லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
நிலைமொழி (முதல் சொல்) ஈற்றில் (கடைசியில்) உள்ள லகர (ல), ளகர (ள) மெய் எழுத்துக்கள் வேற்றுமைப் புணர்ச்சி மற்றும் அல்வழி புணர்ச்சியில், வருமொழி (அடுத்த சொல்) முதலில் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் முறையே றகர (ற) மெய்யாகவும், டகர (ட) மெய்யாகவும் அதனுடன் ஆய்தமாகவும் (ஃ) திரியும். அதாவது லகர மெய் றகர மெய்யாகவும், ளகரமெய் டகர மெய்யாகவும் திரியும் (மாறும்). இவை இரண்டும் ஆய்த எழுத்துடன் வரவும் வாய்ப்பு உள்ளது.
எடுத்துக்காட்டு
வில் + படை - விற் + படை - விற்படை
கல் + கோயில் - கற்கோயில்
சொல் + கள் - சொற்கள்
வாள் + பயிற்சி - வாட் + பயிற்சி - வாட்பயிற்சி
முள் + செடி - முட்செடி
எள் + பயிர் - எட்பயிர்
பல் + துளி - பஃறுளி (பஃறுளி ஆறு)
கள் + துளி - கஃடுளி
மேலே உள்ள புணர்ச்சிக்கான சூத்திரம் :
லள வேற்றுமையில் றடவும், அல்வழி
அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம், மெலி
மேவின் னணவும், இடைவரின் இயல்பும்,
ஆகும் இருவழி யானும் என்ப
நன்னூல் - 227
குறில்வழி லளத் தவ்வணையின் ஆய்தம்
ஆகவும் பெறும் அல்வழி யானே
நன்னூல் - 228
இந்த புணர்ச்சியில் இன்னும் சில வகையான விதிகள் உள்ளது. அவற்றினை நாம் இந்த காலத்தில் பயன்படுத்துவது இல்லை. அதனால் அவற்றினை பற்றி நாம் விரிவாக பார்க்கப் போவதில்லை என்று கூறிவிட்டார்.
அவரே தொடர்கிறார்.
நாம் மிகவும் இயல்பாக பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளில் உள்ள புணர்ச்சி விதிகளை இதுவரை பார்த்தோம். இன்னும் பல்வேறு விதமான புணர்ச்சி விதிகள் தமிழ் மொழியில் உள்ளன. அவை அனைத்தையும் நாம் பார்க்க வேண்டுமானால் இன்னும் பல வாரங்கள் கூட ஆகலாம். அது மட்டும் இல்லாமல் அந்த விதிகள் மிகவும் கடினமாகவும் இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த புணர்ச்சி விதிகளை நாம் இப்பொழுது பயன்படுத்தினோமானால் இப்போது நாம் பேசக்கூடிய பல்வேறு சொற்களை மாற்றி பேச வேண்டி வரும். அதனால் நாம் இத்துடன் புணர்ச்சி விதிகளை முடித்துக் கொள்வோம்.
இதுவரை நாம் பார்த்த புணர்ச்சி விதிகளை வைத்து கீழே உள்ள கேள்விகளுக்கு பதிலினைத் தாருங்கள் என்று கேள்விகளை அடுக்கினார் பரணீதரன் :
1. Tooth Paste என்று நாம் சொல்லும் பொருளுக்குரிய தமிழ் பெயர் என்ன ? அது எந்த வகை புணர்ச்சி?
2. பல்லினுடைய பன்மை சொல் என்ன ? அது எந்த வகை புணர்ச்சி.
3. நவாப் ஆண்ட தற்போது உள்ள தமிழ் மாவட்டங்களின் புணர்ச்சியை கூறுக.
4. திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த பெண்ணினுடைய பெயர்ப் புணர்ச்சியை கூறுக.
5. காவிரி புறப்படும் மலையின் தமிழ் பெயர் + பண்டைய காலங்களில் நாட்டை ஆள்பவரின் பெயர் ஆகியவற்றின் புணர்ச்சியை கூறுக.
6. வீரமாமுனிவர் இயேசுநாதரை பற்றி பாடிய பாடலின் புணர்ச்சியை கூறுக.
7. சைவக் குரவர்கள் முதல் மூவர் பாடிய பாடலின் தொகுப்பின் பெயர் புணர்ச்சியை கூறுக
8. இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் பிரதான சட்னி வகையில் உள்ள ஒரு முக்கிய பொருளின் புணர்ச்சியை கூறுக.
9. மதுரகவி ஆழ்வார் கூறிய பாடலின் பெயர் புணர்ச்சியை கூறுக.
10. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள முதலாவது நூலினுடைய பெயர்ப் புணர்ச்சியை கூறுக
11. கல்கியின் அருண்மொழி வர்மர் பற்றிய புதினத்தில் உள்ள நகைச்சுவை கதாபாத்திரத்தின் பெயர் புணர்ச்சி கூறுக.
ஒரு சின்ன கதையொன்று சொல்லட்டா என்று பரணீ கூற கரும்பு தின்னக் கூலியா என்று தயாராகிவிட்டேன்.
