தற்போது நடப்பது தக்ஷிணாயண காலம். அப்படி என்றாலே பாரதம் எங்கும் விழாக்காலங்கள் பூத்துக் குலுங்கும்.
மங்கல நிகழ்வுகள், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, வினாயக சதுர்த்தி நவராத்ரி, தீபாவளி என்று வரிசையாக பண்டிகைகள். ஒருவரையொருவர் அவர்களது வீட்டிற்கு அழைத்தல், பொது இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்து அதில் ஆடவர் பெண்டிர், சிறுவ சிறுமியர்கள் என்று கூடிக் கொண்டாடுவது இயற்கையே.
எங்கும் ஒரு வித நேர்மறை எண்ணங்களின் பரிமாற்றம், அதை பிரதிபலிக்கும் விதமாக பண்டங்கள் பரிமாற்றம் என்று குறைவில்லாதிருக்கும்.
அங்கு தான் நமது விழிப்புணர்வு சற்றே உயர்ந்திடுத்தல் வேண்டும் என்று நாம் வேண்டுகிறோம்.
மேற்கண்ட படத்தைப் பார்த்து யூகித்திருப்பீர்கள் நான் என்ன கூற வருகிறேன் என்று.
விழாக்கு வந்திருந்தவர்க்கு, இல்லத்தில் நடைபெறும் விழாக்களாகட்டும், மண்டபங்களில் நடைபெறும் விழாக்களாகட்டும் சொல்ல வரும் செய்தி இதுதான். அதாவது, வந்தவரை தாம்பூலம் கொடுத்து இன்முகத்துடன் வழியனுப்பி வைக்கிறோம்.
அந்த தாம்பூலத்தில் இருப்பவை மஞ்சள் பொடி, குங்குமம், பாக்கு, ரவிக்கைத் துணி, கண்ணாடி வளையல்கள் முக்கியமாக இருக்கும். அவைகளினூடே ஏற்படும் அழிவுகளைத் தான் இங்கு கூறப்போகிறேன்.
இருபது வருடங்களாகவே கண் கவர் பிளாஸ்டிக் சாஷேக்களில் சிறு அளவில் மஞ்சள் பொடி, குங்குமம், பாக்கு அடைபட்டு வினியோகிக்கப்பட ஆரம்பித்து விட்டன.
நாமும் அதை ரொம்ப கிளீனா இருக்கு, இந்த பொடிகள் எங்குமே சிந்தாது இருக்குமே என்று தயங்காது உபயோகிக்கவும் ஆரம்பித்தும் விட்டோம்.
இந்த சின்ன பாக்கெட்டுகளை என்றேனும் பிரித்து தான் பார்த்ததுண்டா? அதன் தரம், அளவுகளைத் தான் சற்றேனும் பார்த்ததுண்டா?
இல்லையே!!!
தயாரிப்பாளர்களுக்கென்ன! ரொம்ப சந்தோஷமாப் போச்சு. அதில் ஆர்டிஃபிஷியல் அயிட்டங்களும் கலர் இத்யாதிகளும் தான் அடைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கும் தெரியும், இந்த பாக்கெட்டுகள் ஒரு சடங்கு முறைக்காகவே உபயோகமாகிறதே ஒழிய, இதனைப் பெற்றவர் என்றும் இந்த பாக்கெட்டுகளைப் பிரித்து வாயில் போட்டு அனுபவிக்கப்போவதில்லை என்று.
சரி, மனிதர்கள் உபயோகம் செய்வதில்லை. பிழைத்தார்கள். பல குடும்பங்களில் இந்த பாக்கெட்டுகள் ரீயூஸ் செய்கிறார்கள். நவராத்ரி ரவிக்கைத் துணி போல சுத்தி சுத்தி வருகிறதே இவைகள் என்று சலித்துப் போவாள் என் மனைவி. ஏன்னா! இது மாதிரி வரும் தாம்பூல இத்யாதிகள் உபயோகப்படுத்தவே முடியாது.
அப்படியும், பழயதாகிவிட்ட பாக்கெட்டுகள் குப்பை கூளங்களுக்குச் செல்ல சுற்றுப்புற சூழல் கெட ஆரம்பிக்கிறது.
இந்த விழிப்புணர்வு கொடுத்தாகிவிட்டது என்று அகன்றுவிடவில்லை நாம். இதற்கு உரித்தான உண்மையான மாற்று முறைகளையும் இங்கு கூறுகிறது கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ.
அதாவது, வரும் பெண்டிர்களுக்கு இல்லத்திலோ மண்டபத்திலோ நிறப்பட்டிடுக்கும் மஞ்சள் குங்கும சிமிழ்களைக் காண்பிக்கலாம். இதன் மூலம் பிளாஸ்டிக் உபயோகம் நிறுத்தப்படும் நிச்சயமாய்.
சிறு துண்டுகளாக்கப்பட்ட பாக்கு கொடுங்கள்.
கண்ணாடி வளையல்களை செலோஃபன் பேப்பரில் சுற்றித்தருவதைத் தவிர்க்கலாம். தற்போதெல்லாம் உணவைத்தேடித் தெருக்களில் அலையும் ஆடு மாடுகள் அவற்றை விழுங்கி அவற்றின் இறைச்சியை உண்போருக்கு கெடுதல் வருகிறதே. சுற்றுப்புற சூழலும் கெடுகிறதே.
சிந்தெடிக் ரவிக்கைத் துண்டுகளுக்கு பதிலாய் காட்டன் ரவிக்கைத் துண்டுகளாய்க் கொடுக்கலாம். சொல்லப்போனால் இது மாதிரி பண்டிகைத் தாம்பூலத்தில் வரும் ரவிக்கைத் துணி பிட்டுகள் உபயோகப்படுத்துபவையாக அதாவது, காஸ்ட்லியாக யாரும் பெரும்பாலும் தருவதில்லை.
இந்த தாம்பூலம் கொடுப்பதே ஒருவருக்கொருவரிடையே நல்லதொரு எனர்ஜியை பரஸ்பரம் பரிமாரிக்கொள்வதே என்றால் இங்கு சல்லீசா கண்ணுக்கெதிரிலேயே பகல் கொள்ளையைப் போலே இந்த பிளாஸ்டிக் பரிமாற்றம் தானே நடக்கிறது.
மாறலாமே! மாறிக்காண்பிப்போமே!!!
Leave a comment
Upload