சனாதனம் என்றால் என்ன என்பதைப் பற்றிக் கூறினீர்கள். அப்படியானால் தர்மம் என்றால் என்ன? என்ற இயற்கையான கேள்வி சங்கரனிடம் வைக்க தர்ம அடி கொடுத்துவிட்டார்.
இதோ அவரே சொல்வது.
வடமொழிச் சொல்லான தர்மம் என்பதற்கு ‘தாங்குவது’ என்று பொருள். எதனால் இந்த ப்ரபஞ்சம் இந்த உலகம் இந்த இயற்கை சீராக இயங்குகிறதோ அது தான் தர்மம்.
எடுத்துக் காட்டாக வீசிக் கொண்டிருப்பது காற்று. அது வீசாமல் நின்று விட்டால் உயிர்கள் எல்லாம் தவித்துப் போகும். குளிர்மை நீரின் இயல்பு. எத்தனை சூடாக்கினாலும் நீரை விட்டால் நெருப்பு அணையும். ஒரு வெண்டை விதையிலிருந்து வெண்டை மட்டுமே முளைக்கிறது. ஆட்டிற்கு அணில் குஞ்சு பிறப்பதில்லை. இவ்வாறு இயற்கைக்கும் பல நியதிகள் உள்ளன. அவை அவற்றின் தர்மம்.
ஆனால், மனிதனுக்கு ஆராய்ந்து அறியும் திறனையும் மற்ற படைப்புகளை கட்டி ஆளும் வலிமையையும் தந்ததால், அவனுக்கு உள்ள தர்மங்களை அவனே படைக்க முற்பட்டான். அவ்வித சுதந்திரம் ஆபத்தானது என்பதால், பண்டைக்காலத்தில் பெரியோர்கள் எல்லா மனிதர்களுக்கும் எல்லாக் காலத்தும் பொருந்தும் தர்மங்களை ஏற்படுத்தித் தந்தனர். அவ்விதம் பொதுவான தர்மங்கள் பத்து என்று மனு ஸ்மிருதி சொல்லும்.
த்ருதி க்ஷமா தமோஸ்தேயம் செளச மிந்த்ரிய நிக்ரஹ: |
தீர்வித்யா ஸத்யமக்ரோதோ தசகம் தர்ம லக்ஷணம் ||
- திட சித்தம்,
- மன்னிக்கும் மனப்பாங்கு (பொறுமை),
- புலனடக்கம்,
- பிறர் பொருள் நயவாமை,
- தூய்மை,
- தன்னடக்கம்,
- விவேகம்,
- அறிவு / ஞானம் ,
- உண்மை,
- கோபப்படாமை
என்ற பத்தும் தர்மம் என்பதன் இலக்கணம் என்று சொல்லப்படும்.
தர்மம் என்ற சொல்லும் தமிழில் அறம் என்ற சொல் பண்டைக் காலம் முதல் வழங்கி வருகிறது. ஆங்கிலத்தில் இதற்கு இணையான சொல் இல்லை. கிட்டத்தில் வருவது righteousness என்ற சொல்லாகும். ஆனால், இது மத நம்பிக்கையையைச் சார்ந்துவரும் சொல்லாகும். ஆனால் நமது சனாதன தர்மம் மனித குலத்தின் பாதுகாப்பை வளத்தை மனிதப் பிறவியின் தனித்துவத்தைக் காக்கும் கட்டுப்பாடாக விளங்குகிறது.
இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த நமது தமிழாகட்டும், சமஸ்கிருதமாகட்டும், எந்த ஒரு நூலும் சரி வர அன்னிய மொழியான ஆங்கிலத்தில் பெயர்க்க முடியாது என்பது. அதிலும், மொழி பெயற்பவரின் உள்நோக்கம் மிக முக்கியமானது. ஏனெனில், நமது இவ்விரு மொழி நூல்களும் உயிருள்ளவை.
தர்மத்தின் வழியில் செல்பவன் எந்த தெய்வத்தையும் வணங்கலாம், எந்த மதத்தையும் பின்பற்றலாம் அல்லது மதமும் தெய்வமும் இல்லை என்றும் இருந்துவிடலாம். அப்போதும் இந்த பத்து குணங்களும் அவனுக்குப் பொருந்தும். தர்மத்தைப் பின்பற்றுபவன் மதவாதியாக இருக்க வேண்டியதில்லை, அவன் நல்ல மனிதனாக மட்டும் இருந்தால் போதும். ஆனால் தர்மத்தைப் பின்பற்றாவிட்டால் அந்த மானிடம் அழிந்துபோகும்.
இந்த பத்து குணங்களும் எந்தக் காலத்தும் எந்த நாட்டிற்கும் எந்தவித மக்களுக்கும் பொருந்தும். இவற்றில் சிலவற்றைப் புறம் தள்ளிவிட்டு வாழ, ஆள நினைத்தவர்கள் அழிந்துபோனார்கள். அவர்கள் சென்ற, செல்ல நினைத்த பாதைகளும் அழிந்து போயின. வரலாற்றில் பல செல்வந்தர்கள், அரசர்கள் இந்தப் பொது தர்மங்களை மீறியதால் வரலாற்றில் தோற்றவர்களாகவே சொல்லப் படுகிறார்கள்.
வரலாற்றில் பதியப் பட்ட நாகரீகங்கள் எல்லாம் இவற்றைச் சொல்லி வந்தன. அவற்றைல் சிலவற்றை மீறும்போது, மறக்கும்போது அந்த நாகரீகங்கள் அழிந்து போயின. இந்தப் பத்தையும் மனித வாழ்க்கையின் கரைகளாகச் சொன்ன பாரத நாகரீகம் இன்றும் வாழ்கிறது மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அதனாலேயே இந்த தர்மம் என்பது சனாதனமாக இருக்கிறது.
மேலே சொன்ன பத்து குணங்களையும் இவ்வாறு பட்டியலிட்டுச் சொன்னால் மட்டும் அது மக்களை அதிலும் சிறுவர்களை, இளைஞர்களைச் சென்று சேராது. அதனால் அவற்றை விளக்கிச் சொல்லும் சம்பவங்களைக் கோர்த்து தர்ம வழியில் நடந்தவரைப் போற்றி, விலகியவரைத் தாழ்த்தி தர்மமே வெல்லும், அதுவே நம்மைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம் என்பதைக் கதைகளாகச் சொன்னது பாரத கலாசாரம். கதை என்பது வெறும் பொழுதுபோக்காக, வாழ்வாதாரமாக இல்லாமல் ஒரு தர்மத்தை அறத்தை வலியுறுத்துவதாக அமைந்தது சனாதன தர்மம்.
இன்றைய சட்டங்களை இயற்ற ஒரு கூட்டமும், அதை நடைமுறைப் படுத்த ஒரு கூட்டமும், அவற்றை மீறியவர்க்கு தண்டனை கொடுக்க ஒரு கூட்டம் என்று ஒரு பெரும் கட்டமைப்பு தேவைப் பட்டது. தர்மத்தை நடைமுறைப் படுத்த இவ்விதம் பெரும் கட்டமைப்பு தேவைப் படவில்லை. சமூக அமைப்பே அதை நடைமுறைப் படுத்துவதாகவும், அத்து மீறல்களைக் கண்டிப்பதாகவும் அமைந்தது.
அடுத்த வாரம் இன்னுமொரு கேள்விக்கு பதிலுடன் தொடருவோம்……..
Leave a comment
Upload