் காலத்தில் அது போல் அல்ல. அன்று அதை செய்வது மிகவும் கடினமான விஷயம் அதை அவர் ஒரு தவம் போல செய்தார் என்று சொன்னார்.
இந்த நிகழ்வில் முக்கியமாக வந்து இருந்த அரங்கம் நிறைந்த கலா ரசிகர்களை நெகிழ்வாக்கிய விஷயம், வாழ்நாள் சாதனையாளர் விருதினை நான்கு முதுபெரும் ஓவிய ஜாம்பவான்களுக்கு வழங்கியது. ஓவியர் மாயா, ஓவியர் ஜெயராஜ், ஓவியர் ராமு, ஓவியக் கவிஞர் அமுதோன். இவர்கள் நால்வருக்கும் விருதும், காசோலையும் வழங்கப்பட்டது. தந்தையினுடைய ஆசியை இவர்கள் மூலம் தான் பெற்றதாகவே அந்த நிமிடத்தில் கருதியதாக மணியம் செல்வன் சொன்னது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சிவசங்கரி பொன்னியின் செல்வன் வந்தபோது தனக்கு எட்டு வயது என்றும் கல்கியில் வரும் கருப்பு வெள்ளை படங்களில் அவருக்கு பிடித்த வகையில் வண்ணம் தீட்டி கல்கி சதாசிவம் அவர்களிடமும் ஆசிரியர் கல்கி அவர்களிடமும் காண்பித்து பாராட்டினை பெறுவது மாற்றமுடியாத நினைவுகள். அந்த நேரத்தில் நந்தினியின் கொண்டையும் குந்தவியின் சிகை அலங்காரமும் எங்களை அந்த அளவுக்கு வசீகரித்திருந்தன. சிறு சிறு வாழை மட்டைகளை கொண்டு ஐந்து அடுக்குகள் செய்து குந்தவையின் கொண்டையை நான் போட முயற்சித்திருக்கிறேன் என் சுற்றத்தாரிடமும் பாராட்டு பெற்று இருக்கிறேன். ஓவியர் மணியத்தின் தாக்கம் அத்தகையது என்றார்.
இந்த காலத்தில் சொல்வது போல் கல்கி கோடு ஒன்றினை போட்டால் ஓவியர் மணியம் அதில் ரோடு ஒன்றிணை போட்டு பக்கத்தில் மரங்களை நட்டு ஒரு விடுதி அமைத்து சுற்றிலும் தோட்டங்கள் போட்டு அந்த இடத்தையே மனோகரமான ஒன்றாக மாற்றி விடும் வல்லமை கொண்டிருந்தார்.
புத்தகத்தில் பொன்னியின் செல்வன் முதல் பகுதியில் ஒரு ஓவியம் எடுத்து பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.
அதில் கிட்டத்தட்ட பொன்னியின் செல்வனின் அனைத்து கதாபாத்திரங்களும் இருப்பது போல ஒரு வளையம் போல் அந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது ஓவியர் மணியத்தினுடைய திறமையை நமக்கு முழுவதுமாக சொல்லிவிடுகிறது. அதேபோல கடைசி பகுதியாக முற்றுப்பெறாத ஓவியங்கள் என்ற தலைப்பிட்டு அவர் ஓவியத்தை வரைய ஆரம்பித்து ஏதோ காரணத்தால் முழுவதும் முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்ட ஓவியங்களின் ஒரு சிறு தொகுப்பினை மணியம் செல்வன் தந்திருக்கிறார் அதில் தேவியின் முகம் நம்மை பரவசம் கொள்ளச் செய்கிறது. திருமாலின் உருவம் பென்சில் கோடுகளாக இருந்தாலும் உயிர்த்தெழுந்து நின்று நமக்கு ஆசி வழங்குகிறது. இரண்டு தேவியர் திருவுருவம் நவராத்திரி சமயத்தில் பார்க்கும்போது மிகவும் பக்தி மயமாய் தோன்றுகிறது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வினை நமக்கு தருகின்றது. இந்த ஓவியங்களின் மத்தியில் தினமும் தனது வாழ்க்கையை தொடரும், அவரின் ஓவிய வாரிசு மணியம் செல்வன் இந்த விழா எடுத்ததற்காகவும் இந்த புத்தகத்தை மிகுந்த சமன்களுக்கு இடையில் ஓவியங்களை திரட்டி எல்லோருடைய வாழ்த்துரைகளையும் மதிப்புரைகளையும் வாங்கி சுப்ர.பாலனின் உதவியோடு தெளிவாக தொகுத்து தந்திருப்பது ஒரு இமாலய சாதனை என்றே சொல்லலாம்.