அந்த கதை அவர் விளக்கிவரும் தமிழிலக்கணத்தின் அடுத்த பகுதிக்கு ஒரு துப்பு என்று பீடிகை போடுகிறார்.
இது திருமங்கை ஆழ்வாரை பற்றிய கிராமங்களில் பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லக் கூடிய கதை. இதற்கு வரலாறு உண்டா இல்லையா என்பதை நாம் ஆராயப் போவதில்லை. இந்த கதையில் உள்ள அடுத்த பகுதிக்கு முக்கியமான பகுதிகளை மட்டும் நாம் ஆராய்வோம்.
திருமங்கை ஆழ்வாரின் கதை பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில் தெரியாத சுவாரசியமான சில விஷயங்களை பற்றி மட்டும் நாம் இங்கே பார்ப்போம். திருவரங்க மதில் சுவரினை திருமங்கை ஆழ்வார் கட்டி வருகையில் அவருக்கு பணமுடை ஏற்பட்டது. அப்போது கமலாலயத்தில் தங்கத்தால் ஆன ஒரு சிலை உள்ளதாகவும் அதனை விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்றும் ஆழ்வாருக்குத் தெரிய வருகிறது. அதனால் அவர் கமலாலயம் செல்கிறார். அங்கே அந்த குளத்தின் ஆழத்தில் அந்த தங்க சிலை இருக்கிறது. அந்த குளத்திற்குள் சென்று அந்த சிலையை எடுத்து வருவது மிகவும் கடினமான காரியம். அதனால் அந்த குளத்தை வற்ற வைத்தால் தான் சிலையை எடுக்க முடியும் என்று ஆழ்வார் முடிவு செய்து அந்த சிலையினை செய்த சிற்பியின் வீட்டினை கண்டுபிடித்து அவர் வீட்டின் அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்குகிறார். சிறிது நாட்களுக்கு பிறகு தன்னுடைய சீடர்களுடன் தனது குரலை உயர்த்தி பேசுகிறார். அப்போது கமலாலயத்தில் உள்ள அந்த சிலை களவு போய்விட்டதாக அவர் கூறுகிறார். அதைக் கேட்டு அந்த சிற்பியோ “அது வாளைப் பெருத்த ஊர். அதனால் அது சாத்தியம்தான்” என்று கூறுகிறார். வாளை என்றால் வாளை மீனை குறிக்கும். வாளை மீனுக்குரிய தன்மை என்னவென்றால் ஊற்றுக் கண்ணிற்குள் சென்று தண்ணீர் சுரக்கும் ஊற்று கண்களை அடைத்துக் கொள்ளும். அதனால் குளங்கள் சீக்கிரம் வற்றிப் போகும். இதை தெரிந்து கொண்டு ஆழ்வார் வாளை மீனை வைத்து தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்கிறார். இந்தச் சிலையின் பணத்தை வைத்து திருவரங்க மதில் சுவரின் ஒரு பகுதியை முடிக்கிறார். அதன் பிறகு மீண்டும் பணமுடை வரவே என்ன செய்யலாம் என்று தன்னுடைய சீடர்களிடம் கேட்கிறார். அதற்கு சீடர்களும் “நாகைப்பட்டினத்தில் வேறொரு தங்கச் சிலை இருக்கிறது. அது போன சிலையை விட மிகவும் பெரியது. அதை வைத்து நாம் நிறைய பணம் ஈட்ட முடியும்” என்று கூறுகிறார்கள்.
இதைக் கேட்டு ஆழ்வாரும் நாகப்பட்டினம் சென்று பார்க்கும் பொழுது அந்த சிலைக்கு கீழே ஒரு இயந்திர சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. அவற்றில் கூர்மையான ஆயுதங்கள் சொருகப்பட்டிருக்கிறது. யாரேனும் அருகில் சென்றால் அவர்களின் உடல்நிலை அந்த ஆயுதங்கள் வெட்டிவிடும். இதை பார்த்த ஆழ்வாரும் இந்த சிலையினைச் செய்த சிற்பியின் வீட்டிற்கு அருகே சென்று முன்னே நடந்ததை போலவே இப்பொழுதும் பேசுகிறார். அதைக் கேட்ட சிற்பியோ “ஆமாம், அது வாழைப் பெருத்த ஊர். அதனால் அப்படி நடந்திருக்கலாம்” என்று கூறுகிறார். இதைக் கேட்ட ஆழ்வாரோ நிறைய வாழை மரங்களை வெட்டி அவற்றினை அந்த இயந்திரத்திற்குள் செலுத்தி அந்த இயந்திரம் செயல்படாமல் தடுக்கிறார். அதன் பிறகு அந்த சிலையினை எடுத்து அதன் மூலமாக பணம் ஈட்டி திருவரங்க மதில் சுவரினை முழுவதுமாக முடிக்கிறார்.
இந்த கதையில் உள்ள இரண்டு சொற்களை பார்த்தால் அடுத்து நாம் இலக்கணத்தில் எந்த பகுதியை பார்க்க போகிறோம் என்பது உங்களுக்கு புரிந்துவிடும். அந்த பகுதியை அடுத்த வாரம் பார்ப்போம் என்றவாரே பரணீதரன் விடை பெற்றார்.
Leave a comment
Upload