ஓவியக்கலையில் சாதனை செய்யத் துடிக்கும் எவருக்கும் இந்த புத்தகம் ஒரு மிகப்பெரிய பலமாய் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இந்த நிகழ்வு பொருத்தமாக மயிலாப்பூர் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் நடந்தது மணியத்தின் ஆன்மா இன்னும் உலா வந்து கொண்டிருக்கும் அவரின் தாய் வீடான மயிலையில் என்பது எதிர்பாராமல் நேர்ந்த ஒரு அரிய விஷயமாகும்.
அத்தனை ஓவியர்களை ஒருசேர பார்க்கும் வாய்ப்பு மிக மிக அபூர்வமான ஒன்று. இதில் கலந்துகொண்ட மாயா அவர்கள் 96 வயது நிரம்பிய இளைஞர். மிக இளம் வயது ஓவியர் ஷ்யாம்.
அவரே இங்கு உதாரணமாக காண்பித்திருக்கும் ஓவியமான மைக்கேலேஞ்சலோ வின் "The Creation of Adam" ஓவியத்தைப் போல "அவருடைய வலது கரத்தைப் பற்றி கொண்டு அவர் வாழ்ந்த நாட்களிலேயே அவரின் திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்கிற ஏக்கத்தோடு மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டேன்.
அப்பா! உங்களுடைய ஆற்றலை எல்லாம் எனக்கு வழங்கி என்னை ஆசீர்வதியுங்கள். உங்களுடைய கற்பனை வளத்தை எனக்குத் தாருங்கள்".. அந்தக் கனமான தருணத்தில் எனக்கு எதுவுமே தோன்றவுமில்லை. 'ரிலே ரேஸில்' முன்னால்ஓடுகிறவனின் கையிலிருந்த கழியை பின்னால் ஓட்டத்தை தொடரவேண்டியவன் நழுவவிடாமல் பற்றிக்கொள்கிற மாதிரி பிறகு நான் உணர்ந்தேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமான இத்தாலிய ஓவியர் மைக்கேல் ஆஞ்சேலோ வரைந்த இந்த ஓவியத்தை பார்த்தபோது எனக்கு அப்பாவின் கடைசி வினாடிகள் நினைவுக்கு வந்தன எனக்குள்ளேயும் என்னுடைய தந்தையின் ஆற்றல் நிறைந்து வளப்படுத்திக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன் இந்தப் பிறவியை அர்த்தமுள்ளதாக ஆக்க எனக்கு வேறென்ன வேண்டும்? "
உண்மைதான். இந்த விழா எடுத்து அவருடைய "சரித்திரம் படைத்த சித்திரங்கள்" புத்தகத்தை வெளியிட்டு, 'இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்' ஒன்றை உருவாக்கி ஓவியர் மணியம் அவர்களுக்கு அற்புதமான ஒரு அஞ்சலியை செய்த மணியம் செல்வன் அந்த ஆற்றலை மேலும் மேலும் மெருகேற்றி இன்னும் பல அற்புத காவியங்களை படைப்பார்.
விழா முடிந்தததும் ஓவியர் அரஸ் வரைந்த ஓவியத்தை மணியன் செல்வனிடம் கொடுத்து ஆசி பெற்றது உணர்வு பூர்வமான நிகழ்வாக இருந்தது.
காவியங்களை கண்முன்னே தூரிகையால் கொண்டு வந்த ஓவிய மேதை மணியம் நூற்றாண்டு விழாவின் நெகிழ்வான தருணத்தில் அவருடைய வர்ணஜாலங்கள் அனைவர் மனதிலும் நிறைந்திருந்தது.
Leave a comment
Upload